Published : 26 Dec 2015 12:32 PM
Last Updated : 26 Dec 2015 12:32 PM
சென்னைக்கு மிக அருகேயுள்ள செய்யூரில் 4,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நவீன அனல் மின்நிலையத்துக்கான ஏலம், இன்னும் மூன்று மாதங்களில் தொடங்கும் என்று மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நவம்பர் 24-ம் தேதி அறிவித்திருந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யூரில் அன்றைக்குப் பதிவான மழை 140 மி.மீ. இது வழக்கத்துக்கு மாறானதல்ல.
அதற்கு முன்பாகவே மூன்று முறை இங்கே பெய்திருந்த மழையால், கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்குச் செய்யூரின் ஏரிகளில் நீர் நிறைந்திருந்தது. ஆனால், வெடால் பகுதியைச் சேர்ந்த விவசாயியும் நகர்மன்ற உறுப்பினருமான ஆர். ரவிச்சந்திரனைப் பொறுத்தவரை இந்த மழை போதுமானதல்ல. “பாசனக் கால்வாய்களுக்கு நீர் திறந்து விடுவதற்கு இன்னும் 1.5 அடி தண்ணீர் தேவை. இன்னும் ஒன்றிரண்டு முறை மழை பெய்தால், தேவைப்படும் நீர் கிடைத்துவிடும்” என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.
பொய்க்காத நம்பிக்கை
ரவிச்சந்திரனின் நம்பிக்கை பொய்க்கவில்லை. செய்யூரில் டிசம்பர் மாதம் 1-ம் தேதி பெய்த மழையின் அளவு 380 மி.மீ. அப்போது மதகுகளில் திறந்துவிடப்பட்ட உபரி நீர், வயல்களில் வெள்ளமாகப் பாய்ந்தது. இதேபோலப் பெய்த கனமழைதான், சென்னையைப் புரட்டிப் போட்டது. சென்னை நகரமே நீர்நிலைகளின் மீதும் நீர் ஆதாரங்களைத் தடுத்தும் உருவாக்கப்பட்டிருந்ததுதான், இதற்கு அடிப்படைக் காரணம். சென்னை சாலைகள், மேம்பாலங்கள், விமான நிலையம், வீடுகளில் வெள்ளம் தேங்கி நின்றது.
அதேநேரம் இன்றைய செய்யூரின் நீர்நிலைகள் பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல், சீரமைக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன. செய்யூரில் கால்வாய், ஓடைகள், ஏரிகள், குளங்கள், நெல் வயல்கள் மற்றும் உப்பங்கழிகளில் வெள்ளம் தேங்கி நின்றது.
ஒரு நூற்றாண்டுக்கு முன் சென்னை இருந்த நிலையில், இன்றைக்கு இருக்கும் கடலோரத் தாலுகாதான் செய்யூர். மேற்கேயுள்ள தாழ்வான மலைப் பகுதிகளும் கடலையும் இருபுறமும் கொண்ட இந்த நிலப்பரப்பில் ஏராளமான தாழ்நிலப் பகுதிகள் உள்ளன. இவற்றில் கிழக்கு நோக்கிப் பாயும் நீரைத் தேக்கி வைப்பதற்காக ஏரிகள், ஊருணிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறை பதிவேட்டின்படி 16,200 ஏக்கர் நிலத்துக்குப் பாசன வசதி தரும் 81 ஏரிகள் உள்ளன. இவற்றில் 10-ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் காலத்தில் வடவமுக அக்னீஸ்வரர் கோயில் கட்டப்பட்ட நேரத்தில் உருவாக்கப்பட்ட பெருமை கொண்டது வெடால் ஏரி.
மழைக்கு வரவேற்பு
மொத்தமுள்ள ஏரிகளில், 70 ஏரிகள் ஒரே நீர்ப்பிடிப்புப் பகுதியில் அமைந்துள்ளன. இவை அனைத்தும் ஒதியூர் கழிவேலி, அலையாத்திக் காடுகள் நிறைந்த முதலியார்குப்பம் முகத்துவாரம் வழியாகக் கடலில் கலக்கின்றன. 10 கி.மீ. நீளமும் 5 கி.மீ. அகலமும் கொண்ட இந்த நீர்ப்பாதையின் பரப்பு மிகப் பெரியது, மிகவும் வளமானதும்கூட. இங்குள்ள கடற்பாசிப் படுகைகள் மழைக்காடுகள் அளவுக்கு மிகப் பெரிய அளவில் கார்பனைக் கிரகித்துக்கொள்கின்றன. இங்குள்ள நீர்நிலைகள், மணற் குன்றுகள், சதுப்பு நிலங்கள் அனைத்தும் வெள்ளம் வரும்போதும், வறட்சியின்போதும் இயற்கை உறிஞ்சிகளாகச் செயல்பட்டு, இந்தப் பகுதிகளைப் பாதுகாக்கின்றன. இவை மழையை வரவேற்றுக் கொண்டாடுபவையாக உள்ளன.
ஆனால், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலின் கனவு நனவாகிச் செய்யூர் அனல் மின்நிலையம் அமையும் பட்சத்தில், இது எல்லாமே தலைகீழாக மாறிவிடும். ஒதியூர் கழிவேலி உள்ளிட்ட 800 ஏக்கர் நிலப்பரப்பில்தான் புதிய அனல் மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் முக்கிய வடிகாலான கெளுத்தி ஓடையிலிருந்து உப்பங்கழிகளுக்குத் தண்ணீர் வந்துசேரும் இடத்தில்தான், மின்நிலையம் அமையவுள்ளது. மின் நிலையம் அமையத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், தற்போது மழைநீரில் முழுமையாக மூழ்கியுள்ளது. எதிர்காலத்தில் செய்யூர் மின்நிலையம் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், மழைநீர் வேறு பகுதிகளுக்குத் திருப்பிவிடப்பட வேண்டும்.
அறிக்கைப் பொய்கள்
செய்யூர் அனல் மின்நிலையம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையில் இந்தத் திட்டம் நிராகரிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் திட்டப் பகுதியின் 3 கி.மீ. தொலைவுக்குள் எந்த ஈரநிலமோ, நீர்நிலைகளோ, ஓடைகளோ இல்லை என்றும், 25 வருடங்களுக்கு ஒருமுறைதான் அதிகபட்சமாக 280 மி.மீ. மழை பொழிவு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், உண்மை நிலை வேறு. மின்நிலையத் திட்டத்தின் தெற்குப் பகுதியிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ளது வெடால் ஏரி. மின்நிலையத்தின் கிழக்கு எல்லையாக இருப்பது கெளுத்தி ஓடை; மின்நிலையம் அமையவுள்ள நிலப்பரப்பு 160 ஏக்கர் நீர்நிலைகளை உள்ளடக்கியுள்ளது. அது மட்டுமில்லாமல் கடந்த டிசம்பர் 1-ம் தேதி பதிவான 380 மி.மீ. மழை, 100 ஆண்டுகளுக்கு முன் பெய்த அதிகபட்ச மழை அளவைவிடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரழிவுக்கு வரவேற்பு
இப்படித் தவறான அனுமானங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளின் விளைவு பேரழிவாகவே அமையும். ஆனால், நம்முடைய அரசோ மிகப் பெரிய பேரழிவை உருவாக்குவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளது. செய்யூரில் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை சமர்ப்பித்தது, பிரபல அரசு அமைப்புதான்.
100 சதவீதம் அரசால் நடத்தப்படும் இந்த நிறுவனம் சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காக மோசடியான அறிக்கைகளை அளித்துள்ளது; சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டு குழு நிபுணர்கள் சுற்றுச்சூழல் சார்ந்த அனுமதியை வழங்கவும் பரிந்துரை செய்துள்ளனர்; தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தொழில்நுட்ப இணைக் குழு, கட்டுமான உரிமத்தை வழங்குவதற்குப் பரிந்துரை செய்துள்ளது. அது தொடர்பாக எந்தக் கேள்வியும் எழுப்பாமல், மாசுக் கட்டுப்பாடு வாரியமும் அனுமதி அளித்துள்ளது.
இப்படிச் சட்ட நடைமுறையைத் திருப்திப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் அறிவியல் ஆய்வுகள் ஒரு சடங்காகவும், சுற்றுச்சூழல் தொடர்பான முடிவெடுத்தல்கள் கேலிக்கூத்தாகவும் மாறிவிட்டன. இந்தப் பின்னணியில் மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை தூக்கத்திலிருந்து விழித்தெழச் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லையென்றால், செய்யூர் அனல் மின்நிலையத்தைப் பற்றிய அவருடைய கனவு, கெட்ட கனவாக மாறிவிடும்.
- கட்டுரையாளர், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்,
தொடர்புக்கு: nity682@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT