Published : 09 Nov 2019 08:38 AM
Last Updated : 09 Nov 2019 08:38 AM
கு.வி. கிருஷ்ணமூர்த்தி
தேரி கார்வால் மன்னராட்சியின் கீழ் செயல்பட்ட அதிகாரிகளில் ஒருவர்தான் சக்ரதார் ஜூயல் என்றழைக்கப்பட்ட திவான். திறமையால் அல்லாமல் அரசரைத் தொடர்ந்து புகழ்ந்து வந்ததால், திவானாக நியமிக்கப்பட்டிருந்தார். ஃபிரான்ஸ் ஹெஸ்கே என்ற ஜெர்மன் நாட்டு காட்டியல் வல்லுநரின் பரிந்துரைகளின்படி புதிய வனப் பயன்பாட்டுத் தடைகள் விதிக்கப்பட்டன.
அப்போது தேரி கார்வாலின் ராவெய்ன் பகுதி மக்கள் தங்களுடைய அதிருப்தியை மரபு-சார் தண்டக் முறை மூலம் வெளிப்படுத்தினார்கள். செம்மறி ஆடுகளையும் கால்நடைகளையும் சார்ந்திருந்த கிராமப்புறப் பொருளாதாரத்தை அந்த மக்கள் கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு குடும்பமும் பத்து ஆடுகள், ஒரு பசு மாடு, ஒரு எருமை மாடு மட்டுமே வைத்திருக்க இந்தப் புதிய தடைகள் நிர்ப்பந்தித்தன. அதற்கு மேல் வைத்திருந்தால் அவர்களுக்கு வரி விதிக்கப்பட்டது. மேலும், அனுமதியின்றி மரங்களின் அடிப்புறக் கிளைகளைத் தீவனமாக வெட்டிக்கொள்வதற்கான அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அரசால் பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளுக்கு வெளியே கிடைக்கக்கூடிய நிலம் மட்டுமின்றி, பயன்பாட்டுக்கென்று அரசு ஒதுக்கியத் நிலமும் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை.
அரசின் வஞ்சகம்
மக்களால் மேற்கொள்ளப்பட்ட மரபு-சார் தண்டக் முறை ராவெய்னுக்கு அருகிலுள்ள ஜான்பூருக்கும் விரைவாகப் பரவியது. இந்தப் போராட்டத்தால் பீதியடைந்த திவான், வட்டார மாஜிஸ்ட்ரேட்டுக்குக் கட்டளையிட்டு போராட்டத்தின் தலைவர்களைக் கைதுசெய்யுமாறு உத்தரவிட்டார். இதன் விளைவாகப் போராட்டத்தின் இரண்டு தலைவர்களை பார்கோட் (Barkot) பகுதிக்கு வருமாறும் அங்கு அவர்களின் குறைகள் கேட்கப்படும் என்றும் அறிவுறுத்தினார். தலைவர்கள் அங்கு வந்ததும் அரசு அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து தேரி பகுதியின் காவல்துறை அதிகாரிகளிடன் ஒப்படைத்தனர்.
கைதுசெய்த அரசு அதிகாரிகள் மீண்டும் பார்கோட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, தலைவர்கள் இருவருக்கும் உணவு எடுத்துச் சென்ற கிராம மக்களின் சிறு கூட்டத்தை எதிர்கொண்டனர்.அவர்களுக்கிடையே ஒரு சிறிய பூசல் எழுந்தது. இந்தப் பூசலின்போது அதிகாரிகளில் ஒருவர் கிராம மக்களை நோக்கிச் சுடத் தொடங்கினார். இதில் இரண்டு பேர் பலியானார்கள். இருவர் பலத்த காயமடைந்தனர். இதன் விளைவாக டிலாரியில் மக்கள் ஒன்றுதிரண்டு முழக்கம் எழுப்பினார்கள்.
பச்சைப் படுகொலை
1930 மே 26-ம் தேதி போராட்டக் காரர்களை அடக்க அரசு படைக்குக் திவான் உத்தரவிட்டார். இந்தப் படையின் தலைவரான சுந்தர் சிங் அதற்கு மறுப்பு தெரிவித்தபோது, திவானே படைக்குத் தலைமை வகித்து ராவெய்ன் நோக்கிப் படையைச் செலுத்தினார். முன்னதாக இரண்டு கிராம மக்களை அனுப்பி சரணடையுமாறு போராட்டக்காரர்களுக்கு அவர் ஆணையிட்டார்.
தங்களுடைய தலைவர்களை விடுவித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று மக்கள் பதிலளித்தபோது, நடக்கக் கூடாதது நடந்தது. டிலாரியில் போராட்டக்காரர்களை திவான் படையினர் மூன்று பக்கங்களிலும் சுற்றிவளைத்து மே 30 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் கிராம மக்கள் 17 பேர் பலியாயினர்; பலர் பலத்த காயமடைந்தனர்.
இவ்வாறு பழங்குடி மக்கள் கொல்லப்பட்ட தேரி கார்வால் பகுதியில் அவர்களின் நினைவாக மண்டபம் ஒன்று 1968-ல் கட்டப்பட்டது; மே 30-ம் நாள் ‘வன தின’மாக அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த வன நாளன்று ஒரு அறிக்கை வாசிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் இருந்த கீழ்காணும் வாசகங்கள், ராமச்சந்திர குஹாவின் ‘Malign Encounter’ நூலில் இடம்பெற்றுள்ளன:
“காட்டுப் பொருட்களிலும் நம்முடைய அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கும் வாழ்க்கைப் பணியைப் பெறுவதற்கும் நம்முடைய பிறப்புரிமையை நாடுகிறோம். நம்முடைய மகிழ்ச்சிக்கு அடிப்படையாகத் திகழும் காடுகளுடன் ஓர் அன்பான உறவைத் தொடர்ந்து வைத்துக் கொள்ளக் காடுகளின் வளங்கள் இந்தப் பகுதியில் வாழும் மக்களின் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வண்டும்.”
தேரி கார்வால் மன்னர்களின் காட்டைக் கைப்பற்றும் செயல்களுக்கு எதிராக எழுந்த தொடர் போராட்டங்களை ராவெய்ன் மக்கள் பெருமிதத்துடன் நினைவுகூர்கின்றனர். டிலாரி இயக்கம் என்ற பெயரில் அமைந்த இந்தப் போராட்டங்கள், ராவெய்னின் தண்டக் மரபையும் அதன் முக்கியத்துவத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.
(தொடரும்)
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர் தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT