Published : 28 Dec 2019 12:10 PM
Last Updated : 28 Dec 2019 12:10 PM
த.சத்தியசீலன்
தென்னையைத் தாக்கும் பூச்சிகளில் அதிக சேதத்தை விளைவிக்கக்கூடியது காண்டாமிருக வண்டு (ஒரிக்டஸ் ரைனோசிரஸ்). இது ஸ்கேராபிடே குடும்பத்தையும், கோலியோப்டிரா வரிசையையும் சேர்ந்தது. இதன் தாக்குதல் தென்னை மட்டுமின்றி பாக்கு, எண்ணெய்ப் பனை, ஈச்சை மரம் ஆகியவற்றிலும் காணப்படுகிறது.
இப்பூச்சியின் வண்டுப் பருவம் மட்டுமே பயிரைத் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதன் புழுக்களை மக்கிய இழை, தழைகள், அங்ககப் பொருட்கள் ஆகியவற்றின் மீது காண முடியும். இவ்வண்டின் கடினமான உடலமைப்பும் உடலைச் சுற்றியுள்ள வழவழப்பான தன்மையும் இதைக் கட்டுப்படுத்துவதற்குப் பெரிய சவாலாக அமைந்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி தென்கிழக்கு ஆசியா, பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகளிலும் இவ்வண்டின் தாக்குதல் காணப்படுகிறது. காண்டாமிருக வண்டுகள் இளம் தென்னை மட்டைகளை, அதன் நுனியில் இருந்து உண்ண ஆரம்பிக்கும்.
தாக்குதலுக்கு உட்பட்ட மட்டைகள், வெளியே வந்து விரியும் போது, மட்டைகளின் பக்கவாட்டில் உள்ள இலைகள் ‘V'’வடிவில் உண்ணப்பட்டிருப்பதைக் காண முடியும். முதிர்ந்த வண்டுகள் மட்டைகளின் அடிவரை சென்று, நார்களைச் சேதப்படுத்துவதால், மட்டைகள் வலுவிழந்து முறிந்துவிடும். மட்டைகளின் அடிப்பகுதியில் காணப்படும் அரைவட்ட வடிவ வெட்டுகள், இப்பூச்சியின் தாக்குதலுக்கு உட்பட்டிருப்பதை உறுதி செய்கின்றன.
சில சமயங்களில் மட்டைகளின் அடிப்பகுதியில் திரவம் போன்ற வடிதல் காணப்படுவது, காண்டாமிருக வண்டு தாக்குதலின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. தாக்குதலுக்கு உட்பட்ட தென்னை மரங்களில் ஒளிச்சேர்க்கையும் விளைச்சலும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. முதிர்ந்த பெண் வண்டுகள், மிகச் சிறிய அளவிலான நீள்வட்ட வடிவ முட்டைகளை மக்கும் நிலையில் உள்ள உரக்குழிகள் அல்லது அங்ககப் பொருட்கள் மீது சுமார் 5 செ.மீ. முதல் 10 செ.மீ. ஆழம் வரை 100 முதல் 150 முட்டைகள் வரை இடும்.
இவை 10 முதல் 15 நாட்களில் புழுக்களாக வெளிவந்து, மக்கிய நிலையில் இருக்கும் புழுக்களை உண்டு வாழும். 'C' வடிவிலான வெள்ளை நிறப் புழுக்கள், வாழிடத்தின் வெப்பநிலைக்கேற்ப சுமார் 100-160 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து, தன்னைச் சுற்றிலும் மண் மற்றும் பிசின் போன்ற படலத்தை உருவாக்கி 10-15 நாட்கள் தங்கியிருந்து, வளர்ச்சியடைந்த வண்டுகளாக உருமாறி பறந்து அருகில் உள்ள தென்னை மரங்களுக்குள் புகுந்து, சேதம் ஏற்படுத்தத் தொடங்கும்.
காண்டாமிருக வண்டுகள் சுமார் 200 நாட்கள் உயிர் வாழக்கூடியவை. கூட்டுப்புழுப் பருவத்திலிருந்து வெளியே வரும் பெண் வண்டுகள், சுமார் 25 முதல் 50 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து, ஆண் வண்டுகளுடன் இணைந்து மீண்டும் முட்டைகளிடத் தொடங்கும். ஒருதலைமுறையை மட்டுமே பூர்த்தி செய்யும். வண்டுகள் கடினமான உடலமைப்பையும், தலையின் மேற்பகுதியில் நீண்டு வளைந்து கொம்பையும் கொண்டிருக்கும். இக்கொம்பு பெண் வண்டைவிட, ஆண் வண்டுக்குப் பெரிதாக காணப்படும். இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் கோவை வேளாண்மை அலுவலர் ஆர்.சக்திவேல் அதைக் கட்டுப்படுத்தும் முறைகளையும் சொல்கிறார்:
காண்டாமிருக வண்டுகளை ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றிக் கட்டுப்படுத்தலாம்.
* தென்னந்தோப்புகளின் அருகில் உள்ள மக்கும் நிலையில் உள்ள பொருட்கள், உரக்குழிகள் போன்றவற்றை இல்லாமல் செய்வதன் மூலம் புழுக்கள் உண்டாகாமல் தடுக்கலாம்.
*தென்னந்தோப்புகளின் அருகே உள்ள மக்கும் குப்பைகளை அடிக்கடி சோதனை செய்து, புழுக்களை அழிக்கலாம்.
* உரக்குழிகளில் மெட்டாரைசியம் அனிசோஃபிலியே என்ற பூஞ்சாணத்தைத் தெளிப்பதன் மூலம் குப்பையில் தோன்றும் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
* குருத்துகளில் காணப்படும் முதிர்ந்த வண்டுகளைக் கூர்மையான, நீளமான இரும்புக் கம்பிகளைக் கொண்டு குத்தி அழிக்கலாம்.
* வேப்பங்கொட்டைத்தூள் மற்றும் மணலை 1:2 என்ற விகிதத்தில் கலந்து மட்டைகளுக்கு அடியில் வைக்கலாம்.
* மண்பானைகளில் 1 கிலோ கெட்டுப்போன ஆமணக்கு புண்ணாக்கை, 5 லிட்டர் தண்ணீரில் கலந்து தென்னந்தோப்புகளில் வைப்பதன் மூலம், காண்டாமிருக வண்டுகளைக் கவர்ந்திழுத்து, அழிக்கலாம்.
*இரவு நேரங்களில் விளக்குப் பொறிகள் வைப்பதால் வண்டுகள் கவர்ந்திழுக்கப்படுகின்றன.
* பேக்குலோ எனப்படும் வைரஸ் காண்டாமிருக வண்டுகளை அழிக்க வல்லது. 10-15 வண்டுகளை இவ்வைரஸ் கரைசலுக்குள் நனைத்து தென்னந்தோப்புக்குள் விடுவதன் மூலம், அது மற்ற வண்டுகளுக்கும் பரவி, கணிசமான அளவில் வண்டுகளை அழித்துவிடும்.
* ரைனோலியூர் எனப்படும் கவர்ந்திழுக்கும் வேதிப்பொருளைத் தண்ணீரில் கலந்து, ஏக்கருக்கு 2 பக்கெட் என்ற அளவில் வைப்பதன் மூலம் ஆண், பெண் வண்டுகளைக் கவர்ந்திழுக்கலாம். அதைத் தினசரி கவனித்து அழித்துவிட வேண்டும்.
* 5-10 நாப்தலின் குண்டுகளை மெல்லிய துளைகள் கொண்ட கனமான பைகளில் இட்டு, இளங்குறுத்து, முதிர்ந்த மட்டைகள் ஆகிய பகுதிகளின் அடியில் வைப்பதன் மூலம் வண்டுகளை அழிக்கலாம்.
* குருத்துகளின் உள்ளே கார்பரில் 50 சதவீதம் நனையும் தூள் அல்லது ஈரம் நீக்கப்பட்ட கயோலின் மண்ணை, மணலுடன் கலந்து வைப்பதன் மூலம் வண்டுகளை அழிக்கலாம்.
* ‘போரேட்' என்ற குருணை மருந்தை 10 சதவீதம் அதாவது 5 கிலோ வீதம் துளையிடப்பட்ட சிறிய பைகளில் வைத்து நுனி மட்டைகளின் அடிப்புறத்தில் வைப்பதன் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT