Last Updated : 31 Oct, 2015 01:18 PM

 

Published : 31 Oct 2015 01:18 PM
Last Updated : 31 Oct 2015 01:18 PM

எங்கே இருக்கிறாய் கலுவிக் கோடியே? உலகின் அரிய பறவையொன்றுடன் எட்டு ஆண்டுகள்! - பறவையியலாளர் ஜெகநாதன் பேட்டி

உலகிலேயே மிகவும் அரிதான பறவைகளுள் ஜெர்டான்ஸ் கோர்ஸரும் ஒன்று. அழிந்துபோய்விட்டதாகக் கருதப்பட்டு 1986-ல் ஆந்திரத்தின் கடப்பா பகுதியில் ஜெர்டான்ஸ் கோர்ஸர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அந்தப் பறவையின் இருப்பிடத்துக்குச் சென்று, அந்தப் பறவையைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டே, அதன் இருப்பிடத்தைக் காப்பாற்றும் முயற்சிகளில் எட்டு ஆண்டுகள் ஈடுபட்டவர் பறவையியலாளர் ஜெகநாதன். அந்த ஆண்டுகளில் அவராலேயே ஏழெட்டு முறைதான் அந்தப் பறவையைப் பார்க்க முடிந்திருக்கிறது என்றால் அந்தப் பறவை எந்த அளவுக்கு அரிதானது என்பது நமக்குப் புரியும். அவரை சந்தித்து உரையாடியதிலிருந்து…

ஜெர்டான்ஸ் கோர்ஸரின் உலகத்துக்குள் நீங்கள் எப்படி வந்தீர்கள்?

ஆந்திரத்தில் கடப்பாவில் மட்டுமே இருந்த அல்லது இருக்கும் பறவை அது. அதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக பி.என்.எச்.எஸ்-ஸில் ஒரு திட்டத்தை 2000-ல் அறிவித்திருந்தார்கள். அந்தத் திட்டத்தின் கீழ் அந்தப் பறவையைப் பற்றி எட்டு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றேன்.

ஜெர்டான்ஸ் கோர்ஸர் (Jerdon’s Courser) என்பது கோர்ஸர் என்றழைக்கப்படும் ஒரு பறவை இனத்தைச் சேர்ந்தது. தெலுங்கில் இதற்கு ‘கலுவிக் கோடி’ என்று பெயர். ‘ஆள்காட்டிப் பறவைகள்’ பிரிவைச் சேர்ந்தது. இந்த கோர்ஸர் பறவைகள் நன்றாகப் பறக்கக் கூடியவை என்றாலும் அதிகம் நடந்தும் செல்லக்கூடியவை. கலுவிக் கோடி இரவில் நடமாடும் பறவை. இந்தப் பறவையைக் குறித்து முதலில் விவரித்தது டி.சி. ஜெர்டான் என்ற ஆங்கிலேய பறவையியலாளர்தான். அவருடைய பெயரையே அந்தப் பறவைக்கும் வைத்திருக்கிறார்கள். அந்தப் பறவை அழிந்துபோய்விட்டதாகவே அப்போது நினைத்தார்கள்.

ஹோவர்டு காம்பெல் என்பவர் 1900-ம் ஆண்டு வாக்கில் பார்த்திருக்கிறார். அந்தப் பறவை கடைசியாகப் பார்க்கப்பட்டது அப்போதுதான். அதற்குப் பிறகு 86 ஆண்டுகள் கழித்துதான் அந்தப் பறவையை மறுகண்டுபிடிப்பு செய்தார்கள். பி.என்.எச்.எஸ்-ஸைச் சேர்ந்த பரத் பூஷண் என்ற ஆராய்ச்சியாளர்தான் அதை மறுபடியும் கண்டுபிடித்தார். பறவை வேட்டையாடுபவர்கள், உள்ளூர் மக்கள் என்று எல்லோரிடமும் கலுவிக் கோடி பறவையின் படத்தைக் கொடுத்துத் தேடல் நிகழ்த்தியபோது அய்த்தண்ணா என்பவரிடம் அந்தப் பறவை அகப்பட்டுக்கொண்டது.

களத்துக்குச் சென்று நீங்கள் எப்போது ஆய்வு ஆரம்பிக்கிறீர்கள்?

1986-ல் அந்தப் பறவை இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னும் 2000 வரை அது குறித்து ஆராய்ச்சி எதுவும் பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை. புதர்கள், அவற்றையொட்டி திறந்தவெளி இப்படி இருக்கும் பகுதிகளில் மட்டும்தான் அந்தப் பறவைகள் இருக்கும். பகல் முழுவதும் புதர்களில் இருந்துவிட்டு இரவு நேரங்களில் திறந்தவெளிக்கு வந்து எறும்புகள், கரையான்கள், பூச்சிகள் போன்றவற்றைப் பிடித்து உண்ணும். நான் முதன்முதலில் அந்தப் பறவையைப் பார்த்தது 2000-வது ஆண்டின் இறுதியில். ஆள்காட்டியை விடக் கொஞ்சம் சிறியதாக இருக்கும். டார்ச் அடித்தால் அந்தப் பறவை அப்படியே தரையோடு தரையாக உட்கார்ந்துகொள்ளும். பார்ப்பதற்குக் கல் கிடப்பதைப் போல இருக்கும். அருகே போனால் மேலே பறந்துசென்று வேறு எங்காவது போய் உட்கார்ந்துகொள்ளும்.

கலுவிக் கோடி பற்றிய கணக்கெடுப்புக்குப் புதுமையான ஒரு வழிமுறையை மேற்கொண்டோம். சாலையோர மண்ணை எடுத்துச் சலித்து, அந்த மண்ணைக் கொண்டு 5 மீட்டர் நீளம் மட்டும் கொண்ட பாதைகள் பலவற்றை அந்தப் பறவைகள் அடிக்கடி நடக்கும் பகுதிகளில் அமைத்தோம். அந்த மணல் பாதைகளின் மீது அந்தப் பறவைகள் நடந்தால் அவற்றின் காலடித் தடம் நன்றாகப் பதிந்துவிடும் வகையில் பாதைகளை அமைத்தோம். அந்தப் பறவையின் காலடித் தடம், குரல்கள் போன்றவை எப்படி இருக்கும் என்பதெல்லாம் நமக்குத் தெரியாதல்லவா?

இந்த வழிமுறையின் மூலம் உங்களுக்கு எவ்வளவு நாட்களில் கலுவிக் கோடியின் காலடித் தடம் கிடைத்தது?

ஒரு வாரத்தில் கிடைத்துவிட்டது. எனினும் அது அந்தப் பறவைதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது எப்படி? அதற்காக அந்தப் பாதைகளின் இரு புறமும் ‘கேமரா டிராப்’ வைத்தோம். அந்தப் பறவை அதன் வழியே நடந்துபோனால் அதன் காலடித் தடமும் கிடைக்கும், அதன் புகைப்படமும் கிடைக்கும். தினமும் காலையில் போய் கேமராக்களை நான் பார்ப்பேன். படச்சுருளைக் கழுவிப் பார்த்த பிறகு அதில் அந்த ‘கலுவிக் கோடி’ பறவை எங்களுக்குக் கிடைத்தது. அதன் புகைப்படத்தைப் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட பரவசத்துக்கு அளவே இல்லை.

தேடலின் அடுத்த கட்டம் என்ன?

அடுத்ததாகக் குரலைக் கண்டுபிடிக்கும் வேட்டை. ஒரு நாள் இந்தப் பறவையின் குரலும் கேட்டது. வித்தியாசமாக இருக்கிறதே என்று பதிவுசெய்துகொண்டோம். எல்லா பறவைகளின் குரல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து எதனுடனும் அந்தக் குரல் பொருந்திப்போகாததால் கலுவிக் கோடியின் குரல்தான் அது என்பது எங்களுக்கு உறுதியானது. புலப்படாத பறவையின் குரலையே பதிவுசெய்ததில் எனக்கு உற்சாகம் பிடிபடவில்லை. ‘கலுவிக் கோடியின் குரலைப் பதிவுசெய்திருக்கிறோம்’ என்று இந்தத் திட்டத்தின் முக்கிய உறுப்பினர்களும் டாக்டர் ரிஸ் கிரீனிடம் (Dr. Rhys Green) சொன்னேன். ‘இது குறித்து 99% உறுதிதான் இருக்கிறது உங்களுக்கு. அந்தப் பறவை குரல் கொடுப்பதை நேரில் பார்த்தால் மட்டுமே 100% உறுதியாகும்’ என்று அவர் சொல்லிவிட்டார். நாம் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்; இவர் இப்படிச் சொல்லிவிட்டாரே என்று எனக்கு ஒரு வாரம் தூக்கமே வரவில்லை.

தினமும் சாயங்காலம் ஆனதும் களத்துக்குச் சென்றுவிடுவேன். எப்படியாவது அந்தப் பறவை கத்துவதை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இரண்டு மாதங்கள் முயன்று பார்த்துவிட்டேன். முடியவில்லை. அப்புறம் ‘பிளே பேக்’ வழிமுறையை மேற்கொண்டோம். நாங்கள் பதிவுசெய்திருக்கும் குரலை ஒலிக்கச் செய்து ஏதாவது பறவையிடமிருந்து பதில் குரல் வருகிறதா என்பதை எதிர்பார்ப்போம். மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே குரலை ஒலிக்க விடும் உத்தியைப் பின்பற்றலாம்.

சரி, அந்தப் பறவை கத்தியதை நேரில் பார்த்தீர்களா?

பார்த்தோம்! ஒரு முறை எனது உதவியாளருடன் மாலை வேளையில் கள ஆய்வுக்காகச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பறவை கத்திக்கொண்டிப்பது கேட்டது. இரவு நேரத்தில் கேட்க வேண்டிய சத்தம் இப்போது கேட்டுக்கொண்டிருக்கிறதே என்று கலுவிக் கோடி நானும் என் உதவியாளரும் அப்படியே மறைவாகப் படுத்துக்கொண்டோம். எங்களுக்கு எதிரே, ஆனால் ஒரு புதருக்குப் பின்னாலிருந்து கத்திக்கொண்டிருந்தது. அதுதான் கத்துகிறது என்று தெரிந்தாலும் நேரில் பார்க்காவிட்டால் 100% உறுதியாகாது அல்லவா? எனவே, எங்கள் டேப் ரெக்கார்டரில் இருந்த குரலை ஒலிக்கச் செய்தோம். ‘க்விக்கூ... க்விக்கூ...’ என்ற சத்தம் கேட்டதும் புதருக்கு வெளியிலிருந்து ஓடி வந்து பார்த்து அதுவும் ஒலி எழுப்பியது. என் வாழ்க்கையில் மகத்தான மிகச் சில தருணங்களுள் அதுவும் ஒன்று.

உடனே, கிரீனுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ‘நீங்கள் அப்படிச் சொல்லியிருக்காவிட்டால் நான் அசட்டையாக இருந்திருப்பேன். நீங்கள் மறுத்ததால்தான் எனக்கு ஊக்கம் கிடைத்து, அந்தப் பறவையின் குரலை உறுதிப்படுத்தினேன்’ என்று அவருக்கு நன்றி தெரிவித்தேன். இப்போது 100% உறுதியாகிவிட்டது. ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் மட்டுமே அந்தப் பறவை இருக்கிறது. ஒரு பெரிய காப்புக்காட்டின் பகுதி அது. இந்தப் பறவை அங்கே காணப்படுவது தெரிந்தவுடன் அதை  லங்கமல்லேஸ்வர காட்டுயிர் சரணாலயமாக அறிவித்துவிட்டார்கள்.

அப்படியென்றால் அந்தப் பறவையினத்தைக் காப்பாற்றுவதற்கான முறையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன என்றுதானே சொல்ல வேண்டும்?

அப்படி இல்லை. நாங்கள் செய்ததில் மிகவும் முக்கியமான விஷயம் அந்தப் பறவை எப்படிப்பட்ட இடத்திலெல்லாம் இருக்கும் என்பதை நிர்ணயித்ததுதான். திறந்தவெளிப் புல் பரப்புகளில் அது இருக்காது. அடர்த்தியான புதர்களிலும் இருக்காது. குறிப்பிட்ட உயரமுள்ள பெரிய புதர்கள், சிறிய புதர்கள், இடையில் திடல்கள் என்று வித்தியாசமான வாழிடம் அந்தப் பறவைக்கு அவசியம் என்பதைக் கண்டுபிடித்தோம். மலைக்கு மேலல்ல, ஊரை அடுத்து மலையடிவாரத்தில்தான் இது போன்ற வாழிடங்கள் காணப்படும்.

இது போன்ற வாழிடங்களைச் செயற்கைக்கோளின் உதவியுடன் கண்டுபிடித்து அங்கெல்லாம் அந்தப் பறவையைக் கண்டறிவதற்காக மண் சுமந்துகொண்டுபோவோம். இதன் மூலமாக அந்தப் பறவையின் கால்தடங்கள் அந்த சரணாலயத்துக்குள்ளாகவே மூன்று இடங்களில் எனக்குக் கிடைத்தன.

இப்படியாக 2005-ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக மும்பை போய்விட்டுத் திரும்பிவந்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தக் காட்டின் உள்ளே ஒரு பொக்லைன் நின்றுகொண்டிருந்தது. தெலுங்கு-கங்கை கால்வாய்க்காக தோண்டப்பட்டுக்கொண்டிருந்தது. அது எந்த இடம் தெரியுமா? முதன்முதலில் கலுவிக் கோடியின் காலடித் தடத்தை நான் கண்டுபிடித்த இடம்; அதன் குரலை நேரடியாகக் கேட்டறிந்த இடம் அது. எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள்! எனக்கு உண்மையிலேயே அழுகை வந்துவிட்டது. உடனே பி.என்.எச்.எஸ் இயக்குநருக்கும், சுந்தர் என்ற டி.எஃப்.ஓ-வுக்கும் தகவல் தெரிவித்தேன். அந்த டி.எஃப்.ஓ துணிச்சல் மிக்கவர்.

பாசனத் துறையின் பொறியாளர்களிடம் இருந்தது பழைய வரைபடம். அரிய வகைப் பறவை ஒன்று அங்கே கண்டறியப்பட்டது, அதனால் அந்தப் பகுதி சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது போன்றவை தொடர்பாகப் பழைய வரைபடத்தில் ஏதும் இல்லை என்பதால், அவர்களுக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அதற்குப் பிறகு இன்றுவரை அந்த இடத்தில் கலுவிக் கோடியை நான் பார்க்கவில்லை.

தண்ணீர் வேண்டும்தான், கால்வாய் வேண்டும்தான். ஆனால், மக்களா, காடா, பறவையா என்று என்னிடம் கேட்டால் முன்னுரிமை காட்டுக்கும் பறவைக்கும்தான். அதற்குப் பிறகுதான் மக்கள். மக்கள் உயிர்வாழ அவைதானே அடிப்படை! துரதிர்ஷ்டவசமாக, அதுபோன்ற புரிதல் இன்றுவரை பெரும்பாலானோரிடம் இல்லை. அதற்குப் பிறகு 2005-லிருந்து 2008வரை பதற்றமான ஒரு சூழலில்தான் அங்கே வேலைபார்த்தேன்.

கால்வாய் அந்த வழியில் செல்வதைத் தடுத்து நிறுத்த முடிந்ததா?

இது சம்பந்தமாக நிறைய பேரைப் பார்த்து முறையிட்டோம். கடப்பா பகுதி காலஞ்சென்ற ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியுடையது. தெலுங்கு-கங்கா திட்டத்தை அந்த வழியே கொண்டுசெல்வதில் முனைப்பாக இருந்தார் அவர். அவரிடமும் முறையிட்டோம்.

இதையெல்லாம் பற்றி அறிந்த, சாங்சுவரி ஏசியா (Sanctuary Asia) காட்டுயிர் இதழின் ஆசிரியர் பிட்டு சாகல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கலுவிக் கோடியின் வாழிடம் வழியே இந்தக் கால்வாய் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டது. கால்வாய் வேறு திசையில் சென்றது. சாதாரணமாக இரண்டு, மூன்று வாக்கியங்களில் சொல்லிவிட்டேன். ஆனால், இதற்கென்று நாங்கள் சந்தித்த இன்னல்களுக்கு அளவே கிடையாது.

தற்போதைய நிலைமை எப்படி இருக்கிறது?

முன்பைவிட மோசமாகத்தான் இருக்கிறது. வனத்துறையினருக்கே சரியான புரிதல் இல்லை. பெரிய திட்டங்களெல்லாம் கொண்டுவரத் திட்டமிட்டால் இதுபோன்ற இடங்கள்தான் முதல் இலக்கு. இதுபோன்ற சமவெளியில் உள்ள தரைக்காடுகள், புதர்க்காடுகள் முதலிய வாழிடங்களை, சரியாக வளராத புதர்கள்தானே என்று நினைத்து இங்கெல்லாம் கைவைத்துவிடுவார்கள்.

இயற்கையைப் பொறுத்தவரை அடர்த்தியான காடுகள் மட்டுமல்ல, புதர்க் காடுகளும், ஒன்றுமே இல்லையே என்று நினைக்கத் தோன்றும் இயற்கையான புல்வெளிகளும்கூட முக்கியம்தான். தமிழ்நாட்டில் இயற்கையான புல்வெளிகளே இப்போது கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. அங்கிருந்த வெளிமான்கள், கானல் மயில்கள், சிவிங்கிப் புலிகள் போன்றவையும் மறைந்துவிட்டன.

அது போன்ற இடங்களெல்லாம் அரசாங்கப் பதிவேடுகளில் ‘பாழ்நிலம்’ (waste land) என்று குறிக்கப்பட்டிருக்கும். இயற்கையான நிலப்பரப்புகளில் எது ‘பாழ்நிலம்’? எது நல்ல நிலம்? அது போன்றுதான் கலுவிக் கோடி இருந்த இடங்களையும் ‘பாழ்நிலங்கள்’ என்று குறித்துவைத்திருந்தார்கள். கலுவிக் கோடியின் வாழிடங்களை வனத்துறைக்குக் கீழ் கொண்டுவந்த பிறகு, அந்தப் பறவையை என்னால் பார்க்க முடிந்ததே இல்லை.

கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?

2008 ஏப்ரலில்தான் அதன் குரலைக் கடைசியாகக் கேட்டேன். இத்தனைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கேமரா டிராப்களைக் காடு முழுவதும் வைத்தும்கூட இன்றுவரை ஒரு பறவைகூட தென்படவில்லை.

அப்படியென்றால் அந்தப் பறவை முற்றிலும் அழிந்துபோய்விட்டது என்கிறீர்களா?

இப்போதைக்கு அந்த இடத்தில் இல்லாமல் போயிருக்கலாம். அந்த மாதிரி காடுகள் ஆந்திரத்தில் நிறைய இடங்களில் இருக்கின்றன. அந்தக் காடுகளுக்கு இடம்பெயர்ந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, அந்தக் காடுகளையெல்லாம் பாதுகாக்க வேண்டும். என்னுடைய அடுத்த முயற்சி அதுதான்.

இவ்வளவும் செய்வது எதற்காக?

அந்தப் பறவையைக் காப்பாற்ற நினைப்பது என்பது காடுகளையும் காப்பாற்றுவதுதான். அந்தக் காடுகளில் மேலும் பல உயிரினங்கள் இருக்குமல்லவா? அது மட்டுமல்லாமல் ஊர் மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கும், விறகு பொறுக்குவதற்கும் அங்கேதான் வருவார்கள். அதுவும் இல்லையென்றால் அடர் காடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன.

நமக்கு இருப்பது ஒரே ஒரு தாஜ்மஹால்தான். தாஜ்மஹால் நமக்குக் கலாச்சாரச் சொத்து. அதுபோல, கலுவிக் கோடி நமக்கு இயற்கைச் சொத்து. இவையெல்லாம் இருப்பது நமக்குப் பெருமை. ஆகவே, இவற்றைக் காப்பாற்றுவது நமது கடமை. இப்படி ஒரு பறவை இருந்தது. அதை எங்கள் காலத்தில் அழித்துவிட்டோம் என்று நமது வருங்காலச் சந்ததியினரிடம் சொன்னால், அதைவிட நமக்கு வெட்கக் கேடு வேறு எதுவும் இல்லை.

ஒவ்வொரு உயிரினத்துக்கும் இந்த உலகில் வாழ்வதற்கு உரிமை உண்டு. அதுவும் இந்தப் பறவை உலகிலேயே அரிய பறவைகளுள் ஒன்று. அதைப் பாதுகாத்தே ஆக வேண்டும். அது நமது கடமை.

இது போன்ற உயிரினங்களுக்காகக் காடுகளைப் பாதுகாப்பதால் நேரடியாக மனிதர்களுக்குப் பயன் ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் நிறைய ஆக்ஸிஜன் கிடைக்கிறது. ஆறுகள், ஓடைகளில் தண்ணீர் வருகிறது. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை வைத்தும் சொல்லலாம். ஆனால், அதைச் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டுமா? உண்மையில், இயற்கையின் எந்த அம்சத்துக்கும் விலை நிர்ணயிக்கவே முடியாது!

- இந்த நேர்காணலின் விரிவான வடிவம் ‘தி இந்து’ தீபாவளி மலரில் (2015) வெளியாகியிருக்கிறது.



ஜெகநாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x