Published : 14 Mar 2020 10:34 AM
Last Updated : 14 Mar 2020 10:34 AM

பசுமை எனது வாழ்வுரிமை 23: தற்கொலைகளுக்குக் காரணமான உலக வர்த்தக நிறுவனம்

கு.வி. கிருஷ்ணமூர்த்தி

1999 மார்ச் 5-ம் தேதி நவதான்யா அமைப்பு விதை சத்தியாகிரகத்தை மீண்டும் வலியுறுத்தி, நெறியற்ற, முறைகேடான, அரசு முயற்சிகளுக்கு எதிரான போராட்டங்களை ஏற்பாடுசெய்தது. இதில் 2,500-க்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்துகொண்டு உயிர்ப் பன்மையில் உழவர்களின் உரிமைகளையும், விதைகள் சேமிப்பு பரிமாற்றம் தொடர்பான தங்களுடைய சுதந்திரத்தையும் வலியுறுத்தின.

குறிப்பாக, அப்போது உழவர்களுடைய மரபு வேளாண் அறிவும் பாரம்பரிய விதைகளும் உயிரிக் கொள்ளையடிக்கப்பட்டன (Biopiracy), ஒரு சில பயிர் விதைகளின் மேல் ஒரு சில வணிக நிறுவனங்கள் முற்றுரிமை (Monopoly) பெற்றிருந்தன, இந்த இரண்டுக்கும் எதிராகப் போராட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த விதை சத்தியாகிரகம்தான் உலக வர்த்தக நிறுவனத்துக்கு (World Trade Organization – WTO) எதிரான முதல் பன்னாட்டுப் போராட்டம். காப்புரிமை மூலம் விதை முற்றுரிமைகள் அதிகரித்துவருவதைப் பற்றி, இந்தியா முழுவதும் உள்ள உழவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது மட்டுமின்றி, நாட்டின் திட்டம் தீட்டுபவர்கள் - அரசியல்வாதிகள் உழவர்களின் விதைச் சுதந்திரத்தைப் பாதுகாக்க முயல வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இத்தகைய விழிப்புணர்வுக் கூட்டங்கள் மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகத்தில் 2006-ம் ஆண்டிலும் பிஹார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானில் 2008-ம்ஆண்டிலும் நவதான்யாவால் நடத்தப்பட்டன.

விதை பஞ்சாயத்து

நவதான்யாவின் மற்றொரு குறிப்பிடத்தக்க செயல்பாடு செப்டம்பர் 2000-ம் ஆண்டு நடந்தது. இதில் உலகெங்கிலிருந்தும் 400 தேர்வு செய்யப்பட்ட உழவர்கள் தனித்தன்மை வாய்ந்த விதை பஞ்சாயத்தில் (People’s Bija Panchayat) கலந்துகொண்டனர். இதில், உலக மயமாக்கத்தின் காரணமாக விதை - வேளாண்மை தொடர்பாக உருவான காப்புரிமைகளாலும் விதை முற்றுரிமைகளாலும் எழுந்த சிக்கல்களுக்குத் தகுந்த சான்றுகள் கொடுக்கப்பட்டன. இந்தச் சிக்கல்கள் எவ்வாறு உழவர்களின் தற்கொலைகளைத் தூண்டியுள்ளன என்பதும் இந்தப் பஞ்சாயத்தில் விவாதிக்கப்பட்டு, தீர்வுக்கான வழிமுறைகள் முன்மொழியப்பட்டன.

மாற்றுச் சட்டம்

விதை சத்தியாகிரகம் முன்வைத்த கருத்துகள் அதிக மனித சமூகங்கள், வேளாண் பாதுகாப்பு நிறுவனங்கள், தனிப்பட்ட சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் போன்றோரிடம் இன்றைக்கு நன்கு பரவியுள்ளது. பல இடங்களில் விதை பஞ்சாயத்துகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு தூண்டப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள பல்வேறு ஐ.பி.ஆர். சட்டங்கள் (காப்புரிமைச் சட்டங்கள், விதைச் சட்டங்கள், தாவர வகை பாதுகாப்புச் சட்டம், உயிரிப் பன்மை பற்றிய சட்டங்கள்) விவாதிக்கப்பட்டு தகுந்த செயல்பாடுகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டன. ஐ.பி.ஆர். சட்டங்களுக்கு மாற்றாக, மரபு வேளாண் அறிவையும், பாரம்பரிய விதை ரகங்களையும் பாதுகாக்கக்கூடிய மாற்றுச் சட்டங்கள் ஏற்பட வழிவகை செய்யப்பட்டது.

நவதான்யா அமைப்பே ஒரு மாற்றுச் சட்ட முன்வரைவை (Draft alternate laws) உருவாக்கியது. மூன்றாம் உலக வலையமைப்பாலும் (Third world network) தான்தோன்றி விருப்பத் தேர்வுகளை உருவாக்குவதற்கான ஆப்பிரிக்க ஒற்றுமை நிறுவனத்தாலும் (Organization for African Unity for Creating Sui-genesis options) வணிகம்-சார் அறிவுச் சொத்துரிமைகளின் (Trade Related Intellectual Property Rights, TRIPs) மேல் சாதாரண மக்களின் (குறிப்பாக உழவர்களின்), சமூகங்களின் உரிமைகளின் அடிப்படையில் இந்தச் சட்ட முன்வரைவு சீரமைக்கப்பட்டது. இன்று இந்தியா உட்பட பல நாடுகளில் மரபு வேளாண் அறிவு, உயிர்ப் பன்மை அறிவு, விதைகள் போன்றவற்றைப் பாதுகாக்கப் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதற்கு முக்கியமான தூண்டல் நவதான்யாவின் முயற்சிகள்தாம் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

(தொடரும்)

கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்

தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x