Published : 31 Oct 2015 01:32 PM
Last Updated : 31 Oct 2015 01:32 PM
‘இயற்கை வேளாண்மையின் காந்தி' என்று புகழப்படும் குஜராத்தைச் சேர்ந்த இயற்கை வேளாண் அறிஞர் பாஸ்கர் சவே பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. அதேநேரம், விவசாயிகள் தற்கொலை அதிகரித்திருப்பது தொடர்பாக எம்.எஸ். சுவாமிநாதனுக்கு 2006-ல் அவர் எழுதிய புகழ்பெற்ற கடிதம் அவரைப் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. அப்போது எம்.எஸ். சுவாமிநாதன், தேசிய விவசாய கமிஷன் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கடிதத்தில் அரசின் வேளாண் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து இருந்ததுடன், அடிப்படைக் கட்டமைப்பை மாற்றியமைக்க உடனடியாகச் செயல்பட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியும் இருந்த பாஸ்கர் சவே, அக். 24-ம் தேதி 94 வயதில் இறந்தார்.
ஃபுகோகா பாராட்டு
மூன்று தலைமுறை இயற்கை வேளாண் உழவர்களுக்கு முன்னோடியாகவும் உத்வேகமாகவும் இருந்தவர்தான் பாஸ்கர் சவே. குஜராத்தின் தென்கிழக்கு முனையில் இருந்த வல்சத் மாவட்டம் தேஹ்ரி என்ற கிராமத்தில் கல்பவிருக்ஷா என்ற இயற்கை வேளாண் பண்ணையை நடத்தி வந்தார்.
உலகப் புகழ்பெற்ற இயற்கை வேளாண் அறிஞரான மசானபு ஃபுகோகா, பாஸ்கர் சவேயின் பண்ணையைப் பார்த்துவிட்டு, ‘இது உலகிலேயே சிறந்தது. என்னுடைய பண்ணையையும் விஞ்சியது' என்று பாராட்டியுள்ளார்.
அறிவுப் பகிர்வு
ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்துவந்த பாஸ்கர் சவே, 1956-ல் ஆசிரியர் பணியைத் துறந்து இயற்கை வேளாண்மையில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார். இயற்கை வேளாண்மையில் நிறைய பரிசோதனைகளையும் புதிய முயற்சிகளையும் மேற்கொண்டார்.
பாஸ்கர் சவேயின் வேளாண் முறைகளும் கற்பித்தலும் இயற்கையில் இருந்த கூட்டு வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலின் அடிப்படையில் உருவானவை. இயற்கையின் சுழற்சியைத் தொந்தரவு செய்ய அவர் விரும்பியதே இல்லை. ஆரோக்கியமாகவும், கவுரவமாகவும், அமைதியாகவும் வாழ்வதற்கான ஒரே வழி இயற்கை வேளாண்மை மட்டுமே என்று வலியுறுத்தினார். ஆர்வத்தோடு வந்த அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும் இலவசமாகவும் தன்னிடம் இருந்த அறிவைப் பகிர்ந்தளித்துவந்தார்.
ஜெர்மனியைச் சேர்ந்த இயற்கை வேளாண் இயக்கங்களின் சர்வதேசக் கூட்டமைப்பு (International Federation of Organic Agriculture Movements - IFOAM), 2010-ல் வாழ்நாள் சாதனையாளர் விருதை இவருக்கு வழங்கியது. ‘இயற்கை வேளாண் உலகில் தலைசிறந்தவர்களில் ஒருவர்' என்று அப்போது அவர் பாராட்டப்பட்டார்.
ஜீரோ பட்ஜெட்
பாஸ்கர் சவேயின் 10 ஏக்கர் பண்ணையில் பல்வேறு பயிர்கள் கலந்து பயிரிடப்பட்டுள்ளன. நிரந்தரத் தோட்டப் பகுதியில் தென்னை மரம், சப்போட்டா, இரண்டு ஏக்கரில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பருவகாலப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. மற்றொரு இரண்டு ஏக்கரில் அப்பகுதியில் அதிகம் விரும்பப்பட்ட தென்னை நாற்றுகள் வளர்க்கப்பட்டன.
இந்தப் பண்ணையின் விளைச்சல், விளைச்சல் தந்த ஊட்டச்சத்து - சுவை, பல்லுயிர் தன்மை, வளம்குன்றாத தன்மை, நீர் சேகரிப்பு, எரிசக்தி சேமிப்பு, பொருளாதார லாபம் ஆகிய அனைத்து அம்சங்களும் வேதி வேளாண்மையைவிட சிறந்த முறையில் இருந்தன. அது மட்டுமல்ல, வேலையாட்களுக்கான தேவை குறைவாக இருந்தது, உரம், பூச்சிக்கொல்லி போன்ற எந்த வெளிப்பொருட்களும் பயன்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்படவில்லை. சுருக்கமாக ஜீரோ பட்ஜெட் வேளாண்மையாக இருந்தது.
இவருடைய பண்ணையில் 2014-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவரும் இயற்கை வேளாண் பயிற்சி மையத்தின் சார்பில், பலருக்கும் இயற்கை வேளாண்மை அடிப்படைகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT