Published : 07 Dec 2019 11:49 AM
Last Updated : 07 Dec 2019 11:49 AM
சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்
கரிம வேளாண்மையில் இயற்கை இடுபொருட்களின் பயன்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலம் பண்ணை உரத்துக்கான நடைமுறைச் செலவு பேரளவு குறைகிறது.
இத்தகைய திறன்மிகு இடுபொருட்களைப் பண்ணையிலிருந்தே பெற்று சுயதேவையைப் பூர்த்திசெய்துகொள்ள முடியும். இதனால் பயிரின் வளா்ச்சி, மகசூல், பயிரின் பாதுகாப்பு எந்த விதத்திலும் குறைவுபடவில்லை.
விளைச்சல் அதிகாிப்பதாகவும் சுற்றுச்சூழலுக்கு எவ்விதக் கேடும் விளைவிப்பதில்லை என இயற்கை வேளாண் முன்னோடி நம்மாழ்வார், மகாராஷ்டிர இயற்கை வேளாண் நிபுணர் சுபாஷ் பாலேக்கர் ஆகிய இருவரும் உறுதிபடத் தொிவித்துள்ளனர்.
இதன்படி 5 மாநிலங்களில் தற்போது காிம வேளாண்மையில் சுபாஷ் பாலேக்காின் ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை எனப்படும் செலவு குறைந்த வேளாண் முறை கொள்கை அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவர்கள் கூறும் முக்கியமான இடுபொருட்கள், அவற்றின் பயன்பாடு குறித்துப் பாா்ப்போம்.
பஞ்சகாவ்யம்
இது ஒரு திறன்மிகு இயற்கை இடுபொருள். பசு மாட்டிலிருந்து பெறப்படும் மாட்டுச்சாணம், சிறுநீர், பால். அதிலிருந்து மேம்படுத்தப்படும் நெய், தயிர் ஆகிய கூட்டுப் பொருட்களின் கலவை. இந்தக் கலவை பயிாின் வளர்ச்சிக்கும், பயிாின் நோய், பூச்சி எதிர்ப்பு சக்திக்கும் பயன்படுகிறது.
இந்தக் கலவையில் தழை, மணி, சாம்பல் சத்து அடங்கியுள்ளன. வைட்டமின், அமினோஆசிட் ஆகிய சத்துக்கள் பயிாின் வளா்ச்சிக்கு உதவுகின்றன. ஜிப்பர்லின், ஆக்ஸின் ஆகியவை பயிாின் வளா்ச்சியைச் சீராக்குகின்றன. மேலும், இந்தக் கலவையில் நுண்ணுயிா்களான சூடோமோனாஸ், அசட்டோபாக்டர், பாஸ்போ பாக்டீாியா ஆகியவை பயிருக்கு நன்மையளிக்கின்றன.
இந்தக் கலவையைத் தயாாிக்க மாட்டுச்சாணம் 5 கிலோ, பசுமாட்டுச் சிறுநீர் 5 லிட்டா், நெய் அரை கிலோ, இளநீா் – 1.5 லிட்டர், கரும்புச்சாறு – 1.5 கிலோ, பழுத்த வாழைப்பழம் – 6, ஈஸ்டு – 50 கிராம் ஆகிய இடுபொருட்கள் தேவை. தயார் செய்யும்போது முதலில் 5 கிலோ மாட்டுச்சாணம் 500 கிராம் நெய்யுடன் ஒன்றோடு ஒன்று கலந்து பிசைந்து, மண்பானையில் 3 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும். தினந்தோறும் இரண்டு முறை நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு 5 லிட்டர் மாட்டு சிறுநீர் 5 லிட்டர் தண்ணீருடன் உள்ள கலவையை முந்தைய கலவையுடன் இட்டு நன்கு கலக்க வேண்டும்.
பின்பு இரண்டு வாரம் கழித்து 1 லிட்டர் பசுமாட்டுப் பால், 1 லிட்டர் தயிர், 1.5 லிட்டர் இளநீா், 1.5 கிலோ கரும்புச்சாறு, 6 வாழைப்பழங்கள் ஆகியவற்றை முன்னர் உள்ள கலவையுடன் கலந்து ஒரு மாதம்வரை வைத்திருத்தல் அவசியம். அந்தக் கரைசலைத் தினமும் காலை, மாலை வேளைகளில் நன்கு கலக்க வேண்டும். இவ்வாறு கலந்து ஒரு மாதத்துக்குப் பின் இந்தக் கலவையிலிருந்து தேவைக்கேற்ப எடுத்து பயிாின் வளர்ச்சிக்கும் பயிருக்கு தழை, மணி, சாம்பல் சத்தை அளிக்கவும் பயன்படுத்தலாம்.
அமிர்தக்கரைசல்
தேவையான இடுபொருட்கள் பசுமாட்டுச் சாணம் 1 கிலோ, பசு மாட்டு சிறுநீர் - 1 லிட்டா், நாட்டுச்சர்க்கரை – 2.5 கிலோ, 10 லிட்டர் தண்ணீர். இவற்றைக் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்னர் பயன்படுத்தலாம். கலந்த கலவையை நிழலில் மூடிவைக்கப்பட வேண்டும். தினமும் மூன்று முறை நன்கு கலக்கிவிட வேண்டும். இந்தக் கலவையிலிருந்து தெளிந்த கலவையை நீரில் கலந்து பயிரின் மீது தெளிக்கலாம். பயிருக்கு நீருடன் கலந்து விடுவதன் மூலமும் சொட்டு நீர்ப்பாசனத்துடன் கலந்துவிடுவதன் மூலமும் நிலத்தின் வளம் பேணப்படுகிறது. மண்புழுவின் பயன்பாடு நிலத்தில் அதிகரிக்கிறது.
பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசுமாட்டுச் சாணம் 5 கிலோ நுண்ணுயிா் அதிகமுள்ள வளமான மண், நாட்டுப் பசுமாட்டுச் சிறுநீர் – 5 லிட்டர், ஒரு கைப்பிடி அளவு மண், சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் ஆகிய இடுபொருளை எடுத்து சாணத்தை மட்டும் ஒருசாக்கு அல்லது துணியில் போட்டு ஒரு குச்சியில் கட்டி நீாில் மிதக்கவிட வேண்டும். பிறகு சாக்கிலுள்ள மாட்டுச்சாணத்தைப் பிழிந்து சாற்றை மட்டும் கலவையில் சேர்க்க வேண்டும். கழிவை அகற்றிவிட வேண்டும். இந்தக் கலவையைப் பயிர்களுக்கு வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அளிக்கலாம்.
ஜீவாமிர்தம்
பயிாின் வளர்ச்சி ஊக்கியாக இத்திறமிகு இயற்கை இடுபொருளைப் பயிரைச் சாகுபடிசெய்யும்போது நீருடன் கலந்து பயிருக்கு அளிக்கலாம். பசுஞ்சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 1 கிலோ, பயறு மாவு 1 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் ஆகியவற்றுடன் ஒரு கைப்பிடி வளமான நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணிநேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம்.
காலை, மாலை, மதியம் என மூன்று முறை வலது புறமாகச் சுற்றும்படி குச்சி வைத்துக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்குப் போதுமானது. இக்கலவையைப் பயிரின் வளர்ச்சி ஊக்கியாகப் பாசன நீாிலேயே கலந்துவிடலாம். இலைவழித் தெளிப்பானாகவும் பயன்படுத்தலாம். 1 லிட்டர் நீருக்கு 50 மி.லி. ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஜிப்ரலிக் அசிட்டிக் அமிலம், நாப்தலின் அசிட்டிக் அமிலம் போன்ற வளர்ச்சி ஊக்கிகள் பயிர்களின் வளர்ச்சிக்குப் பேரளவு உதவுகின்றன.
கன ஜீவாமிர்தம் இது மானாவாாி நிலங்களுக்கு ஏற்றது. பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 1 கிலோ பயறு மாவு போதும். இவற்றை ஒன்றாகக் கலந்து இதனுடன் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு நாட்டு மாட்டுச் சிறுநீரைக் கலந்தால் போதும். பிறகு உருண்டையாக உருட்டி நிழலில் காயவைத்து விதைப்புக்கு முன் பயன்படுத்தலாம். தேவைப்படும்போது உதிர்த்துப் பயன்படுத்தலாம். |
கட்டுரையாளர்கள்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com,
selipm@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT