Published : 12 Oct 2019 11:22 AM
Last Updated : 12 Oct 2019 11:22 AM

பசுமை எனது வாழ்வுரிமை 04: ஆந்திரத்தில் மூண்ட எதிர்ப்பு

கு.வி. கிருஷ்ணமூர்த்தி

ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் கூடெம் (Gudem), ரம்ப்பா (Rampa) பகுதிகளின் இடமாற்ற வேளாண்மை சார்ந்த மக்களின் போராட்டம், நூறு ஆண்டுகளுக்கு நீடித்த சூழல் பாதுகாப்பு போராட்டம். பல நூற்றாண்டுகளாக இந்தக் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்துவந்த கோயா (Koya), கொண்டா (Konda), டோரா (Dora) பழங்குடி மக்கள் முக்கிய வாழ்வாதாரமாக இடமாற்ற வேளாண்மையே இருந்தது.

பிரிட்டிஷ் காலனி அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த மலைப்பகுதிகள் சிறிது சிறிதாக சந்தைப் பொருளாதாரத்தின் (market economy) தாக்கத்துக்கும், இந்தப் பகுதிகளிலிருந்து இயற்கை மூலப்பொருட்களைச் சுரண்டுவதற்கு முயற்சிசெய்த பணக்கார வியாபாரிகளின் தாக்கத்துக்கும் உட்படத் தொடங்கின. இதன் காரணமாக மலைப்பகுதியையும் சமவெளியையும் இணைக்கும் சாலைக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. புளி, பழங்கள், தேன், பல தாவர/ விலங்குப் பொருட்களின் வணிகத்தில் அசுர வளர்ச்சி ஏற்பட்டது. இவை அதிக அளவில் நகரங்களுக்கு அனுப்பப்பட்டன.

உணவின்றித் தவித்த பழங்குடிகள்

பணக்கார தெலுங்கு வியாபாரிகளான கோமுட்டிச் செட்டியார்கள் வட்டாரத் தலைவர்களிடமிருந்து காட்டு நிலப்பகுதிகள் பலவற்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டனர். மேலும், அதுவரை பழங்குடி மக்களின் கட்டுப்பாட்டில் இருந்த பதநீர், கள் உற்பத்தியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் கொண்டுவந்தனர். அவர்களின் இந்தச் செயல்பாடுகளுக்குக் காலனியாதிக்க அரசு ஆதரவளித்தது. இதற்காக பழங்குடி இல்லங்களில் பதநீர்/ கள் காய்ச்சுதலை (brewing) அரசு தடைசெய்தது. அந்த உரிமை பணக்கார கோமுட்டிகளுக்குக் கொடுக்கப்பட்டன.

இடமாற்ற வேளாண்மை இல்லாத பருவங்களில் பதநீரும், புளிக்காத பனங்கள்ளும் பழங்குடி மக்களுக்கு முக்கிய உணவாகத் திகழ்ந்தன என்பதால், அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். அரசும் பணக்காரர்களும் மேற்கொண்ட வணிகச் செயல்கள் பழங்குடி மக்களின் இடமாற்ற வேளாண்மைக்கும் ஊறு விளைவித்தன. இந்த விவரங்களை மானிடவியல் அறிஞர்கள் ஹைமன்டோர்ஃப், டேவிட் ஆர்னால்டு ஆகியோரின் நூல்களை தெளிவாக எடுத்துரைக்கின்றன.

1879-1880-ம் ஆண்டில் ஏற்பட்ட ரம்ப்பா புரட்சி பனை மரங்கள், காட்டுப் பயன்பாடு பற்றிய புதிய தடைகளுக்கு எதிராக எழுந்தது. பணக்கார வியாபாரிகளின் கட்டாயப் பணப்பறிப்புக்கு எதிராக வன்மையாக முறையிட்டு பழங்குடி சமூக மக்கள் பின்வருமாறு கூறினர்: “உயிர் வாழ முடியாத சூழல் நிலவுவதால், நாங்கள் இறப்பதற்கு முன்பு ஒரு காவல்துறை அதிகாரியைக் கொன்றுவிட்டு இறக்கத் தயாராக உள்ளோம்.”

காவல்துறைக்குக் கடும் எதிர்ப்பு

இந்தப் போராட்டம் பழங்குடி மக்களிடையே சிறிய தலைவராக இருந்த தம்மம் டோரா என்பவரால் வழிநடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பல காவல் நிலையங்கள் தாக்கி எரிக்கப்பட்டன. 1880-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தம்மம் டோரா காவலர்களால் சுடப்பட்டு கொல்லப்பட்டாலும், விசாகப்பட்டினத்தின் கோல்கொண்டா மலைகளுக்கும் பத்ராசலம் பகுதியின் ரேகேபள்ளி காடுகளுக்கும் புரட்சி விரைவாகப் பரவியிருந்தது.

பத்ராசலம் பகுதி அப்போதைய மதராஸ் மாகாணத்துக்கு மாற்றப்பட்டவுடன் இடமாற்ற வேளாண்மையைத் தொடர்வதற்கு மேலும் அதிகத் தடைகள் ஏற்பட்டன. காட்டைப் பயன்படுத்த முடியாத வருத்தத்தின் காரணமாக போராட்டங்கள் உடனடியாகவும் நேரடியாகவும் தோன்றின. மற்ற இடங்களைப் போல், இங்கும் காவல் நிலையங்கள் தாக்குதலுக்கு இலக்காயின. காரணம், அரசு அதிகார ஆணவத்தின் வெளிப்படைக் குறியீடுகளாகத் திகழ்ந்தவை இவையே. இந்தப் புரட்சியை அடக்குவதற்கு நூற்றுக்கணக்கான காவலர்களும் பத்து ராணுவப் பிரிவுகளும் தேவைப்பட்டன. என்றாலும், 1880-ம் ஆண்டு நவம்பர் மாதம்வரை இது தொடர்ந்தது.

அல்லூரியின் போராட்டம்

இடமாற்ற வேளாண்மையை மேற்கொண்ட பழங்குடி மக்களின் கடைசிப் போராட்டம், அதற்கு முந்தைய போராட்டங்களைப் போன்றே காட்டில் அவர்களுடைய மரபு-சார்ந்த உரிமைகள் தடை செய்யப்பட்டதன் விளைவாக ஏற்பட்டது. இதற்குத் தலைமை வகித்தவர் மலையடிவார சமவெளிப் பகுதியைச் சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு. ஒரு வட்டாரப் போராட்ட எழுச்சியை சிறிய கெரில்லா போராக அவரால் மாற்ற முடிந்தது. அரசின் அதிகாரத்தால் நிலங்களை இழந்தவர்களையும், வனச்சட்டங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களையும் தேர்வுசெய்து இந்த கெரில்லா படையை அவர் உருவாக்கினார்.

காட்டின் பழங்குடி மக்களும், கிராம மக்களும் அவருக்கு உதவினார்கள். புறக் காவல் நிலையங்களின் மேல் படையெடுத்து, நிறைய ஆயுதங்களைக் கைப்பற்றிய ராஜுவின் படை, காவலர்களிடம் பிடிபடாமல் செயல்பட்டது. காவலர்களைவிட ராஜுவின் படைக்கு காட்டுப் பகுதிகளைப் பற்றிய கூடுதல் அறிவும் அனுபவமும் இருந்ததால் பழங்குடி மக்களின் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. என்றாலும், போராட்டத்தைச் சமவெளிப் பகுதிகளுக்கு பரப்ப முடியாததால், காவலர்களிடம் ராஜு பிடிபட்டு, 1924-ம் ஆண்டு மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை மையப்படுத்தி தெலுங்குத் திரைப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.

(தொடரும்)
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர் தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x