Published : 11 Jul 2015 01:10 PM
Last Updated : 11 Jul 2015 01:10 PM
நாசா அளித்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய ஆய்வு மழைநீர் சேகரிப்பின் மூலம் பணத்தைச் சேமிக்க முடிவது மட்டுமல்லாமல், வருமானமும் ஈட்ட முடியும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.
இடநெருக்கடியான வீடுகளில்கூட மாடியில் மழைநீரைச் சேகரிப்பதன் மூலம் நிறைய பலன்களைப் பெற முடியும்.
750 லிட்டர் அளவு கொண்ட சிறிய தொட்டியில் மழைநீரைச் சேகரித்தால், அது பெரும் மாற்றத்துக்குக் காரணமாக இருக்கும்.
"மாடித் தோட்டத்தில் காய்கறி விளைவிக்கும்போது மழைநீரைச் சேகரிப்பதன் மூலம் நீருக்குச் செலவழிக்கும் கட்டணத்தைக் குறைக்க முடியும், ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளை விளைவிக்க முடியும், இரண்டாவது வருமானத்தைத் தரும் விஷயமாகவும் மாற்ற முடியும்" என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மூவரில் ஒருவரான டான் ஸ்டவுட்.
அமெரிக்காவில் உள்ள உடா பல்கலைக்கழகம் நடத்திய இது தொடர்பான ஆய்வு, அர்பன் வாட்டர் ஜர்னல் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வில் 1997 முதல் 2011-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பெய்த மழை, சேகரிக்கப்பட்ட தண்ணீர், அதனால் கிடைத்த விளைவுகள் போன்றவை பரிசீலிக்கப்பட்டன. பெங்களூரு, புதுடெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, நகர் ஆகிய ஊர்களில் சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சேகரிக்கப்பட்ட நீர் வீட்டுத் தேவைக்கும், மாடித் தோட்டத்துக்கும் பயன்படுத்தப்பட்டது. மாடித் தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மூலம் வைட்டமின் சத்து கிடைக்கிறது. அந்தக் காய்கறிகளை விற்பதன் மூலம் கூடுதல் வருமானமும் வாழ்க்கைத் தர மேம்பாடும் சாத்தியம் என்கிறது இந்த ஆய்வு.
மரத்தின் வயசு 777
நம்மூரில் பார்க்கும் மரங்களின் அதிகபட்ச வயசு என்னவாக இருக்கும்? ஒரு மரம் அதிகபட்சமாக எவ்வளவு காலம் வளரும்?
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ரெட்வுட் மரத்தின் வயது 1,500 ஆண்டுகள் என்று முன்பு கணிக்கப்பட்டிருந்தது. அது தவறு என்று புதிய ஆய்வு சொல்கிறது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ம்யூர் உட்ஸ் எனப்படும் மிகப் பழமையான ரெட்வுட் காட்டுப் பகுதியில் இருக்கும் மிகவும் உயரமான, புகழ்பெற்ற மரங்களின் வயதைக் கண்டறியும் ஆய்வில்தான் இந்தத் தகவல் தெரியவந்தது.
பூமியில் இருக்கும் மிகவும் உயரமான மரங்கள் ரெட்வுட் காட்டுப் பகுதியில் உள்ளன. இந்தக் காட்டுப் பகுதியில் இருக்கும் 76 என்ற எண் கொண்ட மரம், அந்தக் காட்டுப் பகுதியின் விதானப் பகுதியைவிடவும் 76 மீட்டர், அதாவது 249 அடி உயரமானது. அதிகமில்லை, 40 ஆள் உயரம்தான். இந்த மரத்தின் வயது 1,500 என்று இவ்வளவு காலம் கருதப்பட்டு வந்தது.
இந்தக் கணிப்பு தவறு என்று தெரியவந்திருக்கிறது. பார்ப்பதற்குப் பிரம்மாண்டமாக இருந்தாலும், அந்த மரத்தின் வயது என்னவோ, கணிக்கப்பட்டதில் பாதிதான்.
ஹம்போல்ட் மாகாணப் பல்கலைக்கழகம், ரெட்வுட்ஸ் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து இந்த மரம் தொடர்பாகச் சமீபத்தில் ஆய்வை மேற்கொண்டது. வறட்சி போன்ற பருவநிலை மாற்றங்கள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கம்.
"உலகில் 2,500 ஆண்டு பழமையான ரெட்வுட் மரம்கூட இருக்கிறது. ஆனால், ரெட்வுட் காட்டுப் பகுதியில் உள்ள உயரமான மரத்தின் வயது 777 என்று தெரிய வந்துள்ளது" என்கிறார் இந்தக் காட்டுப் பகுதியின் அறிவியல் இயக்குநர் எமிலி பர்ன்ஸ்.
இங்குள்ள மரங்களின் வயது, இப்போதுதான் முதன்முதலாக அறிவியல் ரீதியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மரத்தில் இருந்து பென்சில் அளவுள்ள நடுமர மாதிரிகள் எடுக்கப்பட்டு மரத்தின் வயது, அமைப்பு, பல்லுயிரியம் போன்றவை ஆய்வு செய்யப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT