Published : 26 Sep 2015 12:55 PM
Last Updated : 26 Sep 2015 12:55 PM
ஒரு பண்ணையாளர் தனது உழைப்புக்கான ஊதியத்தை வரவு செலவில் பெரும்பாலும் குறிப்பிடுவதே இல்லை. ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் மேலாளருக்கு என்ன ஊதியம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவுக்காவது கணக்கிடப்பட வேண்டும் என்கிறார் சத்தியமங்கலம் சுந்தரராமன். ஏனெனில், ஒரு பண்ணை உரிமையாளர் இயற்கையின் சாதகப் பாதகங்கள், விலை ஏற்ற இறக்கங்கள், பூச்சித் தாக்குதல்கள் போன்ற கணித்தறிய முடியாத சவால்களை ஏற்றுக்கொண்டுதான், தனது பண்ணையை நடத்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவளிக்கிறார். இதை எந்தக் கொள்கை வகுப்பாளர்களும் கண்டுகொள்ளவில்லை என்பது இவருடைய ஆதங்கம்.
இயற்கை விளைச்சல்
இவர் 2,200 கிலோ மஞ்சள் விளைச்சலையும் சில முறை எடுத்துள்ளார். இயற்கை சாதகமாக இருக்கும் நேரங்களில் இது சாத்தியம். வேதிமுறை வேளாண்மையில் 1,000 கிலோவுக்கும் குறைவாகவே விளைச்சல் எடுத்துள்ளார். ஆனால், இயற்கைமுறைக்கு மாறிய பின்னர் 1,500 கிலோவுக்கும் குறைவாக விளைச்சல் எடுக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இயற்கை வழி வேளாண்மை என்பது பாதகமான சூழலிலும்கூட நஷ்டத்தைக் கொடுக்காத முறை என்பது இவருடைய ஆணித்தரமான கருத்து.
மஞ்சள் சாகுபடி கணக்கு
இவருடைய மஞ்சள் சாகுபடி வரவுக் கணக்குகளைப் பார்ப்போம்:
ஒரு ஏக்கர் சாகுபடிச் செலவு: (மஞ்சள் நடவு செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்பு பல பயிர் சாகுபடி செய்ய வேண்டும். அவை பசுந்தாள் உரமாகப் பயன்படும்)
2 முறை உழவு, 4 ஏருழவு ரூ. 400, மண்புழு உரம் 6 டன் (சொந்தம்) செலவில்லை, பல பயிர் விதைகள் (25 கிலோ) ரூ. 500, பார் அமைக்க உழவு ரூ. 1,000, பார் கோதுதல் ரூ. 400, நுண்ணுயிர் கலவை உரம் (சொந்தம்) செலவில்லை, நுண்ணுர் வித்துகள் ரூ. 90, வளர்ச்சி ஊக்கிகள் (சொந்தம்) செலவில்லை, பலபயிர் மடக்கி உழுதல் ரூ. 1,000, மஞ்சள் நடவு பார் ஓட்ட ரூ. 100, பார் கோதுதல் ரூ. 600, விதை மஞ்சள் (சொந்தம்) செலவில்லை, மஞ்சள் நடவு ரூ. 360, சுரண்டு களை (12-ம் நாள்) ரூ. 600, கொத்து களை (22-ம் நாள்) ரூ. 600, சுரண்டு களை (35-ம் நாள்) ரூ. 800, இடைவெளியில் பலபயிர் விதைப்பு ரூ. 160, களை எடுப்பு (55-ம் நாள்)ரூ. 600, பலபயிர் பிடுங்கி மூடாக்கு ரூ. 600, மூடாக்கு மண் அணைப்பு ரூ. 800, களை எடுப்பு (120-ம் நாள்) ரூ. 600, 10 முறை வளர்ச்சி ஊக்கிகள் - பூச்சிவிரட்டிகள் தெளிப்பு செலவுரூ. 1,250, நுண்ணுயிர் வித்து ரூ. 1,200, திறமி ரூ. 120, பாசனம் 25 முறை ரூ. 2,500, அறுவடைச் செலவு ரூ. 5000, மஞ்சள் வேகவைத்தல் மற்றும் பிற அறுவடை பிந்தைய செலவுகள் ரூ. 7,000
ஆக மொத்தம் ரூ. 26,280 (தனது மேலாண்மைக்கான ஊதியத்தை இவர் இதில் குறிப்பிடவில்லை)
வரவு
இவர் 15 குவிண்டால் முதல் 22 குவிண்டால்வரை எடுத்துள்ளார். எனவே, வருமானத்தைப் பின்வருமாறு கணிக்கலாம்:
இவர் 2,200 கிலோ மஞ்சள் விளைச்சலையும் சில முறை எடுத்துள்ளார். இயற்கை சாதகமாக இருக்கும் நேரங்களில் இது சாத்தியம். வேதிமுறை வேளாண்மையில் 1,000 கிலோவுக்கும் குறைவாகவே விளைச்சல் எடுத்துள்ளார். ஆனால், இயற்கைமுறைக்கு மாறிய பின்னர் 1,500 கிலோவுக்கும் குறைவாக விளைச்சல் எடுக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இயற்கை வழி வேளாண்மை என்பது பாதகமான சூழலிலும்கூட நஷ்டத்தைக் கொடுக்காத முறை என்பது இவருடைய ஆணித்தரமான கருத்து.
புதிய முறைகள்
இவருடைய பண்ணையில் அறுவடையான மஞ்சளைப் பாதுகாக்கச் சாண எரிவாயுவைப் பயன்படுத்திப் புகைமூட்டம் போடும் புதிய தொழில்நுட்பம் ஒன்றைப் புகுத்தியுள்ளார். மரப்பயிர்களை அதிக அளவில் நட்டு வளர்த்து, தனது பண்ணையை ஒரு சோலையாகவும் உருவாக்கியுள்ளார்.
இவருடைய மண்ணில் இப்போது மட்கும் தன்மை அதிகரித்துள்ளது. இவருடைய கிணற்று நீர், உப்புத்தன்மை நீங்கி நல்ல நீராக மாறியுள்ளது. கிணற்றில் நீர்மட்டம் நன்கு உயர்ந்துள்ளது. நீர் உயர்வுக்குக் காரணம் தனது நிலத்தில் ஏராளமாகக் காணப்படும் மண்புழுக்கள் என்று குறிப்பிடுகிறார். இங்கு பெய்யும் மழையின் பெரும்பான்மையான நீர், இவருடைய நிலத்தைவிட்டு வெளியேறுவது கிடையாது. காரணம் இங்குக் காணப்படும் மண்புழுக்கள் உருவாக்கியுள்ள துளைகள். இந்த நுண்துளைகள் வழியாக நீர் உள்ளிறங்கி விடுகிறது. எனவே நீர்மட்டமும் உயர்கிறது.
(அடுத்த முறை: தண்ணீர் சேகரிப்பில் சாதிக்கும் விவசாயி) சுந்தரராமன், தொடர்புக்கு: 98427 24778
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT