Published : 19 Oct 2019 11:00 AM
Last Updated : 19 Oct 2019 11:00 AM
தமிழ்க்கோ
நம்மில் பலரும் புத்தகம் படிப்போம் அல்லது திரைப்படங்களைப் பாப்போம். அப்படிப் படிக்கும் புத்தகத்தாலோ பார்க்கும் படத்தாலோ ஏற்படும் தாக்கத்தை, புரிதலை செயல்வடிவத்துக்குக் கொண்டுவருகிறோமா?
நம்மில் பலரும் இல்லை என்றே சொல்வோம். ஆனால், தமிழ்நாடு அரசின் வனத்துறைக்கான கூடுதல் வழக்குரைஞர் ஒருவர் தான் படித்த புத்தகத்தால் ஏற்பட்ட தாக்கத்தை, அழிக்கப்பட்ட ஓர் ஆற்றை உயிர்ப்பிக்க வைத்த அரிய செயல் நடந்திருக்கிறது.
‘சீத்தல் வாக்கும்' சிகுர்ஹல்லாவும்
பிரபல இயற்கை வரலாற்று எழுத்தாளரும் நீலகிரி காட்டுப் பகுதிகளை நன்கு அறிந்தவருமான ஈ.ஆர்.சி. டேவிதார், ‘Cheetal Walk’ என்ற புத்தகத்தில் சிகுர்ஹல்லா என்ற ஆறு எவ்வாறு அழிக்கப்பட்டது என்றும், அதன் விளைவாக அதன் நீர்வளத்தைச் சார்ந்திருந்த ஆற்றோரக் காடுகளும் காட்டுயிர்களும் நீரின்றி இறந்ததையும் பதிவுசெய்துள்ளார்.
50 கி.மீ., தொலைவுக்கு ஓடும் சிகுர்ஹல்லா, கல்லட்டி பள்ளத்தாக்கின் சாண்டிநல்லா ஆற்றுப் பகுதியில் தோன்றுகிறது. நீலகிரி வடக்கு பீடபூமியின் வடிகால் பரப்பில் ஓடி, பலஹட்டிக்கு வந்து மாயாற்றில் இந்த ஆறு கலந்துவிடுகிறது. கிழக்கு மலைத் தொடரும் மேற்கு மலைத் தொடரும் சேரும் பகுதியின் பிளவுகளில், அது பரவிச்செல்கிறது. முதுமலையை ஒட்டியுள்ள வறண்ட பகுதிகளில் ஓடுவதால் இந்த ஆறு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தப் பகுதியின் மிக முக்கியமான காட்டுயிர்களான யானை, புலி, காட்டு மாடு, கழுதைப்புலி ஆகியவை இந்தச் சிற்றாற்றைச் சார்ந்தே இருந்தன. அருகில் உள்ள கிராமங்களின் நீராதாரங்கள் வறட்சி அடையாமல் இருக்க சிகுர்ஹல்லா பெரிதும் உதவியது. இந்த ஆற்றின் இரு புறங்களிலும் வெள்ளை மருதம், ஆல், அரச மரம், மூங்கில் எனப் பல வகையான மரங்கள் அடங்கிய பசுஞ்சோலைகள் இருந்தன. முதலை, நீர் நாய் போன்றவையும் சிகுர்ஹல்லாவில் காணப்பட்டன.
வறண்டது வளம்
1955-க்கு முன்புவரை சிகுர்ஹல்லா எவ்வாறு ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருந்தது, அதில் எப்படித் தெள்ளத் தெளிவான நீர் இருந்தது என்று டேவிதார் புத்தகத்தில் விவரித்துள்ளார். இந்த ஆற்றில் பாய்ந்த மழைநீர் படிப்படியாக நிலத்துக்குள் ஊடுருவி, நீரூற்றுகளைச் செழிப்படைய வைத்து, நிலத்தடி நீர்ச் சுனைகள் வற்றாமல் வைத்திருக்க உதவியது. 1965-க்குப் பிறகு பைகாரா நீர் மின்நிலையத்தின் ஒரு பகுதியாக சாண்டிநல்லா ஆற்றைத் தடுத்து ஒரு அணை கட்டியதால், உயிரினப் பன்மையை ஊக்குவித்த இந்த சிகுர்ஹல்லாவில் நீரோட்டம் தடைபட்டது.
பேரோசையுடன் ஓடிக்கொண்டிருந்த நதியில் நீர் வரத்து குறைந்ததால் அதன் தன்மை மாறி, சிறு ஓடையாக அது சுருங்கிவிட்டது. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி 1968-ன் கோடையில் சிகுர்ஹல்லா நீரின்றி வறண்டது; அதில் இருந்த கெண்டை மீன்கள் மொத்தமாக இறந்துபோயின. யானை போன்ற பேருயிர்கள் நீரின்றித் தவித்தன என்பதையெல்லாம் டேவிதார் விவரித்துள்ளார். தன் கண் முன்னே மர வியாபாரிகள் பெருமரங்களை அறுத்தெடுத்துச் செல்வத்தையும், புதர்கள், சிறு மரங்களைப் பகுதிவாழ் மக்கள் தங்கள் தேவைக்காக அகற்றியதையும் வேதனையோடு கூறியுள்ளார்.
இப்படிப் பசுமை அழிக்கப்பட்டதால் அந்த பகுதி மழை நீரை உறிஞ்சும் தன்மையை இழந்தது. நிலத்தடிச் சுனைகளை ஊக்கப்படுத்தி, நீரோடைகளை செழுமைப்படுத்தும் திறனை அந்த ஆறும் இழந்தது. தொடர்ச்சியாக அந்த ஆற்றின் அடிவாரத்தில் அதைச் சார்ந்து வாழ்ந்த பழங்குடி, கிராம மக்களும் நீரின்றித் தவித்தனர். அவர்களுடைய கால்நடைகளும் இறந்தன.
மறுசீரமைப்பு
தமிழ்நாடு அரசின் வனத்துறைக்கான கூடுதல் வழக்கறிஞராக இருந்த சந்தானராமன், டேவிதாருடைய எழுத்துக்களின் மூலம் சிகுர்ஹல்லாவின் சிறப்பை அறிந்துகொண்டார். சீரழிக்கப்பட்டு, வறண்டு கிடக்கும் அந்த ஆற்றை மறுசீரமைக்கும் முயற்சியில் இறங்கினார்.
புதுவைப் பல்கலைக்கழகத்தின் சூழலியல் பேராசிரியர்கள் பிரியா டேவிதார், புயராவாட் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் 2017 பிப்ரவரி 24 அன்று தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலருக்கு சந்தானராமன் ஒரு விண்ணப்பத்தை அனுப்பினார். சிகுர்ஹல்லாவில் தண்ணீர் ஓடுவதற்காக காமராஜர் சாகர் அணையிலிருந்து குறிப்பிட்ட அளவு நீரை ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் மே மாதம்வரை வெளியேற்றுமாறு அதில் கேட்டுக்கொண்டார்.
பொதுவாக, அரசு இயந்திரம் வேலை ஏதும் செய்யாது; அப்படியே செய்தாலும் அது தாமதமாகவே நடக்கும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதைப் பொய்யாக்கும் வகையில் தலைமைச் செயலாளர் உடனடியாக அந்தக் கோரிக்கையைத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குப் பரிந்துரைத்தார். 2017 மார்ச் 2 அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், அணையின் மேல்கொடமுண்ட் (Melkodamund Weir) பகுதியில் இருந்து தினமும் 2 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிடுமாறு உத்தரவிட்டது.
இது மிக முக்கியமான நிகழ்வு. இந்த உத்தரவால்தான் சிகுர்ஹல்லாவில் இன்றும் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு முக்கிய நீர் வாழிடம் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது.
திரும்பிய இயல்புநிலை
பொதுவாக, மனிதர்களின் தலையீட்டால் அழியும் இயற்கை, இங்கு மனிதர்களின் தலையீட்டால் உயிர்பெற்றுள்ளது. அரசுத் துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பு இருந்ததால், இந்த மறுசீரமைப்பு முயற்சி வரவேற்கத்தக்க முன்னுதாரணமாக மாறியுள்ளது.
சிகுர்ஹல்லாவில் நீர் வந்தடைந்து, அது தன் வழக்கமான ஓட்டத்தைத் தொடங்கிய சிறிது காலத்திலேயே ஆற்றோரத்தில் மூங்கில்கள் வளர ஆரம்பித்தன. மருத மரங்கள் துளிர் விட்டன. கெண்டை மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடின, அவற்றை உண்டு புசிக்க நீர் நாய்களும் குழுமின. கடைசியாக யானைக் கூட்டமும் வந்தது. இப்படிச் சிறிது சிறிதாக சிகுர்ஹல்லா தன் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
பல காலத்துக்கு முன்பிருந்த இயல்பு நிலைக்கு சிகுர்ஹல்லா முழுமையாகத் திரும்பிவிடவில்லை என்றாலும், மனிதர்களின் தவறான தலையீடுகள் இல்லாதபட்சத்தில், சிகுர்ஹல்லா தன் உண்மை நிலைக்கு எதிர்காலத்தில் திரும்பும் என்று நம்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT