Published : 05 Sep 2015 02:42 PM
Last Updated : 05 Sep 2015 02:42 PM
கொல்லிமலையில் மலைவாழ் பழங்குடிப் பெண்கள் நடத்தும் பாரம்பரிய விதை வங்கி, அந்த மலையில் உள்ள விவசாயிகளைப் பாதுகாத்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகளுள் மிகவும் முக்கியமானது. அமானுஷ்யமும் இயற்கையும் இரண்டறக் கலந்த இடங்களில் இந்த இடம் கொஞ்சம் புதுமையானது. காரணம், இங்குள்ள தெய்வம்!
கொல்லிப்பாவை எனும் பெண் தெய்வம்தான், இந்த மலையை ஆட்சி செய்வதாக மக்கள் நம்புகிறார்கள். எந்த இயற்கைப் பேரிடராலும் மனிதர்களாலும் அழித்துவிட முடியாத இயற்கையாகவே அமைந்த தெய்வம்தான், இந்தக் கொல்லிப்பாவை என்று நம்பப்படுகிறது. அதனால் இதை ‘மாயா இயற்கைப் பாவை' என்று கூறுகிறது ஒரு நற்றிணை பாடல்.
இயற்கைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிற இந்தக் கொல்லிமலையில், இன்னொரு புதுமையும் உண்டு. அது வேறெங்கும் காணக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
இந்த மலையில் உள்ள கிராமங்களில் ஒன்றான துவரப்பள்ளத்தில் உள்ளது பாரம்பரிய விதை வங்கி. முழுக்க முழுக்க மலையினப் பெண்களால் மட்டுமே நடத்தப்படும் இந்த வங்கி, கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
மாறும் பருவநிலை
தற்சமயம் உலகின் மிக முக்கியச் சுற்றுச்சூழல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது பருவநிலை மாற்றம். இதன் காரணமாக, பருவமழை தப்பிப் பெய்கிறது. பெய்கிற மழையின் அளவும் குறைகிறது. நிலத்தடி நீர் பல இடங்களில் வற்றிவருகிறது. இதற்கிடையே உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
கைகொடுக்கும் விதைகள்
பாரம்பரியமான விவசாய முறைகளைக் காப்பாற்றுவதில் பெரும் பங்கு விதைகளுக்கு இருக்கிறது. சாமை, தினை, கேழ்வரகு போன்ற பாரம்பரியச் சிறுதானிய விதைகளின் மூலம் மிகக் குறைந்த நீரைக் கொண்டு, நிறைவான விளைச்சலைப் பெற முடியும். மேலும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி போன்ற எந்தக் கேடு தரும் விஷ(ய)ங்களும் பாரம்பரிய விவசாயத்துக்குத் தேவையில்லை. எனவே, இத்தகைய பாரம்பரிய விதைகளைச் சேகரித்து அவற்றைப் பயிரிடுவதன் மூலம் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக மனிதர்களால் போராட முடியும். அதனால்தான் பாரம்பரிய விதைகளைச் சேகரிக்கும் பணிகள் பரவலாக நடக்கின்றன.
மலைச்சாரல் மகளிர்
அப்படிப்பட்ட பாரம்பரியமான விதைகளைச் சேகரித்து, பழங்குடி மக்களுக்கு வழங்கி விவசாயத்தைக் காப்பாற்றிவருகிறது கொல்லிமலையில் உள்ள ‘சமுதாய விதை வங்கி'. துவரப்பள்ளத்தில் உள்ள ‘மலைச்சாரல் மகளிர் சுயஉதவிக் குழு' மூலம் இந்த விதை வங்கி நடத்தப்படுகிறது.
“எங்க சங்கத்துல மொத்தம் 24 பேர் இருக்கோம். எல்லா ரகத்திலும் சிறுதானிய விதைங்க சேகரிச்சுவெச்சிருக்கோம். தேவைப்படுற விவசாயிங்களுக்கு இந்த விதைங்கள தருவோம். ஒரு கிலோ விதை வாங்குனா, அதைத் திருப்பித் தரும்போது இரண்டு கிலோவா கொடுக்கணும். அது மட்டும்தான் இங்க சட்டம். வேறு எந்தக் கெடுபிடியும் இல்ல. விடுமுறை நாளு எல்லாம் கிடையாது. எப்ப வேணும்னாலும் வந்து வாங்கிக்கலாம்.
இந்த விதை வங்கி ஆரம்பிக்கிறதுக்கு சென்னை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் உதவி செஞ்சது. கட்டிடம் கட்டுறதுக்கான பணத்தை அவங்க கொடுத்தாங்க. மத்தபடி, இந்த விதை வங்கியைக் கட்டுறதுக்கான நிலம், வங்கி நிர்வாகம் எல்லாமே நாங்களே பாத்துக்குறோம். அதனாலதான் இதைச் சமுதாய விதை வங்கினு சொல்றோம்” என்கிறார் இந்த வங்கியில் பணியாற்றும் செல்லம்மாள்.
மறைந்து போன பாதுகாப்பு முறை
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த தலைமை ஆய்வாளர் என்.குமார், இந்த முயற்சி குறித்துப் பகிர்ந்துகொண்டார்:
“இந்த மலையில் வாழும் மக்கள் பாரம்பரியமாகத் தொம்பை மற்றும் குதிர் ஆகிய இரண்டு முறைகளில் விதைகள், நெல் ஆகியவற்றைச் சேகரித்துப் பாதுகாத்துவந்தனர். ஆனால், இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மெல்ல மெல்ல மறைந்துவருகின்றன. எனவே, விதைகளைப் பாதுகாக்க அவற்றைச் சேமிக்கும் முறைகளையும் காக்க வேண்டியது அவசியமாகிறது. சிலர் மட்டுமே மேற்கண்ட முறைகளில் விதைகளைச் சேமிக்கின்றனர். ஆனால், பல வகையான விதைகளை ஒரே இடத்தில் சேமிக்க முடியாது.
அதனால் அவற்றை ஒரே இடத்தில் பாதுகாக்க முடிவு செய்து, விதை வங்கி ஒன்றை ஏற்படுத்தினோம். அதுகுறித்தும் பாரம்பரிய விதைகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இந்த வங்கி மூலம் கடந்த ஆண்டு மட்டும் ஆயிரம் கிலோ விதைகள், விவசாயிகளுக்குக் கடனாக வழங்கித் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன” என்றார்.
இப்படியாக, இந்த மலையில் இருக்கும் வானம் பார்த்த விவசாயிகளை இந்த விதை வங்கி காப்பாற்றுகிறது. வங்கியில் இருக்கும் பாரம்பரிய விதைகளை, இந்த மலைவாழ் ‘கொல்லி' பாவைகள் பாதுகாக்கின்றனர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT