Last Updated : 08 Aug, 2015 01:09 PM

 

Published : 08 Aug 2015 01:09 PM
Last Updated : 08 Aug 2015 01:09 PM

யானைகளிடமும் அகிம்சை வழிதான் சரிப்படும்!-ஆராய்ச்சியாளர் ஆனந்தகுமார் நேர்காணல்

சர்வதேச யானை நாள் ஆகஸ்ட்:12

வால்பாறையில் ‘என்.சி.எஃப்’ என்ற இயற்கைப் பாதுகாப்பு அமைப்புக்காகப் பணியாற்றிக ்கொண்டிருக்கும் ஆனந்தகுமாருக்கு, ‘பசுமை ஆஸ்கர்’ என்றழைக்கப்படும் ‘வைட்லி விருது’ சமீபத்தில் வழங்கப்பட்டது. யானை-மனிதர் எதிர்கொள்ளல் தொடர்பான அவரது கடந்த காலப் பணிகளுக்காகவும் எதிர்காலப் பணிகளுக்காகவும் சேர்த்து இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. வால்பாறையில் ஆனந்தகுமாருடன் உரையாடியதிலிருந்து…

இயற்கை பாதுகாப்பு என்ற உலகத்தில் எப்படி நுழைந்தீர்கள்?

மனோதத்துவம் படித்துக்கொண்டிருந்த எனக்கு விலங்குகளின் உளவியல் மீது பெரிதும் ஈடுபாடு இருந்தது. எனது முனைவர் பட்ட வழிகாட்டி டாக்டர் மேவா சிங்தான் சூழலியலை நோக்கி என்னை அழைத்துவந்தார். குரங்குகளின் சமூகக் குணங்களை ஆய்வுசெய்வது குறித்த அவரது திட்டத்தில் நானும் இணைந்தேன். பிறகு தேவாங்குகள் குறித்த ஆய்வு, ஆனைமலை புலிகள் சரணாலயப் பகுதியில் பெரிய பாலூட்டிகளின் பரவலைப் பற்றிய ஆய்வுக்குப் பிறகுதான், யானைகளிடம் வந்தேன்.

யானைகளைப் பொறுத்தவரை நீங்கள் முதலிலேயே யானை-மனிதர் எதிர்கொள்ளல் என்ற பிரச்சினையை எடுத்துக்கொண்டீர்களா?

இதை ‘யானை-மனிதர் மோதல்' என்று பலரும் சொல்கிறார்கள் ‘யானை-மனிதர் எதிர்கொள்ளல்' என்றுதான் இதைச்சொல்ல வேண்டும். 2002 வாக்கில் மழைக்காட்டு மீளமைப்புத் திட்டம் (ரெஸ்டோரேஷன் புரோகிராம்) தொடர்பாகத் தேயிலைத் தோட்ட மேனேஜர்களுடன் எனது சகாக்களான திவ்யா முத்தப்பா, சங்கர்ராமன் உள்ளிட்டோர் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு மேனேஜர் 'யானை-மனிதர் எதிர்கொள்ளல்' என்பது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்த சிக்கலைத் தீர்க்க ஏதாவது செய்யுங்களேன் என்று கேட்டுக்கொண்டார். அப்படித் தொடங்கியதுதான் இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தில் இப்போது எனக்கு உறுதுணையாக இருப்பவர் கணேஷ் ரகுநாதன்.

எதிர்கொள்ளலால் ஏற்படும் சேதங்கள் பற்றி...

ஆனைமலை சரணாலயம் சார்ந்த பகுதிகளில் யானை நடமாட்டம் குறித்து ஆய்வுசெய்தோம். ரேஷன் கடைகள், வீடுகள், சில நேரம் பள்ளிகளும் யானைகளால் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. 1994-லிருந்து 2015-வரை 41 பேர் யானைகள் தாக்கி உயிரிழந்திருக்கிறார்கள். இறந்தவர்களில் 36 பேருக்கு, தங்களுக்கு அருகில் யானைகள் இருந்த விஷயம் தெரியாது. பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டுக்குச் செல்லும் நேரத்தில், பெரும்பாலும் இருட்ட ஆரம்பிக்கும் நேரத்தில்தான், இந்த எதிர்கொள்ளல் நிகழ்ந்து மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. தகவல் தெரிந்திருந்தால் அவர்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.

பகல் நேரத்தில் மனித நடமாட்டம், வாகனங்களின் போக்குவரத்து போன்றவை காரணமாக யானைகள் ஒரு துண்டுச்சோலையில் தங்கிவிட்டு, இருட்ட ஆரம்பித்த பிறகு மற்றொரு துண்டுச்சோலைக்குச் செல்லும். கடல் போல பரந்திருக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கிடையே தீவுபோல் அமைந்திருக்கும் துண்டாகிப்போன மழைக்காட்டுப் பகுதியே இவ்வூர் மக்கள் துண்டுச்சோலை என்றழைக்கின்றனர். வால்பாறை பகுதியில் கிட்டத்தட்ட 40 துண்டுச்சோலைகள் மட்டுமே இருக்கின்றன.

யானை - மனிதர் எதிர்கொள்ளலில் கிட்டத்தட்ட 27 பேர் சாலைகளில் இறந்திருக்கிறார்கள். துண்டுச்சோலைகளுக்கு இடையில் யானைகள் இடம்பெயரும்போதுதான் இந்த இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தப் பிரச்சினையை முழுவதுமாகப் புரிந்துகொள்வதற்காக யானைகளின் குண இயல்புகள், எதிர்கொள்ளல் நிகழும் இடங்கள், உயிர்-உடைமை சேதங்கள் போன்றவற்றை பாரபட்சமற்ற முறையில் ஆய்வுசெய்தோம்.

எதிர்கொள்ளலின் தன்மை எப்படி இருக்கும்? யானை எப்படித் தாக்குகிறது?

தாக்குதல்களில் இறந்தவர்களில் அநேகமாக யாரையுமே யானைகள் துரத்திக்கொண்டுவந்து தாக்கவேயில்லை. எதிர்பாராத ஒரு சந்திப்பு அருகருகே ஏற்படும்போது, மனிதர் அளவுக்கு யானையும் பீதியடைந்திருக்கும். யானைகள் எப்போதும் எடுத்தவுடனேயே தாக்குவதில்லை. சில எச்சரிக்கை சமிக்ஞைகளைக் கொடுக்கும். போலித் தாக்குதல் தொடுக்கும். அவற்றின் சமிக்ஞை மொழி, மக்களுக்குப் புரியாதபோதுதான் பிரச்சினை. அடிப்படையில், யானைக்கும் மனிதர்களுக்கும் இடையே குறிப்பிட்ட தூர இடைவெளி இருக்க வேண்டும். இருட்டு வேளையில் மனிதரும் யானையும் எதிர்ப்பட நேரிட்டால் யானைகள் எச்சரிக்கை கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. ஆகவே, நேரடியாகத் தாக்கிவிடுகின்றன.

இந்தச் சூழலில் உங்களது தற்போதைய வழிமுறையை எப்போது ஆரம்பித்தீர்கள்?

ஓர் இடத்தில் யானைகள் நடமாட்டம் இருப்பது தெரிந்தால், அந்தப் பகுதி மக்களிடம் நேரடியாகச் சென்று எச்சரிக்கை வழங்கிக்கொண்டிருந்தோம். 2006-லிருந்து, யானைகள் நடமாட்டம் பற்றிய எச்சரிக்கைகளை கேபிள் டிவி மூலம் கொடுத்தோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. கேபிள் டிவியின் இடத்தை டிஷ் டிவி ஆக்கிரமிக்க ஆரம்பித்த பிறகு, எஸ்.எம்.எஸ். மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எச்சரிக்கை தகவல்களை அனுப்பினோம்.

தற்போது 3,000 தனிநபர் எண்கள் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதன்மூலம் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேருக்கு இத்தகவல்கள் தெரியவருகின்றன. இப்படி மக்கள் எச்சரிக்கையடைந்ததால் உயிர்ச் சேதம் மட்டுமல்லாமல் பொருட்சேதமும் பெருமளவில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்கள், மேனேஜர்கள் என்று பல்வேறு தரப்பினரும் உற்சாகமாகப் பங்குகொண்டார்கள். ஒரு பகுதியில் யானைகள் நடமாட்டத்தை அவர்கள் பார்த்தால், உடனடியாக எங்களுக்குத் தகவல் தெரிவிப்பார்கள். நாங்கள் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ். எச்சரிக்கையைக் கொடுப்போம்.

உங்கள் திட்டத்தின் அடுத்த கட்ட பரிணாமம் என்ன?

அடுத்தது ‘அபாய விளக்கு எச்சரிக்கை’. தேயிலைத் தோட்ட காவலாளி ஒருவர் அவரது அனுபவத்தை சொன்னார். ஒருமுறை இரவு நேரத்தில் யானை நடமாட்டம் இருப்பதை, அந்தக் காவலாளி கண்டுகொண்டார். இது தெரியாமல் அந்த இடத்தை நோக்கி ஒருவர் வந்துகொண்டிருந்ததையும் பார்த்துவிட்டார். உடனே, அந்தக் காவலாளி டார்ச் லைட் வெளிச்சத்தை யானைகள் மீது மாற்றி மாற்றி அடித்ததும், அந்த நபர் எச்சரிக்கை அடைந்து வேறு திசையில் சென்றுவிட்டார். காவலாளியின் சமயோசித அறிவால் ஓர் உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்த யோசனையை அடிப்படையாகக் கொண்டு ‘அபாய விளக்கு எச்சரிக்கை’ என்ற முறையைத் தொடங்கினோம். 24 இடங்களில் அபாய விளக்குகளை நிறுவினோம். அந்த அபாய விளக்குகளில் சிம் கார்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். குறிப்பிட்ட ஒரு பகுதியில் யானைகள் நடமாட்டம் தெரிந்தால் சம்பந்தப்பட்ட அந்த சிம் கார்டுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், அபாய விளக்கு சிவப்பு நிறத்தில் மினுக் மினுக் என அடித்தபடி எரியும். சாதாரண மக்களின் அனுபவம் எந்த அளவுக்கு நமக்குத் துணைபுரியும் என்பதற்கு அந்தக் காவலாளியின் யோசனை ஒரு உதாரணம்.

அடுத்தது ‘அபாய விளக்கு எச்சரிக்கை’. தேயிலைத் தோட்ட காவலாளி ஒருவர் அவரது அனுபவத்தை சொன்னார். ஒருமுறை இரவு நேரத்தில் யானை நடமாட்டம் இருப்பதை, அந்தக் காவலாளி கண்டுகொண்டார். இது தெரியாமல் அந்த இடத்தை நோக்கி ஒருவர் வந்துகொண்டிருந்ததையும் பார்த்துவிட்டார். உடனே, அந்தக் காவலாளி டார்ச் லைட் வெளிச்சத்தை யானைகள் மீது மாற்றி மாற்றி அடித்ததும், அந்த நபர் எச்சரிக்கை அடைந்து வேறு திசையில் சென்றுவிட்டார். காவலாளியின் சமயோசித அறிவால் ஓர் உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்த யோசனையை அடிப்படையாகக் கொண்டு ‘அபாய விளக்கு எச்சரிக்கை’ என்ற முறையைத் தொடங்கினோம். 24 இடங்களில் அபாய விளக்குகளை நிறுவினோம். அந்த அபாய விளக்குகளில் சிம் கார்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். குறிப்பிட்ட ஒரு பகுதியில் யானைகள் நடமாட்டம் தெரிந்தால் சம்பந்தப்பட்ட அந்த சிம் கார்டுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், அபாய விளக்கு சிவப்பு நிறத்தில் மினுக் மினுக் என அடித்தபடி எரியும். சாதாரண மக்களின் அனுபவம் எந்த அளவுக்கு நமக்குத் துணைபுரியும் என்பதற்கு அந்தக் காவலாளியின் யோசனை ஒரு உதாரணம்.

இந்தத் திட்டத்தின் வெற்றிக்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

இந்தத் திட்டம் எல்லோருடைய ஒத்துழைப்பிலும் செயல்படுவது. நாங்கள், மக்கள், வனத்துறை என்று எல்லாத் தரப்பும் சேர்ந்ததால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. எஸ்.எம்.எஸ் கிடைத்தவுடனே வனத்துறையின் அதிரடிப்படை, யானைகள் நடமாட்டம் காணப்படும் இடத்துக்குச் சென்று வாகனத்தை நிறுத்தும். இதனால் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வும், வனத்துறை மீது நம்பிக்கையும் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாடுதான் இந்தத் திட்டத்தின் வெற்றிக்குக் காரணம்.

உயிர்ச் சேதங்கள் எந்த அளவுக்கு இப்போது குறைந்திருக்கின்றன?

1994-லிருந்து எங்கள் திட்டம் ஆரம்பித்த 2002 வரை ஆண்டுக்கு மூன்று பேர் என்ற வீதத்தில் உயிரிழந்துகொண்டிருந்தார்கள். இப்போது ஆண்டுக்கு ஒன்று என்ற சராசரிக்குக் குறைந்திருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக உயிர்ச் சேதம் பூஜ்யம்தான்! முக்கியமாக, யானை பயத்தில் வீட்டிலேயே சிறைபட்டது போன்ற நிலையிலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. யானை நடமாட்டத்தைப் பற்றிய தெளிவான தகவல்கள் அவர்களுக்குக் கிடைப்பதால், அதற்கேற்ப தங்கள் வேலைகளை திட்டமிட்டுக்கொள்ள முடிகிறது.

யானைகளின் நடமாட்டத்தைப் பற்றி ஆரம்பத்தில் நாங்கள் மக்களுக்குத் தகவல் தெரிவித்த நிலை மாறி, இப்போது எங்களுக்கு அவர்கள் தகவல் தெரிவித்து, பரவலாக எச்சரிக்கை கொடுப்பதற்கு உதவும் அளவுக்கு மாறியிருப்பதிலிருந்து, மக்களின் பங்கேற்பும் பொறுப்புணர்வும் நமக்குப் புலப்படும். வனத்துறையிலும் பெரும் மாற்றம் வந்திருக்கிறது. ஒரு ஆக்கபூர்வமான சூழலை உணர முடிகிறது.

தொடர்ந்து இப்படிப்பட்ட எதிர்கொள்ளல் தீவிரமாகிவரும் நிலையில், யானைகளும் மனிதர்களும் ஒன்றாக அமைதியாக வாழ முடியாதா?

வாழ முடியும். வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள். வரலாற்றை எடுத்துப்பார்த்தால் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் வர ஆரம்பித்து 120 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன. தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக ஏராளமான மக்களும் இங்கே குடிபுக ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் பின்னணியில் உயிரினங்களின் நலனுக்காக, இந்த இடத்தை விட்டு நீங்கள் வெளியேறுங்கள் என்று மக்களிடமும் சொல்ல முடியாது. காலம்காலமாக தாங்கள் வாழ்ந்துவந்த இடத்தின் பரப்பு குறுக்கப்பட்டுவிட்டதால் யானைகள் பாதிப்புக்குள்ளாவதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. யானைகளைப் பொறுத்தவரை ஓர் இடத்துக்கு விசுவாசமாக இருக்கக்கூடியவை. ஆக, அதன் வாழிடத்துக்கு பாதிப்பு ஏற்படும்போது பிரச்சினை தீவிரமாகிறது.

கழிப்பறை வசதிகள் இல்லாததும் இந்த இறப்புகளுக்கான காரணங்களில் ஒன்று என்றும் சொல்லப்படுகிறதே?

கழிப்பிடங்கள், ஒதுக்குப்புறங்கள் வீட்டிலிருந்து தள்ளியிருக்கும் சூழலில் விடியற்காலையிலோ, இரவு நேரத்திலோ இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்லும் நேரத்திலும் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. வால்பாறை பகுதியில்கூட 21 ஆண்டுகளில் 41 பேர்தான் இறந்திருக்கிறார்கள். அதேநேரம், கோயம்புத்தூர் வனக் கோட்டத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் 69 பேர் யானை-மனிதர் எதிர்கொள்ளலில் இறந்திருக்கிறார்கள்.

இதில் கணிசமானோர் கழிப்பிடம் தேடிச் சென்றபோது தாக்குதலுக்கு உள்ளானவர்கள். வீட்டோடு இணைந்த கழிப்பறைகளின் முக்கியத்துவத்தை இந்தப் பிரச்சினை நமக்கு உணர்த்துகிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைக்குள் சமூகப் பிரச்சினை ஒன்றும் இருப்பதைப் புரிந்துகொண்டு, அந்த மக்களுக்கு அரசு கழிப்பறைகளைக் கட்டித்தந்தால் கணிசமான இறப்புகளைத் தடுக்க முடியும்.

யானை-மனிதர் விவகாரத்தில் மக்கள், அரசுத் தரப்பு, ஊடகங்கள் என்று எல்லோருடைய புரிதலும் எந்த அளவுக்கு இருக்கிறது?

எல்லோரும் யானைப் பிரச்சினை, யானைப் பிரச்சினை என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது, இடத்துப் பிரச்சினை. அணைகள், நீர்மின் நிலையங்கள், செங்கல் சூளைகள், புதுப்புதுக் கட்டிடங்கள், யோகா நிலையங்கள் என்று யானையின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படும் போது யானைகள் சுற்றுவழியில் தானே செல்லும்? அப்படிச் சுற்றுவழியில் செல்லும்போது யானை-மனிதர் எதிர்கொள்ளல் பிரச்சினை தீவிரமாகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்னால் யானைகளையே நாங்கள் பார்த்ததில்லை; ஆனால், இப்போது அடிக்கடி பார்க்க நேரிடுகிறது என்று இங்குள்ள மக்கள் சொல்வதை இந்தப் பின்னணியில் வைத்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினைகளை முற்றிலும் தீர்ப்பதற்கு என்ன வழி?

மனிதர்களும் யானைகளும் அருகருகே வாழ்ந்தேயாக வேண்டும் என்பதால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது. நிரந்தரமாகச் சமாளித்துக்கொண்டு இருக்க முடியும் என்ற சூழல்தான் யதார்த்தம். யானைகளின் கேந்திரத்தில் தொடர்ந்து காடுகளை அழிப்பது, அணைகள் கட்டுவது, நீர்மின் திட்டங்கள் கொண்டுவருவது, சாலைகள் போடுவது என்று கண்ணை மூடிக்கொண்டு செயல்பட்டால், பிரச்சினை இன்னும் மோசமாகத்தான் ஆகும்.

அதேநேரம், யானைகளைத் துரத்தாத, தொந்தரவு கொடுக்காத பகுதிகளில் யானைகளால் பெரிய பிரச்சினை ஏற்படவில்லை என்பது அனுபவப்பூர்வ உண்மை. ஆகவே, ஆங்கிலேயரிடம் நாம் கையாண்ட அகிம்சையை, விலங்குகளிடமும் கையாள்வதுதான் ஒரே தீர்வு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x