Published : 03 Oct 2015 10:22 AM
Last Updated : 03 Oct 2015 10:22 AM
உலகுக்கு உணவு தரும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்குமே நெருக்கடியாக இருக்கக்கூடிய இயற்கை வளம் தண்ணீர். குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது நமக்குத் தெரியும். கோடையில் தென்னையைக் காப்பாற்ற தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பாசனம் செய்யும் உழவர்கள் நம்மூரில் இருப்பது அதைவிடக் கொடுமை. இப்படி நீரின் தேவையும் அழுத்தமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.
அனைத்துப் பொருட்களைவிடவும் நீர் விலைமதிப்பற்றது. ஏனென்றால், நீரை விளைவிக்க முடியாது. அதனால்தான் நமது முன்னோர் `நீரின்றி அமையாது உலகு’ என்று கூறிவைத்தார்கள். அளவற்ற அன்பை செலுத்துவதுபோல, தனது பிள்ளைகளாகிய உயிரினங்களுக்கு நீரை இயற்கை அள்ளிக் கொடுத்துள்ளது. உலகில் மனித குலம் மட்டுமே, தண்ணீரை மாசுபடுத்தி அழிக்கும் பணியைச் செய்கிறது. குறிப்பாக, பேராசை பிடித்தாட்டும் மனிதர்களால்தான் அது நடக்கிறது. காட்டில் வாழும் பழங்குடிகளும், கடலருகே மீன் பிடித்து வாழும் மீனவர்களும், ஏழை உழவர்களும் இந்தக் கொடுமையைச் செய்வதில்லை.
குறைந்த செலவு
இந்தப் பின்னணியில் மழையால் கிடைக்கும் நீரை, முறையாகச் சேமித்தாலே நமது தேவையில் பெரும் பகுதியை நிறைவு செய்துகொள்ளலாம். அந்த முயற்சியில் மிகக் குறைந்த செலவில், மழைநீர் அறுவடை செய்யும் பணியை செய்துவருகிறார் உடுமலைப்பேட்டை சிவக்குமார்.
தன்னுடைய பண்ணையில் இவர் இதைச் செய்துள்ளதோடு மற்ற உழவர்களுக்கும் இந்த ஏற்பாட்டை செய்துகொடுத்துவருகிறார். இவர் ஓர் இயற்கைவழி உழவர்.
இவருடைய ஒருங்கிணைந்த பண்ணையில் தென்னை, பட்டுப்புழு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகியவற்றுடன் காய்கறிச் சாகுபடியும் நடக்கிறது. இவரது கோழி வளர்ப்பு மாதிரியும் அனைவரும் பின்பற்ற வேண்டிய முன்னுதாரணமே. மிகக் குறைந்த செலவில் கோழி வளர்க்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி உள்ளார்.
நீர் சேமிப்பைப் பொறுத்தவரையில் ஏறத்தாழ ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் செலவில், நீர் சேமிப்பு அமைப்பை இவர் உருவாக்கிவிடுகிறார். இந்த முறையின் அடிப்படை அம்சம் ஆழ்துளைக் கிணறுகளிலும், சாதாரண திறந்தவெளிக் கிணறுகளிலும் நேரடியாக நீரைச் செலுத்துவதுதான்.
எப்படிச் செய்வது?
மழைக் காலத்தில் நம் வயலுக்கு அருகில் உள்ள ஓடை அல்லது குளங்களில் தண்ணீர் வந்து சேரும். அப்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் நீர் அங்கு நிற்காமல், பயன்படாமல் வெளியேறிவிடும். அந்த நீரை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இவருடைய கோட்பாடு. அந்த அடிப்படையில் ஒரு குளத்தில் இருந்தோ, ஓடையில் இருந்தோ அல்லது புதிதாக ஒரு பண்ணைக் குட்டையை அமைத்தோ, நீர் வந்து சேரும் இடத்தை இவர் தேர்வு செய்கிறார். அந்த இடத்திலிருந்து ஏறத்தாழ ஐந்து அடி ஆழத்துக்கு வாய்க்கால் அமைக்கிறார். அந்த வாய்க்கால் ஆழ்துளைக் கிணற்றை நோக்கி அமைக்கப்படுகிறது.
அதன் பின்னர் வாய்க்கால் வரும் வழியில் வடிகட்டும் அமைப்பு ஒன்று உருவாக்கப்படுகிறது. இது மிகவும் இன்றியமையாத ஒரு செயல்பாடு. இதற்கும் செலவு குறைவான முறையையே இவர் கையாளுகிறார். இந்த வடிகட்டும் அமைப்பைப் பலரும் மிக அதிக செலவு செய்து உருவாக்குகின்றனர், அது தேவையற்றது.
வடிகட்டும் அமைப்பை உருவாக்க பிளாஸ்டிக் பீப்பாய் பயன்படுத்தப்படுகிறது. இருநூறு லிட்டர் கொள்ளளவு உள்ள பீப்பாய் பரவலாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது, அது போதும். இந்தக் கலனில் ஆறு மில்லி மீட்டர் அளவுகொண்ட, நெருக்கமான துளைகள் இடப்படுகின்றன. அதன் பின்னர் அந்தப் பீப்பாயின் நடுவில் ஆறு விரற்கடை (இஞ்ச்) விட்டமுள்ள பி.வி.சி. குழாய் பொருத்தப்படுகிறது. அந்தக் குழாயில் மிகக் சிறிய துளைகள் இடப்படும்.
நடுவில் பொருத்தப்படும் குழாயைச் சுற்றி, ஒரு சல்லடைத் துணி நன்கு கட்டப்படுகிறது. அதேபோல பீப்பாயின் உட்பகுதியில், அதாவது, சுவற்றுப் பகுதியிலும் சல்லடைத் துணி பொருத்தப்படுகிறது. இதன் இடைவெளியில் கசடு, கழிவு அகற்றப்பட்ட குறுமணல் நிரப்பப்படுகிறது. இது மணல் வடிகட்டியாகச் செயல்படும்.
இந்த அமைப்பை ஒழுங்கு செய்த பின்னர், குளத்திலிருந்து ஐந்தடி ஆழத்தில் உள்ள வாய்க்கால் வழியாகக் கொண்டுவரப்படும் பி.வி.சி. குழாயுடன் இணைக்கப்படும். இப்படியாகக் குளத்திலிருந்து நேரடியாக வடிகட்டும் அமைப்புக்கு நீர் வந்துவிடுகிறது.
புவியீர்ப்பு விசை
இதன் பின்னர் வடிகட்டியில் இருந்து நீர், கிணற்றுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்காக பீப்பாயின் நடுவில் உள்ள குழாயுடன் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதாவது, மணல் வடிகட்டியில் நீர் தூய்மைப்படுத்தப்பட்டு, குழாய் வழியாக இறங்கி, கிணற்றுக்கு வந்து சேர்கிறது. இதனால் எந்தவித கசடும், மண்ணும் தண்ணீரில் கலந்திருப்பதில்லை. இந்த வடிகட்டி அமைப்பு பல ஆண்டுகளுக்கு வேலை செய்கிறது. இந்த முறையில் எந்த வகையிலும் மின்சாரமோ, ஆற்றலோ தேவையில்லை. நீரை ஏற்றவோ, தள்ள வேண்டிய தேவையோ கிடையாது. முற்றிலும் புவியீர்ப்பு விசையை அடிப்படையாகக் கொண்டு இது செயல்படுகிறது.
ஆண்டுக்கு ஒரு லட்சம் லிட்டர்
இந்த அமைப்பின் மூலம் முதல் பருவ மழையிலேயே ஆழ்துளைக் கிணறுகள் போதிய அளவு நீரைப் பெற்றுவிடுகின்றன. அதுமட்டுமல்ல, நீர் வறண்டு உயிர்விட்ட கிணறுகள்கூட, இந்த அமைப்பு மூலம் உயிர்ப்பிக்கப்பட்டு நீர் மட்டம் உயர்கிறது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட கிணறுகளுக்கு அருகிலுள்ள மற்ற கிணறுகளிலும் நீர் மட்டம் உயர்கிறது. இப்படியாக மிகக் குறைந்த செலவில் ஓராண்டிலேயே சில லட்சம் லிட்டர் நீரைப் பெறும் உத்தியை, இவர் உருவாக்கி இருக்கிறார். தேவைப்படுபவர்களுக்கு இந்த ஏற்பாட்டை அவர் செய்தும் கொடுக்கிறார்.
(அடுத்த வாரம்: புதுமை படைக்கும் பெண் விவசாயி)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
விவசாயி சிவக்குமார் தொடர்புக்கு: 7598378583
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT