Published : 14 Mar 2020 10:58 AM
Last Updated : 14 Mar 2020 10:58 AM

விதை முதல் விளைச்சல் வரை 26: சேமிப்புக் கிடங்கு பூச்சிகள் மேலாண்மை

சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்

தானியச் சேமிப்பின் மிகப் பெரும் எதிரிகளாகக் கருதப்படுபவை புழுப் பூச்சிகள். இவற்றால் இந்தியாவில் ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 1,300 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. புழுப் பூச்சிகள் தானியங்களைத் துளைத்து அவற்றின் சத்துப் பகுதிகளை உண்பதோடு மட்டுமின்றித் தங்களுடைய கழிவுப் பொருட்களால் தானியங்களை அசுத்தப்படுத்தி அவற்றை மனிதன் உண்பதற்கே தகுதியற்றவையாக்கிவிடுகின்றன.

தானியத்தில் பூச்சிகளின் கழிவுப்பொருட்கள் சோ்வதால் ஈரப்பதம் அதிகரிக்கும். ஈரம் அதிகமுள்ள தானியங்களிடையே பூஞ்சாணம் தோன்றித் தானியங்களைக் கெட்டியாக்கித் துா்நாற்றம் வீசச்செய்து முளைக்கும் திறனை இழக்கச் செய்கிறது. சேமிக்கப்படும் தானியங்களில் பூச்சிகளால் மட்டும் 2 முதல் 4.2 சதவீதம் சேதம் ஏற்படுகிறது. எலிகளால் 2 முதல் 5 சதவிகிதமும், பறவைகளால் 0.85 சதவிகிதமும், ஈரப்பதமாற்றத்தால் 0.68 சதவிகிதமும் இழப்பு ஏற்படுகிறது.

பூச்சிகளால் ஏற்படும் சேதங்கள்

1. உணவு தானிய எடைக்குறைவு.

2. உணவு தானியத் தரம் குறைவு.

3. சத்துக்குறைவு.

4. முளைப்புத்திறன் பாதிப்பு.

பூச்சிகள் தானியத்தைச் சேதப்படுத்தும் முறைகளைக் கொண்டு அவற்றை இரு வகையாகப் பிரிக்கலாம்.

1. உள்ளிருந்து உண்பவை.

2. வெளியிலிருந்து உண்பவை.

உள்ளிருந்து உண்பவை பூச்சிகள் தானியத்தைத் துளையிட்டு முட்டையிட்டு அது புழுவாகி உள்ளிருந்தே தின்று வளரும். பின் நன்கு வளா்ச்சியடைந்து வெளிவரும். (எ.கா) அரிசி வண்டு (அ) தானிய வண்டு, தானிய மூக்கு வண்டு, பயறு வண்டு, அந்துப்பூச்சி.

வெளியிலிருந்து உண்பவை

இம்முறையில் பூச்சிகள் தானியங்களில் தங்களைச் சுற்றிக் கூடுபோல் அமைத்து அவற்றுள் வாழும். இவை தானியத்தைத் துளைத்து உட்செல்லாது, வெளியிலிருந்தே தானியத்தைக் குடைந்து உண்ணும் (எ.கா.) சிவப்பு மாவு வண்டு, சப்பட்டைத் தானிய வண்டு.

விளைபொருட்களின் (தானியங்களின்) தரம், சேமிப்பு ஆகியவற்றை நிர்ணயிக்கும் காரணிகளுள் உலா்த்துதல் முக்கியமான ஒன்றாகும். எனவே, தானியங்களில் உள்ள ஈரப்பதத்தைப் பாதுகாப்பான அளவுக்குக் (8-12 சதவீதம்) கொண்டு வருவது அவசியமான ஒன்று. உலா்த்துதலைப் பல்வேறு முறைகளில் செய்து தானியங்களிலுள்ள ஈரப்பதத்தைக் குறைக்கலாம்.

உணவுக்காகச் சேமிக்கப்படும் தானியங்களைத் தவிர மற்ற தானியங்களின் முளைப்புத் திறன் பாதிப்படையாமல் பூச்சி, பூஞ்சாணத் தாக்குதலைக் குறைக்க விதை நோ்த்தி செய்து சேமிக்க வேண்டும். பொதுவாக உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் கீழ்க்கண்ட இருமுறைகளில் சேமித்து வைக்கப்படுகின்றன.

1. மூட்டைகளில் சேமித்தல்.

2. கலன்களில் சேமித்தல்.

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள காப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்தியத் தானியச் சேமிப்பு ஆராய்ச்சிக்கழகம் கண்டுபிடித்த மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஹப்பூர் உலோகக் கலன் (Hapur Metal Bin), செங்கல், மணல், சிமெண்ட் பொருட்களால் உருவாக்கப்பட்ட பூசா குதிர் (Pusa Bin) முதலியவற்றை தானியச் சேமிப்பதற்குப் பயன்படுத்தலாம். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தானியங்கி பூச்சிகளை நீக்கும் கலன், பூச்சிகளைத் தானாகவே அகற்றும் திறன் உடையது. இது 50-250 கிலோ வரைகொள்ளளவுடன், தானியங்களில் 95 சதவீதம் வரை பூச்சிகள் வராமல் பாதுகாக்கும் திறன் கொண்டது.

மேலும், குழாய் வடிவப்பொறி, கூம்பு வடிவப்பொறி, பயறு வண்டுப் பொறி ஆகியவற்றைப் பயன்படுத்திச் சேமிப்பு கலன்களில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பயறு வண்டுகளின் முட்டை நீக்கும் கருவியைக் கொண்டு, பயறு வண்டுகளின் முட்டைகளை, தானியங்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் நீக்கி விடலாம். ஊதா கதிர் விளக்குப் பொறிகளைக் கிடங்குகளில் நீண்ட நாள் சேமித்து வைக்கும்போது பயன்படுத்தலாம்.

சேமிப்பு தானியங்களில் பூச்சிகள் இருக்கிறதா என்பதை 15 நாட்களுக்கு ஒருமுறை கண்காணிக்க வேண்டும். அவ்வாறு பூச்சிகள் இருப்பின் அலுமினியம் பாஸ்பைடு, எத்திலின் டை புரோமைடு போன்ற மிகக் கடுமையான ரசாயனப் புகை நஞ்சு பயன்படுத்தப்படுகிறது.

அவற்றில் தங்கும் நஞ்சு, எஞ்சிய நஞ்சு தானிங்களிலும் படிகிறது. அவற்றை உண்பதால் மனிதர்களுக்குப் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. பழங்காலத்தில் தானியங்களைச் சேமிக்க செம்மண், களிமண் பூச்சுப் பயன்படுத்தினார்கள். வேப்பிலை, நொச்சி இலைகளைத் தானிய மூட்டைகளில் இடையில் அல்லது தானியங்களுக்குள் வைத்து பூச்சித் தாக்குதலிலிருந்து தானியங்களைப் பாதுகாத்தார்கள். தற்போது விளைச்சல் அதிகரித்து கொள்முதல் அளவு அதிகரிக்க, இயற்கையான தானியச் சேமிப்பு முறைகளைப் பயன்படுத்த முடியவில்லை. சேமிக்கும் அளவு அதிகரிக்கும் நிலையில் புகை நஞ்சு பயன்படுத்தாமல், சேமிக்க முடியுமா என்பதும் மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது.

தானியப் பாதுகாப்பு

தானியங்களைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கக் கடைபிடிக்க வேண்டிய பொதுவான வழிமுறைகள்.

1. தானியங்களின் ஈரப்பதம் 8-10 சதவீதத்துக்குள் இருக்குமாறு செய்து சேமித்தல்.

2. குதிர்கள் / கலன்களை நன்றாகச் சுத்தம் செய்து பராமரித்தல்.

3. தானிய மூட்டைகளைக் கட்டைகள், மூங்கில் பாய்களின் மீது அடுக்குதல்.

4. மூட்டைகள் சுவற்றை ஒட்டி இல்லாமல் தனித்தனியாக அடுக்கடுக்காக நல்ல இடைவெளி விட்டு காற்றோட்டமாக வைத்தல்.

5. தானியச் சேமிப்புக்குப் புதிய சாக்குப்பைகள் பயன்படுத்துதல்.

கட்டுரையாளர்கள்

தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com, selipm@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x