Published : 16 Nov 2019 10:10 AM
Last Updated : 16 Nov 2019 10:10 AM
தமிழகத்தின் மூத்த இயற்கை வேளாண் அறிஞரும், சிந்துவெளி ஆய்வாளரும், தமிழ்க் கணக்கியல் மேதையும் தமிழகத்தின் பெரும் சொத்துமான வளையாம்பட்டு வெங்கடாசலம் (94) நவம்பர் 10 அன்று காலமானார்.
இந்த இழப்பு தமிழ் உலகுக்கு மட்டுமல்லாது, இயற்கை உலகுக்கே பேரிழப்பு. இவர்தான் தமிழகத்தில் முதன்முதலாக, 1980களிலேயே மரபு நெல்லைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு பழைய ரகங்களைக் கண்டறிந்து வெளிக்காட்டினார். சுந்தர்லால் பகுகுணா, வந்தனா சிவா போன்ற உலக அளவில் புகழ்பெற்ற பசுமை இயக்கத்தின், இயற்கை வேளாண்மையின் தூண்கள் இவருடன் தங்கியிருந்து இவருடைய அறிவைக் பெற்றுச் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் முதன்முதலில் விதைப் பாதுகாப்புப் பயணத்தைத் தொடங்கியரும் இவரே. இவருக்குப் பின்னர்தான் பலரும் மரபு விதைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.
சிந்துவெளி எழுத்துக்களுக்கும் தமிழுக்கும் உள்ள உறவை பல கட்டுரைகள், நூல்கள் வாயிலாக வெளிப்படுத்தியவர். 'நன்னன் நாடு' என்ற இதழை நடத்தி செங்கம் முதல் மரக்காணம் வரையான பண்டையத் தமிழகப் பரப்பை அடையாளம் காட்டியவர். தமிழ்த் திணைக் கோட்பாட்டை சூழலியல் நோக்கில் எப்படி அணுக வேண்டும் என்று எனக்குத் தொட்டுக் காட்டிய பெருந்தகை.
இத்தனை சிறப்புகள் இருந்தாலும் அவருடைய எளிமை யாரையும் வியக்க வைக்கும். தான் பெரியவன் என்ற பார்வை அவரிடம் இருந்ததே இல்லை. வெங்கடாசலம், அவருடைய துணைவியரின் வாழ்க்கை, வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கை. தள்ளாத வயதிலும் அம்மையாரையே சமைக்க வைத்து, நண்பர்களுக்கு விருந்து படைத்துத்தான் வழியனுப்புவார். நானும் அந்தச் சமையலைச் சுவைத்த பேறுபெற்றவன்.
நேர்மையும் பயணமும்
வெங்கடாசலம் 1927 செப்டம்பர் 12 அன்று குப்புசாமி, அமிர்தம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார். பெரும் நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தந்தையின் முன்கோபத்தால் சொத்துக்களைத் துறந்து வெளியேறி வறுமைக்கு ஆளானவர்.
குப்புசாமிக்குப் பதினோரு குழந்தைகள், அவர்களில் எட்டாவது வெங்கடாசலம். வீட்டில் 10 பெண் பிள்ளைகளுக்கு நடுவே ஒரு ஆண் மகனாக வளர்ந்தார். வளையாம்பட்டு திண்ணைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். கிண்டி பொறியியல் கல்லூரியில் கட்டுமானப் பொறியியல் பட்டயம் பெற்றார். அங்கு படித்த 120 மாணவர்களில் 1946-47 ஆம் கல்வியாண்டில் முதல் மாணவராக வந்தார்.
உடனடியாக பவானி சாகர் அணைக் கட்டுமானத்தில் அரசு வேலை கிடைத்தது. நிறைய பணம் சம்பாதிக்கும் வேலை அது என்று அப்போது பேச்சாக இருந்ததாம். ஆனால் பணிக்குச் செல்லும்போது அவருடைய தாயார் இட்ட ஆணை, 'தம்பி பைசாகூட லஞ்சம் வாங்கக் கூடாது. அப்படி நான் கேள்விப்பட்டால், நீ இந்த வீட்டுக்கே வரக்கூடாது' என்று கூறிவிட்டாராம்.
மிகவும் நேர்மையான பணியாளராக அரசுப் பணியில் இருந்தார். அணைக் கட்டுமானத்தில் நடைபெற்ற ஊழல் நடவடிக்கைகள் அவர் மனத்தைக் காயப்படுத்தின. வேலையை விட்டு வெளியேறினார். நடுவண் அரசுப் பணியில் சேர முடிவெடுத்து, அஞ்சல் துறைக்கு விண்ணப்பித்து பணியில் சேர்ந்தார். ஓவர்சீயர் என்ற மேற்பார்வையாளர் பணியில் இருந்ததால், தென்னிந்தியா முழுவதும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது தன்னுடைய ஊர், அதன் வரலாறு, சுற்றுச்சூழல் போன்றவற்றின் மீதான அக்கறை ஏற்பட்டது. 1962ஆம் ஆண்டு கண்ணம்மாள் என்ற உறவுப் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
பரந்துபட்ட பார்வை
‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழின் மீது அவருக்குக் காதல். அவர் வாங்கிக் குவித்துள்ள இதழ்கள் இப்போதும் இருக்கின்றன. பணியால் கோவையில் பத்தாண்டுகள் இருந்தார். 1971-ம் ஆண்டளவில் மேகாலயத்தில் உள்ள சில்லாங்குக்கு பணிமாற்றம் பெற்றார். 1975ஆம் ஆண்டுவரை தொடர்ந்த வடகிழக்கு மாநில வாழ்க்கை, பரந்துபட்ட பார்வையை அவருக்கு வழங்கியது. அப்போது நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
உயரதிகாரிகளே முழுமையாக ஆட்சி செய்ததால் லஞ்சம் தலைவிரித்து ஆடியது. அடுத்தநிலை ஊழியர்கள் மிகவும் இன்னல்பட்டார்கள். வெங்கடாசலத்துக்கும் வேருக்குத் திரும்புதல் என்ற உணர்வு மிக அதிகமாகவே இருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம், வளையாம்பட்டு வந்து தனது உரிமையாகக் கிடைத்த 10 ஏக்கர் நிலத்தில் வேளாண்மைக்கான முனைவுகளை முன்னெடுத்துக்கொண்டே இருந்தார். அரசு நிர்வாகத்தில் நிலவும் லஞ்சம், நேர்மையின்மை ஆகியவற்றால் மனம் நொந்து 1981ஆம் ஆண்டு வேலையைவிட்டு வெளியேறினார். அப்போது ஆர்வமுள்ள எல்லோரும் செய்ததுபோல டிராக்டர் ஒன்றை கடனுக்கு வாங்கி பெருத்த நட்டமும் அடைந்தார்.
அகில இந்தியத் தொடர்பு
தனது தோழர்களான தமிழாசிரியர் திருஞானம், கணித ஆசிரியர் ராமச்சந்திரன், ஓவிய ஆசிரியர் பெருமாள்சாமி ஆகியோருடன் வரலாறு, கணக்கு, தமிழ் பற்றி எப்போதும் ஆராய்ச்சி செய்துகொண்டே இருப்பார். திருக்குறள் வகுப்பு எடுப்பார். ஊருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற துடிப்பு அவருக்குள் இருந்துகொண்டே இருக்கும். இந்த முயற்சியால் 1983ஆம் ஆண்டளவிலயே ‘கிழக்கு மலைத்தொடர் பாதுகாப்புச் சங்க’த்தை உருவாக்கினார். அதன்மூலம் இயற்கை வளப் பாதுகாப்பு, மரபு விதைகள் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.
இதன் தொடச்சியாக கோவாவில் உள்ள சூழலியல் போராளி கிளாட் ஆல்வாரஸுடன் தொடர்பு ஏற்பட்டு, இந்திய உயிர்ம வேளாண்மைச் சங்கத்தில் (Organic Farming Association of India) இணைந்து அதன் முதல் தமிழகத் தொடர்பாளராகப் பணியாற்றினார். மரபு விதைகள் பற்றிய எண்ணற்ற தகவல்களைத் திரட்டினார். நாற்பதுக்கு மேற்பட்ட நெல் வகைகளைக் கண்டறிந்து, அவற்றை உழவர்கள் மூலம் பெருக்கினார். தமிழகம் தழுவிய விதைப் பயணம் 1997-98-ம் ஆண்டில் கிழக்கு மலைத்தொடர் பாதுகாப்பு இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. அப்போதுதான் நம்மாழ்வார் இவரைச் சந்தித்தார்.
1986-ம் ஆண்டளவில் சிப்கோ இயக்கத்தின் தலைவர் சுந்தர்லால் பகுகுணா வளையாம்பட்டு இல்லத்துக்கு வந்து தங்கி, இவருடைய விதை பற்றிய அறிவைப் பகிர்ந்துகொண்டார். 1991ஆம் ஆண்டு சூழலியல் அறிஞரும் பிரபல எழுத்தாளருமான வந்தனா சிவா இவருடைய இல்லத்தில் இரண்டு நாள் தங்கி நெல் விதைகள் பற்றி பேரறிவைப் பெற்றுச் சென்றுள்ளார். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் இவருடைய மகன் அறிவுடைநம்பியின் விதை பற்றிய அறிவு பலருக்கும் தெரியாது. அதற்கான மூல அறிவைத் தந்தவர் அவருடைய தந்தையே. புதுச்சேரி ஆரோவில் ஆரண்யா காட்டை உருவாக்கிய சரவணன் வெங்கடாசலத்தின் மருமகன்.
தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றுடன் சூழலியலை இணைத்துப் பார்த்த முன்னோடி வெங்கடாசலம். சிறுபாணன் சென்ற பெருவழிப் பயணம் (சிறுபாணாற்றுப்படை பயணம்), மலைபடுகடாம் பயணம் என்று பல நடைபயணங்கள் வழியே இளைய தலைமுறைக்கு சூழலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். எஸ்.ஆர்.ராவ் கட்டுரைகள், காமரூபக் கணிதம் ஆகியவற்றை ஆராய்ந்து தமிழ்க் கணித முறையை மீட்ருவாக்கம் செய்துள்ளார்.
சிந்துவெளில் உள்ள சக்கரம் பற்றிய இவருடைய ஆய்வு முக்கியமானது. ‘பை' எனப்படும் எழுத்தின் ஆதாரம் தமிழே என்று விவரித்தவர் இவரே. தமிழ்க் கணக்குக்கு என்று அருங்காட்சியகமும், ஆய்வு நிறுவனமும் தொடங்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் கனவு.
வெறும் உணர்ச்சிவசப்பட்ட செயல்பாடுகளால் ஓர் இனத்தை முன்னேற்ற முடியாது, அறிவுபூர்வமான செயல்களால் மட்டுமே முடியும் என்பதை அடிக்கடிக் கூறுவார். அதை அவர் செய்தும் காட்டினார். இப்படியாக தமிழ்க் கணக்கியல், சிந்துவெளி ஆய்வு, மரபு விதைகள், இயற்கை வேளாண்மை, மரபுக் கருவிகள், ஏரிக் கட்டுமானம் என்று வாழும் அருங்காட்சியகமாகத் திகழ்ந்தவர் வெங்கடாசலம். அவருடைய ஆளுமையை ஒரு கட்டுரைக்குள் அடக்க இயலாது.
ஆடம்பரம் இல்லாமல் பல வேலைகள் செய்ததால், அவரை தமிழக்குலம் கண்டுகொள்ளவில்லை. கொண்டாடப்பட வேண்டிய இந்த ஆளுமையை தமிழ்நாடு முறையாக அங்கீகரிக்கவில்லை, உரிய மரியாதை செலுத்தவில்லை. இனிமேலாவது அவருடைய ஆய்வுகளையும், அறிவையும் தமிழ்கூறும் நல்லுலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- பாமயன், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்,
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT