Last Updated : 05 Sep, 2015 02:44 PM

 

Published : 05 Sep 2015 02:44 PM
Last Updated : 05 Sep 2015 02:44 PM

ஏரின்றி அமையாது உலகு: எது உண்மை வளர்ச்சி?

நமது வளர்ச்சி மேதைகள் அடிக்கடி சுட்டிக்காட்டும் ஒரு மந்திரக்கோல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product - GDP) என்பதாகும். சொர்க்கத்தின் திறவுகோலே இந்த மொ.உ.உ. என்று அவர்கள் வாதிடுவார்கள். உண்மையில் நாட்டின் அனைத்து மக்களுடைய உற்பத்தியையும் இந்த அளவீடு கணக்கில் கொள்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்படியென்றால்...

முதலில், இந்த மொ.உ.உ. என்றால் என்ன என்று பார்ப்போம். அதாவது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் செய்யப்படும் பொருள் உற்பத்தியையும், சேவைகளையும் கூட்டிக் கணக்கிடுவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இதன் நடைமுறையும் உண்மையானதுமான பொருள் என்னவென்றால், ஓர் ஆண்டில் நடக்கும் பணப் பரிமாற்றத்தின் மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகிறது.

இது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கும். பொதுவாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்தால் நாட்டின் பொருளாதாரம் உயரும், அதன் பயனாக வேலைவாய்ப்பு உயரும், அதன் பயனாகப் பட்டினி இருக்காது, மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று கணக்கிடுவார்கள். இதுவும் உண்மைக்குப் புறம்பானதாக உள்ளது.

முழுக் கணக்கு அல்ல

எடுத்துக்காட்டாக, வேளாண்மையில் பெரும்பாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவீட்டில் உணவு தானியங்களின் உற்பத்தியை மட்டுமே கணக்கில் எடுக்கின்றனர். அதுவும் சந்தைக்குள் நுழைந்து பணமாகப் பரிமாறப்படும் பொருளை மட்டுமே கணக்கில் எடுக்கின்றனர். குறிப்பாகத் தங்களுக்கான தேவைகளுக்கு என்று உற்பத்தி செய்யும் உழவர்களின் பொருள் பரிமாற்றமும், அவர்களுடைய உழைப்பும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

இன்னும் இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் தங்களுக்குத் தேவையான உணவை, தாங்களே உற்பத்தி செய்துகொள்கின்றனர். இதேபோல இன்னும் ஏழு சதவீத மக்கள் கால்நடை மேய்ப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுடைய பணப் பரிமாற்றம் என்பது வங்கிகள் மூலமாக வருவது கிடையாது.

மரத்தை வெட்டினால் வளர்ச்சி?

எப்படியும் வளர்ச்சி விழுக்காட்டை உயர்த்திக் காட்ட வேண்டும் என்று நமது நிதியமைச்சர்கள் பெரும் பாடுபடுவதைக் காண முடிகிறது. சீனாவைவிட அல்லது அமெரிக்காவைவிட நாம் வளர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்று ஓட்டப் பந்தய வீரனைப் போல ஓடுகிறார்கள்.

உண்மையில் இந்த வளர்ச்சி என்பது பெரும்பாலும் புத்தகக் கணக்காகவே உள்ளது என்பது, ஒரு வேதனைக்குரிய உண்மை. அதாவது எல்லா விதமான பரிமாற்றங்களையும் பணமாகக் காட்டிவிட்டால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியாக அமையும் என்று கணக்கிடுகின்றனர். ஆனால், சமூகத்துக்கு நன்மை பயக்கும் செயல்பாடுகளையும் உற்பத்தியையும் கணக்கில் கொள்வதில்லை.

சான்றாக, மரங்களை நடுவதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பயன், மிகப் பெரிய பயனாக உள்ளது. அந்த மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணக்கில் சேர்ப்பதில்லை. ஆனால், மரத்தை வெட்டி அதைப் பண மதிப்பாகக் காட்டினால், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வந்துவிடுகிறது. இப்படி இந்த வளர்ச்சிக் கணக்கு நடைமுறைக்கு முரணாக உள்ளது.

கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்.

தொடர்புக்கு: adisilmail@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x