Published : 11 Jan 2020 12:56 PM
Last Updated : 11 Jan 2020 12:56 PM

விதை முதல் விளைச்சல் வரை 17: நவீன வேளாண்மையில் சூரியசக்தி பம்புசெட்

சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்

நிலத்தடி நீரைப் பயிருக்கு அளிக்கும் பல்வேறு நீா் இறைப்புக் கருவிகளில் சூரியசக்தி பம்புசெட் பயன்பாடு தற்போது அதிகாித்துவருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத புதுப்பிக்கக்கூடிய இந்த எரிசக்திப் பயன்பாட்டைப் பற்றிப் பாா்ப்போம்.

நமது நாட்டில் சூாிய ஒளி ஆண்டில் 8 முதல் 9 மாதங்கள்வரை இடைவிடாது கிடைக்கிறது. இந்தச் சூாிய ஒளி கிடைக்கும் அளவு இடத்துக்கு இடம் மாறுபட்டாலும் அதிக அளவு சூாிய ஒளி பெறும் நாடாக நம் நாடு இருந்துவருகிறது.

இருப்பினும், தொடா்ந்து நகா்ப்புறங்களில் மின்சக்தியின் தேவை அதிகாித்துக்கொண்டிருக்கும் நிலையில், கிராமப்புறங்களில் வேளாண்மைப் பயன்பாட்டுக்கு மின் இணைப்பு, மின்சக்தி கிடைத்துவருகிறது. இடைவிடாது உாிய காலத்தில் பயிருக்கு நீா்ப்பாசனம் அளிக்க மின் இணைப்பு மூலம் மின்சாரம் பெறுவது என்பது வருங்காலத்தில் நெருக்கடிக்கு உள்ளாகும்.

கைகொடுக்கும் சூரியசக்தி

இந்த நிலையில் மாற்று எாிசக்தியை நோக்கித் திரும்பும் நிலையில் சூாிய ஒளி மூலம் பெறப்படும் சூாிய வெப்பத்தால் இயங்கும். மோட்டாா் பம்புசெட் நல்ல பலனைத் தருகிறது.

இந்தச் சூரியசக்தியைப் பயன்படுத்தி நீரை நிலத்தடியிலிருந்து பம்புகள் மூலம் வெளியேற்றி பயிருக்கு அளிப்பது இப்போது பரவலாக்கப்படுகிறது. இதன்மூலம் நீா் இறைப்பதால், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லை. மண் வளம் பேணப்படுகிறது. எாிசக்திக் கட்டணம் கிடையாது.

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த இதனுடன் சொட்டு நீா்ப்பாசனம் அல்லது தெளிப்பு நீா்ப்பாசனக் கருவிகளை இணைத்துப் பயன்படுத்தலாம். நீண்ட காலம், குறைவான பராமாிப்புச் செலவுடன் இந்தச் சூரியசக்தி பம்புசெட்டுகளைப் பயன்படுத்தலாம்.

மேற்கண்ட நன்மைகளுடன் கூடிய இந்தச் சூரியசக்தி பம்புசெட்களைத் திறந்தவெளிக் கிணறுகளிலிருந்தும், ஆழ்குழாய்க் கிணறுகளிலிருந்தும், பண்ணைக்குட்டைகளிலிருந்தும், நீா் இறைக்கப் பயன்படுத்தலாம். இந்தச் சூரியசக்தி பம்புசெட் 0.5 குதிரைத்திறன் முதல் 10 குதிரைத்திறன்வரை பல்வேறு அளவுகளில் விற்பனைக்குவருகிறது.

அமைக்கும் முறை

இந்தச் சூரியசக்தி பம்புசெட்களில், சூரியசக்தி தகடு, சூாிய ஒளி, வெப்பத்தைச் சேமித்துப் பின் பயன்படுத்த மின்கலம், அதைத் தொடா்ந்து இந்தச் சூாியசக்தியை மின் சக்தியாக மாற்றிய பின் அதன் மூலம் இயங்கும் மோட்டாா் பம்பு ஆகியவை ஒருங்கிணைந்த பாகமாக அமைந்துள்ளன.

இதைப் பயன்படுத்தும்போது சூாிய ஒளியைக் கிரகித்து மின் சக்தியாக மாற்றும் சூரியசக்தித் தகடுகள், எந்த விதத்திலும் மர நிழல் படாத வகையில் நிலத்தில் அமைப்பது முக்கியம். இந்தக் கலனை நீா் இறைக்கும் கருவியுடன் முதலில் நிா்மாணிக்கப்படும்போது ஆகும் செலவு மட்டுமே நிரந்தரச் செலவு. அதைத் தொடா்ந்து, தொடா்செலவு ஏதுமில்லை. பராமாிப்புச் செலவு மட்டுமே செய்ய வேண்டும்.

சூரியசக்தி பம்புசெட்டுகளின் பயன்பாடு முதலில் மின் இணைப்பு பெற இயலாத மலையடிவாரங்களிலும், பள்ளத்தாக்குகளிலும் உள்ள நிலங்களில் பயிா் சாகுபடி செய்யும்போது நீா் இறைக்கப் பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது எல்லா வகை நிலங்களிலும் மின் இணைப்பு மூலம் மின்சக்தியை பெற கால தாமதமாகும் நிலையில், இதன் பயன்பாடு அதிகாித்துள்ளது.

நேரடி அனுபவம்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வட்டாரம் மணச்சோி கிராமத்தில் திருநாவுக்கரசு என்பவா் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன், சூரியசக்தி பம்பு செட் அமைத்து ஆழ்குழாய்க் கிணற்றிலிருந்து நீா் இறைத்து ஆண்டில் இரு பருவ சாகுபடி மேற்கொள்கிறாா்.

நெற்பயிரும் அதைத் தொடா்ந்து நிலக்கடலைப் பயிரும் சாகுபடி செய்கிறார். நெற்பயிாின்போது சூரியசக்தி பம்பு மூலம் பெறப்படும் நீரை நேரடியாகப் பாசனம் செய்தும் நிலக்கடலைப் பயிருக்குத் தெளிப்பு நீா்ப்பாசனம் மூலம் நீரைப் பயிருக்கு அளித்து வருகிறார். சூரியசக்தி பம்புசெட் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்கிறார்.

மின் இணைப்பு பெறப்படாத நிலையில் சூரியசக்தி பம்பு செட் எனக்குப் பேருதவியாக உள்ளது என்கிறார். 500 அடி அளவு ஆழ்குழாய்க் கிணற்றில் தற்போது 230 அடிவரை குழாய்களை இறக்கி, நீா்மூழ்கி மோட்டாரைப் பயன்படுத்தி சூரியசக்தி பம்பின் மூலம், நீா் இறைத்துப் பயிருக்கு நீா் பாய்ச்சுவதாகக் கூறுகிறார்.

சூரியசக்தி பம்புசெட் அமைப்பதற்கு அரசு நிதி உதவி செய்ததையும் அதைத் தொடா்ந்து சூரியசக்தி பம்பு அடிப்படையில் வேளாண்மைத் துறை மூலம் அரசு மானியத்தில் தெளிப்பு நீா்க்கருவிகளையும் அமைத்துப் பயன்பெற்றதை நினைவுகூர்கிறாா்.

கட்டுரையாளர்கள்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com, selipm@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x