Published : 03 Oct 2015 10:12 AM
Last Updated : 03 Oct 2015 10:12 AM
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி தமிழகத்தின் அடையாளம் என்றால், எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் கார்வி மலர் மகாராஷ்டிர மாநிலத்தின் பெருமை! இவை இரண்டுமே மேற்குத் தொடர்ச்சி மலையில் பூக்கும் மலர்கள் என்பது கூடுதல் சிறப்பு.
ஆச்சரியம் என்னவென்றால், அந்த எட்டு ஆண்டு சுழற்சியிலும் முந்திக்கொண்டு இந்த ஆண்டே பூத்திருக்கிறது கார்வி குறிஞ்சி.
இரண்டு பெயர்கள்
மராத்தி மொழியில் வழங்கப்படும் ‘கார்வி’ எனும் பெயரே ஆங்கிலத்திலும் இதன் பெயராகிவிட்டது. இதன் அறிவியல் பெயர் Strobilanthes callosus அல்லது carvia callosa என இரண்டு விதமாக அழைக்கப்படுகிறது.
இந்த மலரை அறிவியலுக்கு அறிமுகப்படுத்தியவர் நீஸ் எனும் பிரிட்டிஷ் கப்பல் பொறியாளர். அப்போது அவர் இதைத் துணை இனமாகக் கருதி Strobilanthes callosus என்று பெயர் வைத்தார். பின்னாளில் ‘பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா’ அமைப்பின் இயக்குநராக இருந்த சந்தாபோ எஸ்.ஜே., இந்த மலரைப் பேரினமாக அறிவித்து, carvia callosa என்ற பெயரை 1954-ம் ஆண்டு வழங்கினார்.
பசுமை நடை
மும்பையில் உள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவில் இந்த மலர்களைப் பெருமளவில் காண முடியும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்தப் பூக்கள் பூத்துக் குலுங்கும். கடைசியாக 2008-ம் ஆண்டு இந்த மலர் பூத்திருந்தது. மீண்டும் 2016-ம் ஆண்டு இந்தப் பூ மலரும். ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு செப்டம்பர் மாதமே, அந்தப் பூங்காவின் ஓரிடத்தில் மட்டும் இந்தப் பூ பூத்து, காண்பவரை ஆச்சரியப்படுத்தியது. அங்கே எடுக்கப்பட்ட படம்தான் இது!
‘இயற்கையின் அதிசயம்’ என்று அழைக்கப்படும் இந்த மலரைக் காண்பதற்காகவே மும்பையில் உள்ள ‘பம்பாய் இயற்கை வரலாற்று கழகம்’ பசுமை நடை நிகழ்வை ஏற்பாடு செய்கிறது என்பதிலிருந்து கார்வி குறிஞ்சியின் பிரபலத்தைப் புரிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT