Published : 21 Nov 2015 02:22 PM
Last Updated : 21 Nov 2015 02:22 PM
ஆண்டுதோறும் பெய்யும் மழையில் 40 சதவீதத்துக்கு மேல் கடலில் கலக்கும், 35 சதவீதம் வெயிலில் ஆவியாகும், 14 சதவீதம் மண்ணால் உறிஞ்சப்படும், 10 சதவீதம் மண்ணின் ஈரப்பதத்துக்கு உதவும் என்கின்றனர் நிபுணர்கள். கடந்த 2005-ம் ஆண்டு பெய்த மழையின் அளவைவிட, தற்போது பெய்திருக்கும் மழையின் அளவு குறைவாக இருந்தாலும் அன்றைக்கு ஆனதைவிட அதிக சேதத்தை பயிர்கள் சந்தித்து இருப்பதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
விவசாயிகள் எத்தகைய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன்மூலம் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்கலாம் என்று பகிர்ந்துகொண்டார் முன்னோடி இயற்கை விவசாயியும், புளியங்குடி விவசாய சேவா நிலைய செயலருமான கோமதிநாயகம்:
நீர் வழிப்பாதைகள் மீட்பு
ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தற்போது பெய்ததைவிட அதிகமாக மழை பெய்திருக்கிறது. அப்போதெல்லாம் இதுபோன்ற பயிர்ச் சேதம் ஏற்பட்டதில்லை. அதற்குக் காரணம், அந்தக் காலத்தில் ஆறுகளை ஒட்டி நீர்வழிப் பாதைகள் (உபரிநீர் கால்வாய்கள்) இருந்தன. அவற்றின் வழியாக ஆற்று வெள்ளம் வடிந்துவிடும். ஆனால், இன்றைக்கு அத்தகைய நீர்வழிப் பாதைகளை காணமுடிவதில்லை. மறைந்துபோன நீர்வழிப் பாதைகளை, மீண்டும் ஆறுகளை ஒட்டி உண்டாக்க வேண்டும்.
மணல்வாரியின் பயன்
கரையை உடைக்காமல் தண்ணீரை வெளியேற்றும் வகையில், மதகைப் போன்று தண்ணீரைக் கட்டுப்படுத்தும் அமைப்பு மணல்வாரி. இதன் பயன்பாட்டை நாம் மறந்துவிட்டோம். இந்த மணல்வாரி, அணையின் கரையை உடைக்காமல் உபரி நீரை பாதுகாப்புடன் வெளியேற்றும் அமைப்பு. இவற்றை மீண்டும் உருவாக்க வேண்டும். அப்படிக் கொண்டுவந்தால், வெள்ளத்திலிருந்து பயிர்கள் கணிசமாகக் காப்பாற்றப்படும்.
விதைத் தேர்வு முக்கியம்
மாதம் மும்மாரி பெய்த காலத்தில் அதற்கேற்ப விதை நெல்லைத் தேர்ந்தெடுத்து விவசாயம் செய்தவர்கள் நம் முன்னோர். நம்முடைய பாரம்பரிய விதை நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்துக்கு சிறப்பான விளைச்சலை கொடுக்கக்கூடியவை. உதாரணத்துக்கு மடுமுழுங்கி எனப்படும் விதை நெல், வெள்ளத்தில் மூழ்கினாலும் விளைச்சலுக்குக் குறைவிருக்காது. புழுதிவிரட்டி என்னும் நெல் ரகம், கடும் வறட்சியிலும் காற்றிலிருக்கும் ஈரப்பதத்தைக் கொண்டே 40 நாட்களுக்கு சமாளித்து வளரும்.
இதுபோன்ற பல சிறப்புகள் நம்முடைய பாரம்பரிய விதை நெல்களுக்கே இருக்கின்றன. எனவே, விவசாயிகள் ஐ.ஆர். 8, ஐ.ஆர். 20 போன்ற இயற்கை இடர்களைச் சமாளிக்க முடியாத ரகங்களை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. எல்லா இடங்களிலும் பாரம்பரிய விதை வங்கிகளையும் உருவாக்க வேண்டும்.
மணல் பாதுகாப்பு அவசியம்
கடந்த 10 ஆண்டுகளில்தான் வெள்ளத்தால் பயிர்கள் சேதமாவது அதிகம் நடக்கிறது. ஆற்று மணலை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்ததும் இந்த காலகட்டத்தில்தான். வடிகட்டியாகவும், நீரை உறிஞ்சி சேமிக்கவும் என இரண்டு வழிகளில் நமக்கு பலன் அளிக்கும் மணலைப் பாதுகாப்பது அவசியம். மணலைப் பாதுகாக்காவிட்டால், சாதாரண மழையும் பெருவெள்ளச் சேதத்தை உண்டாக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. இது மிக முக்கியமானது.
கோமதிநாயகம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT