Published : 04 Jan 2020 12:45 PM
Last Updated : 04 Jan 2020 12:45 PM
சு. தியடோர் பாஸ்கரன்
தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில், அகத்திய மலையிலிருந்து கொடைக்கானல் வரை நெடிதுயர்ந்து நீண்டிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை எண்ணற்ற உயிரினங்களுக்கு உறைவிடம்; தாவரங்களும், பறவைகளும் பாலூட்டிகளும் மிகுந்த நிலப்பரப்பு. உலகில் பல்லுயிரியம் அடர்த்தியாக இருக்கும் பதினெட்டு இடங்களில் ஒன்றாக உயிரியலாளர்கள் இதைப் போற்றுகிறார்கள்.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு வந்த ஐரோப்பிய அறிவியலாளர்கள் இந்த உயிரின வளத்தைக் கண்டு மிரண்டுபோனார்கள். ஆனால், அதே காலகட்டத்தில்தான் அந்த வாழிடங்களின் சீரழிவும் தொடங்கியது. தேயிலை போன்ற தோட்டப்பயிர்களுக்காக ஊழிகாலமாய் வளர்ந்திருந்த முதிர்ந்த மழைக்காடுகள் சிரைக்கப்பட்டன. எஞ்சிய வாழிடத்தை வெட்டுமரத்தொழில், அணை, சாலை ஆகியவை காவு கொண்டன. எனினும் ஆங்காங்கே சிறு சிறு தீவுகள்போல் மழைக்காடுகளும் இலையுதிர்காடுகளும் பிழைத்திருக்கின்றன.
இவற்றில் நம் நாட்டுச் சரணாலயங்கள் இருக்கின்றன. சோலைமந்தி, இருவாச்சி போன்ற எஞ்சியிருக்கும் அரிய உயிரினங்களுக்கு இக்காடுகள்தான் வாழிடம். இன்றும் தவளைகள், மீன்கள் போன்ற புதிய புதிய சிற்றுயிர்கள் இங்கு கண்டறியப்படுகின்றன.
புதிய தொல்பல்லி
அண்மையில் இளம் உயிரியலாளர் ஒருவர் இங்கு ஒரு புதிய பல்லியைக் கண்டறிந்துள்ளார். மழைக்காடுகளிலும், மனிதர் அண்டா ஈரமான இலையுதிர்காடுகளிலும் வாழும் இப்பல்லி, இத்தகைய உறைவிடத்தின் பல்லுயிரியத்துக்கு ஒரு குறியீடு. இதைக் கண்டறிந்து, அறிவியல் உலகுக்கு இது புதிது என்று சொன்னவர் இயற்கை மீதும் உயிரினங்கள் மீதும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட சைதன்யா எனும் இளைஞர். தமிழகக் காடுகளில் சுற்றித்திரிந்து, இதுவரை உயிரியலாளர்கள் அறிந்திராத உயிரினங்களைப் புதிதாகத் தேடிக் கண்டறிகிறார். நாங்கள் வாழும் குடியிருப்பில் வசிக்கும் அவர், தற்போதைய கண்டுபிடிப்பை விவரித்து, அறிவியல் இதழ் ஒன்றுக்கு அறிக்கை தயாரித்துக் கொண்டிருப்பதால் இந்தப் பல்லிக்கு ஒரு அறிவியல் பெயர் சூட்ட வேண்டும் என்றார்.
அறிவியல் பெயரின் அவசியம்
ஒரு பிராணிக்கு வெவ்வேறு மொழிகளில் பல பெயர்கள் இருக்கலாம். ஒரே மொழியில்கூட பல பெயர்கள் இருக்கலாம்; சில அரிய உயிரிகளுக்குப் பெயரே இருக்காது. வேறுபட்ட சில பிராணிகள் ஒரே பெயரில் அறியப்படலாம். தமிழ்நாட்டில் இருக்கும் நான்கு வகை கொக்குகளுக்கும், கொக்கு என்ற ஒரே பெயர்தான் புழக்கத்தில் உள்ளது. எனவே, உலகெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான உயிரினங்களை வேறுபடுத்திக் காட்ட ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான ஒரு பெயர் இருக்கவேண்டும். அதற்காக அறிவியல் பெயர் தேவைப்படுகிறது.
இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து அதற்கு வழி கண்டவர், கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus,1707-1778) என்ற ஸ்வீடன் நாட்டுத் தாவரவியலாளர். இவர் எழுதிய ‘சிஸ்டம் ஆஃப் நேச்சர்’ என்ற நூல்தான் இந்த வகைப்பாட்டியலின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்தது. எல்லா நாடுகளும் இவர் வகுத்த வகைப்பாட்டை ஏற்றுக்கொண்டன. இவர் கொடுத்த அறிவியல் பெயர்கள் இரு பகுதிகளைக் கொண்டவை. முதல் சொல் பேரினத்தையும் (Genus), அடுத்த சொல் அந்தக் குறிப்பிட்ட பிராணியைக் (species – சிற்றினம்) குறிக்கும்.
வேங்கைப்புலியின் அறிவியல் பெயர் Panthera tigris; சிறுத்தையின் Panthera pardus. இரண்டும் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த இரண்டு பெரும்பூனைகளுக்குமே தமிழில் பல பெயர்கள் உண்டு. இதனால் ஏற்படும் குழப்பத்தை அறிவியல் பெயர் போக்குகிறது.
அதில் உள்ள இரு சொற்களுமே லத்தீன் மொழியில் இருப்பது சீர்மைக்காக எடுத்த முடிவு. கொடைக்கானலுக்கு அருகே உள்ள ஒரு சோலைக் காட்டில் பார்த்த பல்லிக்கு சைதன்யா சூட்டியிருக்கும் பெயர் Dravidogecko tholpalli. இப்பெயரின் முற்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் எல்லா பல்லிகளுக்கும் பொதுவானது; முன்னமே புழக்கத்தில் உள்ளவை. இரண்டாவது பகுதிதான் புதியது, தொல்பல்லி.
தமிழகத்தில் பல்லிகள்
தமிழ்ப் பாரம்பரியத்தில் வேறு விதமாக வகைப்பாடு இருந்ததைத் தொல்காப்பியம் பதிவு செய்திருக்கிறது. பொருளதிகாரத்தில் மரபியல் என்ற தலைப்பின்கீழ் ஓரறிவு படைத்த மரங்களிலிருந்து, ஆறறிவு கொண்ட மனிதர்வரை உயிரினங்கள் ஆறு வகையாகப் பிரித்தறியப்படுகின்றன. நண்பர் சைதன்யா அந்தப் பல்லி மிகவும் தொன்மைவாய்ந்த பிராணி என்று அதற்கேற்ற பெயரைத் தேடிக்கொண்டிருந்தார். சங்க இலக்கியத்தில் ஏதாவது பல்லி வருகிறதா என்றார்.
எனக்கு உடனே நினைவில்பட்டது சத்திமுத்தப்புலவர் செங்கால் நாரைகளை தூது விட்டுப் பாடிய, நாராய்…நாராய் என்று தொடங்கும் பாடல்தான். அவரது ஊரான சத்திமுத்தத்தில், தன் குடிசையில் பல்லி தன் குரலால் கணவனின் வருகையை அறிவிக்காதா என ஏங்கியிருக்கும் தன் மனைவியைப் பற்றி பாடுகின்றார். எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி / நனைசுவர் கூரை, கனைகுரல் பல்லி / பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டே ஆயிரம் ஆண்டுகளாகப் பல பல்லியினங்கள், மனிதருக்கு நெருக்கமாக வீட்டினுள்ளேயே இருந்துள்ளன.
குற்றஞ்சாட்டப்படும் பல்லிகள்
இன்றும் எங்கள் வீட்டில் பல்லிகள் வாழ்கின்றன. அவ்வப்போது அதன் குரல் எங்கிருந்தாவது கேட்கும்.இருந்தும் கடந்த சில ஆண்டுகளாகப் பள்ளிக்கூடங்களுக்கு மதிய உணவு அளிக்கும் ஒப்பந்தக்காரர்கள் இந்தச் சிற்றுயிருக்கு அவப்பெயர் வாங்கி கொடுக்கின்றனர். கெட்டுப்போனப் பொருள்களைப் பயன்படுத்தி, சாப்பாடு ஊசிப்போய் அதை உண்ணும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டால், சாம்பாரில் பல்லி விழுந்துவிட்டது என்று சொல்லித் தப்பி விடுகிறார்கள்.
பல்லிக்கு விஷம் கிடையாது; சாம்பாரில் விழுந்தால் அது செத்துப்போகுமே தவிர, மனிதருக்கு ஒன்றும் ஆகாது. வீடுகளில் அது சாம்பாரில் விழுந்ததாக நாம் கேள்விப் பட்டதில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் வேளையில், மூணாறு காடுகளுக்குச் சாகசப்பயணம் செல்ல சைதன்யா தன்னுடைய ஜீப்பைத் தயார் செய்துகொண்டிருந்தார்.
கட்டுரையாளர்,
சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT