Published : 14 Nov 2015 12:49 PM
Last Updated : 14 Nov 2015 12:49 PM

வீட்டுக்குள் ஓர் இயற்கை பண்ணை இயக்கம்

அந்தக் காலத்தில் தங்களுடைய தோட்டத்தில் விளையும் காய்கறிகளின் அன்றைய அறுவடையை, பக்கத்தில் உள்ள சந்தைக்கு எடுத்துவந்து விவசாயிகளே பெரும்பாலும் விற்றார்கள். மலிவான விலையில், தரமான காய்கள் உத்தரவாதமாகக் கிடைக்கும். இன்றைய நிலைமை அப்படியில்லை. அதேநேரம் பூச்சிக்கொல்லியோ, ரசாயன எச்சமோ இல்லாத, புதிதாகப் பறித்த காய்கறிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?

இயற்கை விவசாயிகளின் பண்ணைகளுக்கே நேரடியாகச் சென்று காய்கறிகளைக் கொள்முதல் செய்து, ஆர்டர் செய்பவர்களுக்கு வீட்டிலேயே வைத்துத் தேவையான அளவுகளில் பேக் செய்து அனுப்புகிறார்கள் கோவையைச் சேர்ந்த ஐந்து பேர்.

ஐவர் படை

மின்னஞ்சலில் வந்த காய்கறி ஆர்டர்களைப் பட்டியலிடுகிறார் ஸ்ரீதேவி; காய்கறிகளை எடுத்துவந்து தருகிறார் சூரஜ்; எடைபோடுகிறார் ரத்தினக் குமார்; வேலையை ஒருங்கிணைக்கிறார் ரமேஷ் சந்திரன்; இவர்கள் அனைவருக்கும் உதவுகிறார் கவிதா.

கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மனாம்பாளையத்தில் உள்ளது ஸ்ரீதேவி-ரமேஷ் சந்திரன் தம்பதியின் வீடு. இருவரும் அமெரிக்காவில் பட்டமேற்படிப்பு முடித்தவர்கள். அமெரிக்க இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிப் போதிய வருமானம் இருந்தும், மனநிறைவு மட்டும் ஏனோ அவர்களுக்குத் தள்ளித்தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. தமிழகம் திரும்பிக் கடந்த ஆறு மாதங்களாக ‘பயோ பேசிக்ஸ்' என்ற பெயரில் மனதுக்குப் பிடித்த இயற்கை வேளாண் விற்பனைப் பணியில் இறங்கியிருக்கிறார்கள்.

இயற்கை ஆராய்ச்சி

இயற்கை தன்னை ஈர்த்த கதையைப் பகிர்ந்துகொள்கிறார் ரமேஷ் சந்திரன்:

‘என்னோட ஊர் திருவனந்தபுரம். திருவனந்தபுரத்துல பி.டெக், அமெரிக்கால எம்.பி.ஏ. முடிச்சுட்டு, பிரபல இன்சூரன்ஸ் கம்பெனில ஆறு வருஷம் ஃபண்ட் மேனேஜராக இருந்தேன். அப்புறம் மும்பைல மூணு வருஷம், ஒரு நெதர்லாந்து கார்ப்பரேட் கம்பெனில 3 வருஷம்னு சுத்திசுத்தி வேலை பார்த்தேன். என் மனைவி தேவிக்கும் திருவனந்தபுரம்தான் சொந்த ஊர். பி.ஏ. பொருளாதாரம், அமெரிக்காவுல எம்.எஸ். சோஷியாலஜி முடிச்சுட்டு வேலை பார்த்துக்கிட்டிருந்தாங்க.

இரண்டு பேருமே 2007-ல மும்பை வந்துட்டோம். என் மனைவிக்கு இயற்கை உணவுல நீண்ட காலமா ஈடுபாடு. அமெரிக்காவில் செயற்கை உணவு, ஃபாஸ்ட் புட் அது இதுன்னு சாப்பிட்டு வெறும் சதைப்பிண்டமா சுத்துற நிறைய பேரைப் பார்த்து வருத்தப்பட்டிருக்கோம். இந்தப் பிரச்சினைக்கான வேரைத் தேடிப் போனப்ப, உணவுதான் எல்லாத்துக்கும் காரணம். அதில் கலக்கும் வேதிப் பொருட்கள் ஏற்படுத்தும் பாதிப்பு பத்தி ஆராய ஆரம்பிச்ச தேவி, அப்புறம் அதுலயே மூழ்கிட்டார்.

அப்போதான் நெல் ஜெயராமன் உள்ளிட்ட இயற்கை உணவு ஆர்வலர்களின் தொடர்பு கிடைச்சது. பணத்துக்குப் பின்னாடி ஓடுறத நிறுத்திட்டு, சமூக ஆரோக்கியத்தைக் காப்பாத்த வாழலாமேன்னு தோணுச்சு. 2013-ல கோயமுத்தூர் வந்தோம்.

கூடுதல் கவனம்

இங்கேயிருந்த ஏராளமான விவசாயிகள், தன்னார்வ அமைப்புகளைச் சந்திச்சோம். இங்கே இயற்கை விவசாயம் செய்ற நிறைய பேர், விளைவிச்ச காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் திண்டாடினாங்க. இயற்கை வேளாண் விளைச்சலுக்கு நல்ல வரவேற்பும் இருந்துச்சு. இந்த இரண்டுக்கும் ஏன் பாலமா இருக்கக் கூடாதுன்னு ஆறு மாசத்துக்கு முன்னாடி ‘பயோ பேசிக்ஸ்' நிறுவனத்தை ஆரம்பிச்சோம்.

இயற்கை வேளாண் காய்கறிகளைப் பண்ணைகளுக்கே சென்று பார்ப்பது, தொடர்ந்து அவற்றைக் கண்காணிச்சு டாக்குமெண்ட் பண்றது, உரிய தரத்தோட இருக்கிறதை உறுதிபடுத்திக்கிறதுன்னு பார்த்துப் பார்த்துத்தான் காய்கறிகளை வாங்குறோம்.

எங்களுடைய வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப், மின்னஞ்சலுக்கு ஆர்டர்களை அனுப்புவாங்க. செவ்வாய்க்கிழமை பேக் செய்து விநியோகிப்போம். வராந்தோறும் 60-க்கும் குறையாத வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர் வருது. 60 இயற்கை விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை வாங்குறோம்" என்றார் ரமேஷ் சந்திரன்.

எப்படி நம்புவது?

‘இந்தக் காய்கறிகள், மளிகை பொருட்கள் ரசாயனக் கலப்பில்லாதவை என்று எப்படி நம்புவது?’ என்று பலரும் கேட்கிறார்கள். பொதுவாக காய்கறிகள், பொருட்களை அவற்றின் மணம், சுவை, அழுகல் தன்மை போன்றவற்றிலிருந்து இயற்கையாக விளைந்ததா, ரசாயன எச்சம் உள்ளதா என்பதை அனுபவரீதியில் அறிந்துவிடலாம். அத்துடன் இயற்கை விளைச்சலின் விலை எல்லா நேரமும் அதிகமாக இருப்பதில்லை. வெளிச்சந்தையில் சில நேரம் தாறுமாறாக விலை ஏறினாலும், இயற்கை விளைச்சல் பொருட்கள் கிட்டத்தட்ட வருஷம் முழுவதும் ஒரே மாதிரியான விலையிலேயே கிடைக்கின்றன.

அத்துடன் தர்மபுரி அருகே சிட்லிங்கியில் இயங்கிவரும் ‘ஆர்கானிக் பார்மர்ஸ் அசோசியேஷன்' என்ற அமைப்பு பழங்குடி மக்களிடம் இயற்கையாக விளைந்த தானியங்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது. அப்படிப்பட்ட நம்பகமான இடங்களிலிருந்தே தானியங்களைப் பெறுகிறோம்.

வாரத்தில் இரண்டு நாட்கள் இயற்கை வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் பணியை முடித்துவிட்டு, மற்ற நாட்களில் இயற்கை வேளாண் விளைபொருட்கள் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இந்தத் தம்பதியர் இறங்கிவிடுகிறார்கள். அப்படி ஈர்க்கப்பட்டு வருபவர்களை, தங்கள் பணியிலும் ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். இவர்களிடம் வேலை பார்க்கும் நான்கு பேரும் அப்படி வந்தவர்கள்தான் என்று ரமேஷ் சந்திரன் - தேவி பெருமிதமாகச் சொல்கிறார்கள்.

பயோ பேசிக்ஸ் தொடர்புக்கு: 9677610246.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x