Published : 19 Sep 2015 10:54 AM
Last Updated : 19 Sep 2015 10:54 AM

ஓரு உயிரினம் ஒரு தருணம்: காட்டில் ஒரு பிறப்பு

காட்டுயிரில் ஈடுபாடு கொண்டவர்களூக்கு அவர்கள் அறிந்திருந்து, ஆனால் இதுவரை பார்த்திராத ஓர் உயிரினத்தை முதல்முறையாகக் காண்பது ஒரு பரவசமான அனுபவம்தான்.

முன்னொரு நாள், வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி வந்துகொண்டிருந்தேன். அட்டகட்டியைத் தாண்டி மலையிலிருந்து இறங்க ஆரம்பித்தபோது, பத்தாவது கொண்டை ஊசி வளைவில் ஜீப் திரும்பியபோது, இடதுபுற மலை உச்சியில் துருத்திக்கொண்டிருந்த பாறை ஒன்றில், நீல வானப் பின்புலத்தில் ஒரு விலங்கு நின்றுகொண்டிருப்பது நிழலுருவமாகத் தெரிந்தது. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இருநோக்கியைக் கண்களில் பொருத்திப் பார்த்தேன். வரையாடு! ஆடாமல் அசையாமல் ராணுவ அணிவகுப்பொன்றில் பங்கெடுப்பதுபோல நின்றுகொண்டிருந்தது.

தேடித் தேடி வேட்டை

நான் முதன்முதலாகப் பார்க்கும் வரையாடு. கபில நிறமுடைய அதன் முதுகில் வெள்ளைச் சேணம் ஒன்றிருப்பது போன்ற தோற்றத்தின் மூலம், அது ஒரு முதிர்ந்த ஆண் வரையாடு என்பதை அறிய முடிந்தது. சென்ற நூற்றாண்டில் வெள்ளையர்களும், அவர்களைப் பின்பற்றி நம்மூர்ப் பிரமுகர்களும் காடுகளை வேட்டையாடிச் சீரழித்தபோது இதை ‘Saddle back’ என்று குறிப்பிட்டுத் தேடிச் சுட்டார்கள்.

இந்த மலையாட்டைச் சுட்டுக் கொன்று, தோலைப் பாடம்செய்து மாளிகைகளிலும் கிளப்களிலும் சுவர்களில் தொங்கவிட்டு அழகு பார்த்தனர். இது ஒரு பெரிய விருதாக (trophy) கருதப்பட்டது. ஊட்டியில் பல பங்களாக்களில் இந்த விருதுகளை இன்றும் காண முடியும். இனப்பெருக்கத்துக்கு இன்றியமையாத முதிர்ந்த ஆண் வரையாடுகளைத் துரத்தித் துரத்தி வேட்டையாடியதால், மரபணு சீரழிவு ஏற்பட்டு, இந்த உயிரினமே அழியும் நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில்தான் ‘காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம்-1972’ அமலாக்கப்பட்டது.

ஓரளவு மீட்சி

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழும் இந்த மலையாடு, வேட்டையாலும் காடழிப்பாலும் அற்றுப்போகும் நிலைக்குவந்து, ஒரு காலகட்டத்தில் இருநூறு வரையாடுகளே எஞ்சியிருந்தன. தீவிரப் பாதுகாப்பால் நிலைமை இன்று மேம்பட்டுள்ளது. மூணாறு அருகே உள்ள ராஜமலை சரணாலயத்தில் வரையாடுகளை இன்று வெகு எளிதாகக் காண முடிகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், நெடிதுயர்ந்த மலைகளிலுள்ள வரையாட்டின் வாழிடத்தில்தான் குறிஞ்சி மலர்கிறது. அமராவதி போன்ற நதிகளும் உற்பத்தியாகின்றன.

ஒவ்வொரு வளைவில் திரும்பும்போதும் நான் அந்தப் பாறையை நோக்கியபோது, வரையாடு அதே நிலையில் இருப்பது தெரிந்தது. மலையை விட்டு இறங்கி ஆழியாறில் டீ குடித்துவிட்டு, அங்கிருந்து இருநோக்கியில் அந்த முகட்டைப் பார்த்தால், அப்போதும் வரையாடு அங்கேயே இருந்தது. ஏறக்குறைய ஒரு மணி நேரம் அந்த நிலையிலேயே நின்றுகொண்டிருந்தது.

பிரமிப்பான காட்சி

கோயம்புத்தூரில் வீடு வந்து சேர்ந்ததும் காட்டுயிர் தொடர்பான புத்தகங்களை எடுத்து வரையாடுகளின் செயல்பாடுகள் பற்றி தேடினேன். கூகுளுக்கு முற்பட்ட காலமாயிற்றே. ஒரு நூலில் பதில் கிடைத்தது. பெட்டை வரையாடு ஒன்று குட்டி ஈனும்போது, ஆண் ஆடு அருகில் ஒரு பாறையின் மீது நின்று, அது குட்டி போட்டு முடிந்து, அந்த இடத்தை விட்டுப் போகும்வரை சுற்றுப்புறத்தைக் கண்காணிக்கும் என்று ஒரு குறிப்பு கண்ணில்பட்டது. அன்றுவரை கண்டிராத ஓர் அரிய உயிரினத்தைப் பார்த்த மகிழ்ச்சியுடன், கானகத்தில் ஒரு புதிய உயிரின் வரவு சார்ந்த காட்சியைக் கண்ட பிரமிப்பும் என்னுள் சேர்ந்துகொண்டது.

- கட்டுரையாளர், பிரபல சூழலியல் எழுத்தாளர்

தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x