Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM
இந்தியாவின் அமேசான் பீதர்கனிகாவில் ஒரு சூழல் சுற்றுலா
சுற்றுலா பயணிகளை கவரும் ஈகோ ரிட்ரீட் குடில்கள்
ஒடிஷா மாநிலம் என்றாலே புயல், வெள்ளத்தால் பேரழிவை சந்திக்கும் மாநிலம் என்ற பிற மாநில மக்கள் கருதுகின்றனர். ஆனால் வெளியில் தெரியாத எண்ணற்ற வளங்களை கொண்ட மாநிலமாக ஒடிஷா விளங்குகிறது. அம்மாநிலத்தி கேந்திரபாரா மாவட்டத்திலுள்ள பீதர்கனிகா இந்தியாவின் அமேசான் என்று அழைக்கப்படுகிறது.
சூழலியல் மண்டலம்:
இது 672சதுர கிமீ பரப்பளவு கொண்ட, 4 ஆறுகள், துணைக் கால்வாய்களின் நீரால் சூழப்பட்ட, கழிமுகங்களைக் கொண்ட சூழலியல் செறிந்த மண்டலமாகும். இதை தேசிய பூங்காவாக அறிவித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சுந்தர்பன் அலையாத்தி காடுகளுக்கு அடுத்தபடியாக, 2-வது மிகப்பெரிய அலையாத்தி காடுகளைக் கொண்டது.
அழிவின் விளம்பில்...
இந்தியாவில் அழிவின் விளிம்பில் உள்ள உவர் நீரில் வாழும் முதலை இனம் அதிக அளவில் வாழும் பகுதியாக இது உள்ளது. இவை அதிகபட்சமாக 23 அடி நீளத்துக்கு வளர்கின்றன. இங்கு ராஜநாகம், புள்ளி மான்கள், முள்ளம்பன்றி, காட்டுப் பன்றி இனங்களும் வசிக்கின்றன. வசந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து இப்பகுதிக்கு வரும் ஏராளமான பறவையினங்கள், இங்கு கூடு கட்டி, குஞ்சு பொரித்து, அவற்றுடன் திரும்பிச் செல்கின்றன.
படகு சவாரி:
பீதர்கனிகாவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் அலையாத்தி காடுகள், அவற்றில் கூடுகட்டி வாழும் பறவை இனங்கள், அலையாத்தி காடுகளின் நடுவே பாயும் ஆறுகள் மற்றும் சிறு பால்வாய்கள், அவற்றின் கரையில் இரைக்காக காத்திருக்கும் முதலைகள், அங்கு வளர்ந்திருக்கும் பசும்புற்களை வாலை ஆட்டிக்கொண்டு மேயும் புள்ளி மான்கள், தாயுடன் முட்டி, மோதி சண்டையிட்டு மகிழும் மான் குட்டிகள் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை பார்வையிட வனத்துறை சார்பில் நீண்ட தூர படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சுமார் ஒன்றரை மணி நேரம் வரை இந்த பயணம் அமைகிறது. சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இந்த படகு சவாரி உள்ளது.
சுற்றுலா பயணிகள் ஏக்கம்:
இங்கு இதுநாள் வரை தங்குமிடம் ஓரிடத்திலும், பார்வையிடும் இடம் ஓரிடத்திலும் இருந்து வந்தது. பெரும்பாலும் நகர்ப்புறங்களிலேயே தங்குமிடங்கள் இருந்தன. இது சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாகவே இருந்தது. அதிகாலை பொழுதிலும், அந்தி சாயும் வேளையிலும் பீதர்கனிகாவில் அழகை ரசிக்க வாய்ப்பில்லாமல் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏங்கினர்.
ஈகோ ரிட்ரீட் சுற்றுலா:
இதனிடையே, சுற்றுலாப் பயணிகளின் ஏக்கம் அறிந்த அம்மாநில சுற்றுலாத்துறை, வனத்துறையுடன் இணைந்து, பீதர்கனிகா தேசிய பூங்காவினுள், அலையாத்தி காடுகளுக்கு மிக அருகில், சுற்றுச்சூழலை பாதிக்காமல், தற்காலிகமாக மரப் பலகைகள் மற்றும் துணியால் ஆன, பிரபல நட்சத்திர விடுதிகளில் வழங்கப்படும் வசதிக்கு நிகராக குடில்களை அமைத்துள்ளது. தற்போது அதில் சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்படுகின்றனர். அந்த குடில்களில் ஏசி வசதியும் உள்ளன. இதற்கு ஈகோ ரிட்ரீட் (Eco Retreat) என பெயரிட்டுள்ளது. இதுபோன்ற ஈகோ ரிட்ரீட் சுற்றுலா சேவைகள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதியில் நிறைவடைகிறது.
பிளாஸ்டிக் தவிர்ப்பு:
சூழலியலை பாதுகாக்க அங்கு வழங்கப்படும் குடிநீர் கூட கண்ணாடி பாட்டில்கள், கண்ணாடி குவளைகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. தேனீர் போன்றவை பீங்கான் குவளைகளிலேயே வழங்கப்படுகிறது. தலை சீவும் சீப்பு, பல் துலக்கும் பிரஷ் கைப்பிடி, முகச்சவரம் செய்யும் ரேசர் கைப்பிடி உள்ளிட்டவையும் மரக்கட்டையிலேயே வழங்கப்படுகின்றன. அந்த வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை:
அங்கு உருவாகும் கழிவுகள் அனைத்தும் மக்கும் தன்மை கொண்டவை என்பதால், திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி முறையாக அப்புறப்படுத்தி, உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கி உரமாக்கப்படுகிறது. உடைந்த கண்ணாடி பாட்டிகள் போன்ற மக்காத குப்பைகள் வகை பிரிக்கப்பட்டு, அதை மறுசுழற்சி செய்யப்படுகிறது.
வாகன புகை மாசு இல்லை:
அந்த வளாகத்தில் புகை மாசு ஏற்படுத்தும் பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அவற்றை சற்று தொலைவியேலே நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து பாட்டரியால் இயங்கும் கார்கள் மூலமாகவே சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடில்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
பொழுதுப்போக்கு அம்சங்கள்:
அங்கு பொழுதை கழிக்க சைக்கிள் வசதி, இரும்புக் கயிற்றில் தொங்கியபடி செல்லும் சாகச விளையாட்டு, துப்பாக்கியால் பலூனை சுடுதல், வில் அம்பு, வலைப் பின்னலில் ஏறும் விளையாட்டு, மிதித்தபடி படகை இயக்கும் சேவை உள்ளிட்டவையும் உள்ளன. மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. பீதர்கனிகாவின் சூழலியல் சிறப்புகள் குறித்த திரைப்படமும் திறந்தவெளி அரங்கில் திரையிடப்படுகிறது. இரவில் தீ மூட்டி, அதை சூழ்ந்து பாடியும், ஆடியும் பொழுதைக் கழிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குடில்கள் அமைந்துள்ள வளாகத்திலேயே உணவகமும் அமைந்துள்ளது. அங்கு சைவ, அசைவ உணவுகள் காலை, மதியம், இரவு வேளைகளில் வழங்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் வரவேற்பு:
இந்த புதிய சேவை ஒடிஷா மாநில மக்கள் மட்டுமல்லாது, நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள், காட்டுயிர்கள் மற்றும் அவை எழுப்பும் ஓசைகள் மீது காதல் கொண்டவர்கள், அவற்றை ஒளிப்படமாக பதிவு செய்யும் கலைஞர்கள் உள்ளிட்டோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புது முயற்சி:
இத்திட்டம் தொடர்பாக ஒடிஷா மாநில சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா தொற்று தடுப்பு பொதுமுடக்கத்தால் ஒடிஷா மாநில பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் வழங்கிய தளர்வால் பல துறைகள் மீண்டெழுந்தன. அவை எல்லாம் அத்தியாவசியம் சார்ந்தவை. சுற்றுலாத்துறை அப்படி இல்லை. ஒருவர் விரும்பினால் மட்டுமே அதை பயன்படுத்த முடியும். அது அவர்களுக்கு அத்தியாவசியமும் இல்லை. அவர்களை சுற்றுலா செல்லுமாறு நிர்பந்திக்கவும் முடியாது. அதனால் கரோனா முடக்கத்தால் துவண்டு கிடந்த சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்ட, முதல்வரின் தனி செயலரும், 5டி (Transparency, Technology, Teamwork, Time, Transformation) தொலைநோக்கு திட்டத்துறை செயலர் வி.கார்த்திகேய பாண்டியன் ஈகோ ரிட்ரீட் சூழலியல் சுற்றுலா திட்டத்தை முன்னெடுத்தார். இதன் சிறப்பு, நாம் எந்த சூழல் செறிந்த சுற்றுலா தலத்தை பார்வையிட விரும்புகிறோமோ, அங்கேயே மரப்பலகை, துணியால் ஆகியவற்றால் ஆன குடில்களை அமைத்து, சுற்றுலாப் பயணிகளை அதில் தங்க வைப்பது தான். இந்த புதிய திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
துளிர்விட்ட வாழ்க்கை:
இந்த ஒரு முயற்சியால் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், சமையல் கலைஞர்கள், விருந்தோம்பல் சேவை வழங்குவோர், சாகச விளையாட்டு சேவை வழங்குவோர், மேடை கலைஞர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், செக்யூரிட்டி சேவை வழங்குவோர், சுற்றுலாப் பயணிகளை நம்பியுள்ள சாலையோர சிறு வியாபாரிகள், உணவகத்தினர் என எண்ணற்ற துறைகளைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை துளிர் விட்டிருக்கிறது
4 இடங்களில் ஈகோ ரிட்ரீட்:
ஈகோ ரிட்ரீட் சூழல் சுற்றுலா சேவைகள் ஒடிஷா மாநிலத்தில் பீதர்கனிகா, ஹிராகுட், தரிங்படி, கொனார்க் ஆகிய 4 இடங்களில் கிடைக்கிறது. கொனார்க் பகுதியில் கடற்கரையிலேயே குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய அனுபவம்:
கொனார்க் ஈகோ ரிட்ரீட் குடிலில் இருந்து சில மீட்டர் தொலைவிலேயே கடல் அலையில் தங்கள் கால்களை நனைத்து மகிழலாம். குடிலில் அமர்ந்தபடி கடற்கரை காற்று வாங்கியபடி, கடல் அலையை ரசிக்கலாம். அதற்கான பிரத்தியேக படுக்கை வசதிகளும் குடில்களின் முன்பு போடப்பட்டுள்ளன. இது சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுவத்தை கொடுக்கிறது. இந்த 4 ஈகோ ரிட்ரீட் சூழல் சுற்றுலா தலங்கள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://ecoretreat.odishatourism.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். சென்னையில் இருந்து விமானம் மற்றும் ரயில்கள் மூலம் புவனேஷ்வர் சென்று, அங்கிருந்து இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT