Published : 12 Oct 2019 11:39 AM
Last Updated : 12 Oct 2019 11:39 AM

இயற்கை அழிப்பு: தடமின்றி அழிக்கப்படும் தடாகம்

த. முருகவேள்

கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், சின்னத் தடாகம், நஞ்சுண்டபுரம், வீரபாண்டி, சோமயம்பாளையம், பன்னிமடை ஆகிய கிராமங்கள் உள்ளன. காப்புக்காடுகளின் அருகில் அமைந்துள்ள இந்த கிராமங்கள் உயிரினப் பன்மை வளம் மிகுந்தும் யானை வழித்தடங்களாகவும் விளங்குகின்றன. இந்த கிராம நிலங்கள் நத்தம், பஞ்சமி, குட்டைப் புறம்போக்கு, கோயில் புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

செங்கல் சூளைகள்

இந்த கிராமங்கள் அமைந்திருக்கும் பகுதிகள் தமிழ்நாடு மலைப் பகுதிகள் பாதுகாப்பு ஆணையத்தின் ‘HAGA’ (Hill Area Conservation Authority) கட்டுப்பாட்டில் உள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் தொழிற்சாலைகளோ வேறு எந்தக் கட்டுமானங்களோ இங்கு உருவாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

இவற்றை மீறி ஒரு கட்டுமானம் எழுப்பப்பட வேண்டுமென்றால், அதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஆனால், இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில் அரசு அனுமதியின்றி 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருவதுதான் தற்போது இந்தப் பகுதி பேசுபொருளாகி இருப்பதற்குக் காரணம். இதனால் இந்தப் பகுதியின் உயிரினப் பன்மை சீரழிந்துகொண்டிருக்கிறது.

சுகாதார அபாயங்கள்

செங்கல் சூளைகளால் நிலம், நீர், காற்று ஆகியவை எந்தளவுக்கு மாசுபடுகின்றன என்று இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. சூளைகளிலிருந்து வெளியேறும் புகை, நுண்ணிய கார்பன் துகள்கள் நிறைந்தது. இவை நுரையீரலில் ஊடுருவி அங்கேயே தங்கிவிடுகின்றன. சல்பர் டை ஆக்சைடு சுவாச மண்டலத்தில் எரிச்சலை ஏற்படுத்துகிறது; கார்பன் மோனாக்சைடு தலைசுற்றல், வாந்தியை ஏற்படுத்துகிறது; தாவரங்களின் ஆரோக்கியமும் காற்று மாசுபாட்டால் மோசமாக பாதிக்கப்படுகிறது; புளூரின், ஈயம், பாதரசம் போன்ற வேதிப்பொருட்கள் தாவரங்களுக்கு அழிவை ஏற்படுத்துகின்றன.

முன்பு வேளாண்மை செழித்திருந்த இந்தப் பகுதியில் இப்போது வேளாண்மை பெருமளவு இல்லாமல் போய்விட்டது. செங்கலின் மூலப்பொருளான செம்மண், 20 அடி முதல் 150 அடிவரை தோண்டி எடுக்கப்படுவதால், இந்தப் பகுதி செயற்கைப் பள்ளத்தாக்குபோல் காட்சியளிக்கிறது. நீரோட்டம் இன்றி நிலத்தடி நீரும் அருகிவிட்டது. வேளாண்மை பொய்த்துப்போனதும், தங்கள் நிலங்களை செங்கல் சூளை முதலாளிகளிடம் உழவர்கள் பலரும் சொற்ப விலைக்கு விற்றுவிட்டனர். இதனால் விளைநிலங்களை சூளைகளாக மாற்றப்பட்டு செங்கல் உற்பத்தி பெருகியது.

காட்டுயிர் பாதிப்பு

தடாகம் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காப்புக்காடுகளையொட்டி அமைந்திருப்பதால் காட்டுயிர் நடமாட்டம் மிகுந்து காணப்படும். குறிப்பாக, செங்கல் சூளைகள் அமைக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் யானைகள், காட்டு மாடுகள், மான்கள் போன்ற காட்டுயிர்கள் வரக்கூடும். உணவுக்காகவும் நீருக்காகவும் இடம்பெயரும் பேருயிர்களான யானைகள் இந்தச் சூளைகளால் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன.

யானைகள் படும் அவதி

25 ஆண்டுகளுக்குமுன் வேளாண்மை தழைத்திருந்த காலத்தில் கோயம்புத்தூர் நகரச் சந்தைகளுக்கு இந்தப் பகுதியில் இருந்துதான் வேளாண் பொருட்கள் சென்றன. அன்றைக்கும்கூட யானைகள் விளைநிலங்களுக்கு வந்து, பத்து இருபது சதவீத உணவுப் பயிர்களை உண்டு சென்றுகொண்டிருந்தன. என்றாலும் உழவர்கள் அதை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை; காட்டுப் பகுதிகளில் இருக்கும் யானைகள் உணவு சாராமலும் விளைநிலங்களுக்கு வந்துசெல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. ஆனால், இன்றைய நிலையோ தலைகீழ்!

மனிதர்களும் யானைகளும் ஒருவரையொருவர் சகித்துக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கை முறை மாறிவிட்டது. செங்கல் சூளைகள் பெருகிவிட்ட இந்தப் பகுதிகளைக் கடந்து யானைகள் வேறு இடங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளன. செங்கல் சூளைகள் பெருகியதாலும் வேளாண்மை நீர் தேவைக்காக ஏற்கெனவே தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளாலும் இந்தப் பகுதியின் நீர் சுழற்சி மாற்றப்பட்டு, நீராதாரப் படுகைக்கு நீர் இயற்கையாகச் சென்றடைவது தடுக்கப்பட்டது. இந்தப் பகுதியின் நீராதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் யானைகளுக்கான நீராதாரங்களும் வற்றி, கோடை காலத்தில் நீரைத் தேடி காட்டுப் பகுதியை விட்டு அவை வெளியே வரும் சூழல் உருவாகிறது. இதுவே யானை-மனிதர் எதிர்கொள்ளலுக்கான முதன்மைக் காரணம். இப்படி வெளியேறும் யானைகளின் வழித்தடங்கள் செங்கல் சூளைகளாலும், மனிதர்களின் வாழிடங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், அவை வேறு பாதையை நாட வேண்டியிருக்கிறது. செங்கல் சூளைகளில் வேற்று மாநிலத்தவர் வேலை செய்துவரும் சூழலில், அவர்கள் யானைகளை எதிர்கொள்ளும்போது, பாரம்பரியமாக நம் உழவர்கள் பார்த்த கண்ணோட்டம் அவர்களிடம் இல்லை.

அவர்கள் பயத்தில் கற்களை வீசி விரட்டுவதால் யானைகளும் எதிர்க்கின்றன. சூளைகளில் வேலைசெய்பவர்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லாததால், அதிகாலை வேளையில் காலைக் கடன்களை முடிக்க சூளைகளை ஒட்டியப் பகுதிகளுக்குச் சிலர் செல்லும்போது, யானைகள் இருப்பதை அறியாமல் அவற்றின் அருகில் சென்றுவிடுகிறார்கள். இந்தப் பகுதியில் யானை- மனிதர் எதிர்கொள்ளலைத் தவிர்க்க வனத்துறை மேற்கொண்ட முயற்சிகள் பலனில்லாமல் போயின.

அரசு இயந்திரத்தின் பாராமுகம்

தடாகம், அதன் சுற்றுப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் அனுமதியின்றி இயங்குகின்றன என்றும் அவற்றால் ஏற்படும் உடல் உபாதைகள் உட்பட பல்வேறு பாதிப்புகளையும் குறித்து மக்களும் தன்னார்வத் தொண்டர்களும் பல முறை அரசு அதிகாரிகளுக்குப் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வனத்துறை தெரிவித்த புகார்களும் இதே நிலைமையைத்தான் அடைந்துள்ளன என்பது வேதனை தரும் செய்தி.

கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், கோவை மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய விண்ணப்பங்களும்கூட எந்தப் பலனையும் தரவில்லை. தடாகத்திலும் அருகிலுள்ள கிராமப் பகுதிகளிலும் உள்ள செங்கல் சூளைகள், அந்தப் பகுதியின் உயிரினப் பன்மைக்கும், யானை போன்ற பேருயிர்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்தப் பகுதியில் வாழும் மக்களின் உடல்நலமும் வாழ்வாதாரமும் இந்தச் சூளைகளால் பாதிக்கப்படுகிறது. இந்த நிலை இன்னும் சில காலம் தொடர்ந்தால் தடாகமும் அதை சுற்றி உள்ள பகுதிகளும் தடமின்றி அழிந்துவிடும். அதற்கு நாமும் துணை போகலாமா?

கட்டுரையாளர்,
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: mcwhale.t@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x