Published : 28 Aug 2020 03:31 PM
Last Updated : 28 Aug 2020 03:31 PM
இந்தியப் பின்னணியில் பி.டி.பருத்தி உரிய பலன்களைத் தரவில்லை. அத்துடன் முன்வைக்கப்படும் வாக்குறுதிகளுக்கு மாறாக மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் பிரச்சினைகளையே கொண்டுவரும் என்று உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பங்கேற்ற இணையக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
இந்தியாவில் 18 ஆண்டுகளாக பி.டி. பருத்தி எனப்படும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி பயிரிடப்பட்டுவருகிறது. முதலில் சட்டத்துக்குப் புறம்பாகவும், பிறகு சட்டரீதியாகவும் பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பி.டி. பருத்தி ஏற்படுத்தும் பிரச்சினைகள் குறித்த இணையக் கருத்தரங்கம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த இணையக் கருத்தரங்கை வளங்குன்றா வேளாண்மைக்கான மையம், ஜாதன், ஆஷா, இந்தியப் பாதுகாப்பான உணவு அமைப்பு ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்திருந்தன.
பூச்சிக்கொல்லிகள் போதும்
"பயிர்களில் பூச்சிகளைக் கொல்வதற்கு ஆபத்தான வேதிப்பொருள்களான ஆர்செனிக், டி.டி.ட்டி., எண்டோசல்பான், மோனோகுரோடோபாஸ், கார்பரில், இமிடாக்லோபிரிட் போன்ற பூச்சிக்கொல்லிகள் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தப்பட்டும்கூட, உரிய பலன்களைத் தராத தொழில்நுட்பங்களாகவே உள்ளன. இந்தப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதன் மூலம் அறுவடை பெருகுவதாக கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசுக் கொள்கை வகுப்பாளர்களும் பேசி வருகின்றனர். ஆனால், அவை பூச்சிகளை தற்காலிகமாகவே கட்டுப்படுத்துகின்றன. இரண்டாம் நிலைப் பூச்சிகள் உருவாகவும், ஏற்கெனவே உள்ள பூச்சிகள் தடுப்புத்திறனைப் பெறவுமே உதவியுள்ளன.
அதேநேரம் இதற்கு எதிராக சூழலியல் சார்பு வேளாண்மையை முன்னெடுத்துவரும் உழவர் குழுக்களுக்கு மக்கள் செயல்பாட்டுக் குழுக்கள், அரசுகள், ஐ.நா., உணவு- வேளாண்மைக்கான அமைப்பு ஆகியவை தற்போது ஆதரவைத் தரத் தொடங்கியுள்ளன" என்று உணவு- வேளாண்மைக்கான அமைப்பின் (FAO) இந்தியாவுக்கான முன்னாள் தூதர் பீட்டர் கென்மோர் கூறினார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக இயற்கை வளத் துறையின் மதிப்புறு பேராசிரியர் ஆண்ட்ரு பால் குடிரெஸ் கூறுகையில், "தற்போதுள்ள வேளாண் முறைகள் உரிய பலன்களை அளிக்காமல் பொருளாதார நெருக்கடி அதிகரித்துவருவதன் காரணமாகவே பருத்தி உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுவருகின்றனர். இதற்கான சிறந்த தீர்வு, மரபணு மாற்றப்பட்ட முறையைக் கைவிட்டுவிட்டு, மரபணு மாற்றப்படாத குறுகிய காலப் பருத்தி வகைகளுக்கு மாறுவதுதான்" என்றார்.
விளைச்சல் சரிவு
"உலகிலேயே மகாராஷ்டிரத்தில்தான் பருத்தி விளைச்சல் மிகக் குறைவானதாக இருக்கிறது. பி.டி. பருத்தி வகைகளைப் பயன்படுத்தியும், மிக அதிக அளவில் உரமிட்டாலும்கூட விளைச்சல் அதிகரிக்கவில்லை. ஆப்பிரிக்காவில் மானாவாரி நிலங்களில், எந்த நவீனத் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படாமல் பயிரிடப்படும் பருத்தியைவிட மகாராஷ்டிரத்தில் விளைச்சல் குறைவாக இருக்கிறது.
இந்தியப் பருத்தி விளைச்சல் என்பது கடந்த 15 ஆண்டுகளாக 36-வது நிலையிலேயே தேங்கிக் கிடக்கிறது. அதேநேரம் பி.டி. பருத்திப் பயிரிடல் அதிகரித்துள்ளபோதும், அதற்கு நேர்மாறாகப் பூச்சிக்கொல்லிப் பயன்பாடும் அதிகரித்துவருகிறது. அது மட்டுமில்லாமல் செலவும் அதிகரித்து, நஷ்டத்தையே தந்து வருகிறது" என்று வாஷிங்டனை மையமாகக் கொண்ட சர்வதேச பருத்தி ஆலோசனைக் குழுவின் தொழில்நுட்பத் தகவல் பிரிவுத் தலைவர் முனைவர் கேஷவ் கிராந்தி தெரிவித்தார்.
பி.டி. பருத்தியில் இத்தனை பிரச்சினைகள் இருக்கும் நிலையில், இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்கள் அனுமதிக்கப்படக் காத்திருக்கின்றன. பி.டி.கத்தரிக்காய், டெல்லி பல்கலைக்கழகத்தின் களைக்கொல்லியைத் தாங்கும் மரபணு மாற்றப்பட்ட கடுகு, மான்சாண்டோவின் களைக்கொல்லியைத் தாங்கக்கூடிய பி.டி. சோளம் போன்றவை முறை சார்ந்த அனுமதிக்காகக் காத்திருக்கின்றன. எனவே, பி.டி. பருத்தியில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை இந்தியாவில் அனுமதிக்கப்படக் கூடாது என்று மேற்கண்ட அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT