Published : 12 Sep 2015 12:23 PM
Last Updated : 12 Sep 2015 12:23 PM

‘நான் இருக்கிறேன் என்ற நானா பாடேகர்!

ஒரு பக்கம் நாட்டுக்காகப் போரிட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் வீதியில் போராடுகிறார்கள். மற்றொரு பக்கம், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ‘விரைவில் விடிவு வரும்' என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருக்கிறார். ஆனால், விவசாயிகளுக்கு எப்போது விடிவு என்பது கேள்விக்குறிதான்!

பாடேகரின் உதவி

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்ய முன்வந்துள்ளார் பிரபல இந்தி நடிகர் நானா பாடேகர்.

சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதிக்குச் சென்ற அவர், தற்கொலை செய்துகொண்ட 62 விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.15 ஆயிரம் நிதியுதவியை வழங்கியுள்ளார். விதர்பா பகுதியில்தான் விவசாயிகள் தற்கொலை அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் மாரத்வாடா பகுதியில் 112 விவசாயிகளின் குடும்பத்தைச் சந்தித்து, அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்துள்ளார். இன்னும் 700 விவசாயிகளின் குடும்பங்களை அவர் சந்திக்கப்போவதாகத் தெரிகிறது.

அரசு என்ன செய்கிறது?

"நான் செய்வது ஒன்றும் பெரிய காரியமல்ல. என்னைப் போலவே பலரும் உதவி செய்ய நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சரியான மனிதர்களைப் போய்ச் சேர வேண்டுமென அவர்கள் நினைக்கிறார்கள். இப்போது நானே விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று, முடிந்த நிதியை அளித்து வந்திருக்கிறேன்.

விவசாயிகளுக்கு அடிப்படைத் தேவைகளான மின்சாரத்தையும் நீரையும் அரசு வழங்க வேண்டும். இன்றைக்குத் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள், நாளை இதைவிட பயங்கரமான செயல்பாடுகளிலும் இறங்கும் நிலை வரலாம். அதைத் தடுக்க வேண்டுமானால் அரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார் நானா பாடேகர்.

மற்ற நடிகர்களும்

நிதியுதவி செய்ததோடு நிற்காமல், தற்கொலை எண்ணத்துடன் இருக்கும் விவசாயிகளை, தன்னுடன் பேசுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார் நானா. இந்தப் பிரச்சினையை அரசிடம் கொண்டுசென்று விவாதிக்கவும் அவர் முடிவெடுத்துள்ளார்.

முதல் நாள் ‘வெல்கம் பேக்' திரைப்பட நிகழ்ச்சியில் அனில் கபூர், ஜான் ஆபிரஹாம் போன்றோருடன் கலந்துகொண்டுவிட்டு, அடுத்த நாள் விவசாயிகளைச் சந்தித்துள்ளார் நானா பாடேகர். அவருடைய சமூக அக்கறையை விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் பாராட்டியிருக்கிறார்கள்.

இவரைப் போல மராத்தி நடிகர்கள் மகரந்த் அனாஸ்புரே, திலீப் பிரபவால்கர் போன்றோரும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்காக நிதியுதவி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x