Published : 29 Aug 2015 02:50 PM
Last Updated : 29 Aug 2015 02:50 PM
பாரம்பரிய நெல் ரகங்களில் நீண்ட வயதுடைய நெல் ரகங்களில் வாலான் நெல்லும் ஒன்று. இதன் வயது நூற்றி அறுபது நாட்கள். இது எல்லா மண் ரகங்களுக்கும் ஏற்ற ரகம். மோட்டா ரகம். வெள்ளை அரிசி. வெள்ளம், வறட்சியைத் தாங்கி வளரும். இதற்கு எந்த உரமும் தேவையில்லை. ஒரு சால் உழவு செய்து, விதை தெளித்துவிட்டுவந்தால் போதும்.
மழை பெய்த ஈரத்திலேயே முளைத்துப் பயிர் செழித்து மகசூல் கொடுக்கும். தமிழ்நாட்டில் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டுவரும் இந்த நெல் ரகம், உழவர்களுக்கு அதிகச் செலவில்லாமல் மகசூல் கொடுக்கக்கூடிய ரகங்களில் முதன்மையானது. ஏக்கருக்கு முப்பது முட்டைக்கு மேல் மகசூல் தரும், அரிய வகை நெல் ரகம்.
வாலான் நெல்லின் அரிசி, இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. எல்லா வகையான சமையலுக்கும் ஏற்றது. புட்டு செய்து பருவமடைந்த பெண்களுக்குக் கொடுத்தால் அதிகச் சக்தியைக் கொடுக்கும். சுமங்கலி பூஜைக்கும், ஆடிப் பெருக்கில் சாமி கும்பிடவும் இந்த அரிசி பயன்படுத்தப்படுகிறது.
இந்த அரிசியைத் தொடர்ந்து சாப்பிடுவதன்மூலம் குடல் சுத்தப்படும், தேகம் அழகு பெறும். பித்தம், வயிறு சம்பந்தமான நோய்கள், கரப்பான், மந்த வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். இந்த ரகத்தின் அரிசியை வேகவைத்து அதில் சிறிது கறிவேப்பிலையைப் போட்டு ஊறவைத்து, அதன் நீராகாரத்தைப் பருகினால் நெய் போல் மணம் கமழும். இந்த ரகத்தில் நோய் எதிர்ப்புசக்தி அதிகம்.
- நெல் ஜெயராமன், தொடர்புக்கு: 9443320954
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT