Published : 28 Dec 2019 11:47 AM
Last Updated : 28 Dec 2019 11:47 AM

பசுமை எனது வாழ்வுரிமை 15: பாதுகாக்கப்பட்ட பத்ரக்கடவு!

கு.வி. கிருஷ்ணமூர்த்தி

அமைதிப் பள்ளத்தாக்கை முறையாக ஒரு தேசியப் பூங்காவாக இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி தொடங்கி வைத்தாலும் பிரச்சினை அத்துடன் முடியவில்லை. இதற்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 2001-ல் கேரள அரசால் ஒரு புதிய நீர்மின் திட்டம் முன்மொழியப்பட்டது. இது அமைதிப் பள்ளத்தாக்கின் ‘மனிதன் - குரங்கு முரண்பாட்டை’ மீண்டும் புதுப்பித்தது.

இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட களம் ஏற்கெனவே முன்மொழியப்பட்ட சய்ராந்திரியிலிருந்து வெறும் 3.5 கி.மீ தொலைவில் ஆற்றின் கீழ்வழிப் பாதையில் இருந்தது. 64.5 மீட்டர் உயரமும் 275 மீட்டர் நீளமும் கொண்டதாகத் திட்டமிடப்பட்டிருந்த அணை, தேசியப் பூங்காவில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள்ளேயே அமைந்திருந்தது.

என்றாலும், இந்தப் புதிய திட்டப் பகுதியின் 84 கி.மீ2 நீர்பிடிப்புப் பகுதியில் 70 கி.மீ2 பகுதி ஏற்கெனவே உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா பகுதியின் ஒரு கூறாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2001-ல் கேரளாவின் மின்துறை அமைச்சராக இருந்தவர் இந்தப் புதிய பத்ரக்கடவு அணையை அமைதிப் பள்ளத்தாக்கின் ஒரு சூழலுக்கு உகந்த மாற்றுத்திட்டம் என்று அழைத்தார்.

இந்தத் திட்டம் ஒரு வழிந்தோடிவரும் ஆற்றுநீர் திட்டமாக வடிவமைக்கப்பட்டது. முதல்கட்டத்தில் 70 மெகாவாட் உற்பத்தித் திறனுடன் தொடங்கப்படும் இது, முடிவில் 105 மெகாவாட் திறனுடன் அமையும்; இந்த அணை கட்டப்படுவதால் நீரில் மூழ்கும் காட்டுப்பகுதி வெறும் 0.41 கி.மீ2 மூழ்குப் பரப்பைவிட மிகவும் குறைவு என்றும் வாதிடப்பட்டது. ஆனால், நீலக்கல்லுக்கும் அமைதிப் பள்ளத்தாக்கின் விளிம்புகளாக இருக்கும் பத்ரக்கடவு மலைகளுக்கும் இடையே உள்ள மிகவும் வியக்கத்தக்க அருவி இதனால் முற்றிலும் மறைந்துவிடும் அபாயம் இருந்தது.

திருவனந்தபுரத்தில் இருந்த சூழல் மூலங்கள் ஆய்வு மையத்தால் (ERRC), 2003-ல் ஜனவரி - மே மாதங்களில் மிகவும் விரைவான சூழல் தாக்க மதிப்பீடு (EIA) செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அணையால் இழக்கப்படும் காட்டுப் பகுதி வெறும் 0.2216 கி.மீ2 மட்டும்தான் என்றும் இதில் 7.4 கி.மீ அணை-அணுகு சாலையும் கரபாதம் பகுதியில் அமையவிருக்கும் ஆற்றல் நிலையத்துக்கான நிலமும் சேர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சூழல் பாதுகாப்பு இயக்கங்களும் கேரள மக்களும் இதைத் தீவிரமாக எதிர்த்தனர். 2007 மார்ச் 22 அன்று போரட்டக்காரரான சுகந்தகுமாரி கேரள முதல்வரிடம் பத்ரக்கடவு மின் திட்டத்தைக் கைவிடுமாறு முறையீடு செய்தார். ஆனால், முதல்வர் இதற்கு ஒப்புதல் அளித்து இதனை மத்திய அரசின் சூற்றுச்சூழல் துறை ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தார்; இத்துடன் 147.22 கி.மீ அமைதிப் பள்ளத்தாக்கு தாங்கு மண்டலத்துக்கு (buffer zone) முறையான ஒப்புதலை 2007 ஜூன் 6 அன்று வழங்கினார். மக்களின் எதிர்ப்புக் காரணமாக இந்தத் திட்டமும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு கவனத்தை ஈர்த்த அமைதிப் பள்ளத்தாக்கு சூழல் பாதுகாப்புப் போராட்டம் பற்றி Only An Axe Away என்ற ஆவணப்படம் நன்கு விவரிக்கிறது. இதில் விவரிக்கப்பட்டுள்ள தகவல்கள் அமைதிப் பள்ளத்தாக்குக்கு நேரடியாகச் சென்று பார்த்தபோது உறுதியானது.

கட்டுரையாளர்,
ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x