Last Updated : 07 Nov, 2015 11:28 AM

 

Published : 07 Nov 2015 11:28 AM
Last Updated : 07 Nov 2015 11:28 AM

பட்டாசுகளுக்குப் பின்னே உறங்கும் நிஜம்

சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகள், அங்கிருக்கும் தொழிலாளர்கள், அவர்களின் நிதர்சன நிலை குறித்து நாம் வைத்திருக்கும் பிம்பங்களைச் சுக்கு நூறாக உடைத்துப் போடுகின்றன பாலாஜி மகேஸ்வரின் படங்கள்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் ‘குட்டி ஜப்பான்' என்று புகழப்பட்டது சிவகாசி. சிவகாசியில் கிட்டத்தட்ட 800 பட்டாசுத் தொழிற்சாலைகள் இருக்கலாம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இந்தத் தொழிலை நம்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பட்டாசு ஆலைகளில் கிடைக்கும் சம்பளத்துக்காகத் தங்கள் வாழ்க்கையையே பணயம் வைக்கிறார்கள் இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள். வெடி விபத்துகளில் எல்லோரும் இறந்துபோவதில்லை என்பது உண்மைதான். அதேநேரம், வெடிபொருட்களுடன் புழங்குவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளும் சாதாரணமானவை அல்ல.

பாதுகாப்பு இல்லை

"சிவகாசியில் உயிருக்கு ஆபத்தான தொழிலில் இந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டாலும் முறையான பாதுகாப்பு வசதிகளுக்கோ, தொழிலாளர் உரிமைகளுக்கோ பெரிய உத்தரவாதமில்லை.

பல பட்டாசுத் தொழிற்சாலைகளில் சிறிய அறைகளில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமான தொழிலாளிகள் வேலை பார்க்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பெருமளவு வெடி பொருட்கள் அருகிலேயே சேமித்து வைக்கப்படுவதும் விபத்துகளை மோசமாக்குகிறது.

தீ, வெடி விபத்துகளுக்கு உள்ளாகும் எல்லா இறப்புகளும் பதிவு செய்யப்படுவதில்லை என்றாலும், ஆண்டுதோறும் 150 பேராவது காயம் அடைகிறார்கள். கடைசியாக 2012 செப்டம்பர் 5-ம் தேதி நடந்த மிகப் பெரிய விபத்தில் 53 பேர் பலியாகினர்" என்கிறார் பாலாஜி மகேஸ்வர்.

துயரம் என்னவென்றால் பட்டாசு ஆலை விபத்துகளில் பெற்றோரை இழந்த குழந்தைகளும், இந்தத் தொழிலில் இருந்து விடுபட முடியாமல் தொடர்ந்து பட்டாசுத்தாள் ஒட்டும் வேலையைச் செய்ய வேண்டியிருப்பதுதான்.

இந்த முடிவில்லா சுழற்சிக்கு முடிவு எப்போது வரும்?

யார் இந்த பாலாஜி?

சென்னையைச் சேர்ந்த பாலாஜி மகேஸ்வர், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர். ஆனால், கேமரா காதல் அவரை ஆட்கொண்டுவிட்டது. 2010-ம் ஆண்டு முதல் டிஜிட்டல் எஸ்.எல்.ஆர். கேமராவில் படமெடுக்க ஆரம்பித்தார். எல்லாம் சுயகற்றல்தான். “கேமரா மூலம் என்னுடைய எண்ணங்களைச் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்று தோன்றியது. என்னுடைய படங்கள் மூலமாக ஒவ்வொரு சம்பவத்துக்குப் பின்னாலிருக்கும் வாழ்க்கை, உணர்ச்சி, கதைகளைச் சொல்ல ஆசைப்படுகிறேன்,” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x