Published : 28 Sep 2019 11:22 AM
Last Updated : 28 Sep 2019 11:22 AM
சொ.பழனிவேலாயுதம், ‘பூச்சி’ செல்வம்
குறிப்பிட்ட நிலத்தில் சாகுபடி செய்வதற்கு முன்பு அம்மண்ணில் அங்ககத்தன்மை எந்த நிலையில் உள்ளது? அந்த மண்ணில் இருப்பிலுள்ள சத்துக்களின் நிலை என்ன? அது போக நாம் சாகுபடிக்கு தோ்ந்தெடுக்கும் பயிருக்கு தேவையான சத்துக்கள் எவை? அவற்றை எவ்வாறு அறிந்து கொள்வது? அவ்வாறு அறிந்தபின் சத்துக்களை எவ்வாறு பயிருக்கு அளிப்பது போன்றவற்றிற்கு விடையாவது மண் பாிசோதனை செய்து, அதனடிப்படையில் பெறப்படும் முடிவறிக்கையின்படி செயல்படுவது ஒன்றே வழிமுறை. இம்முறையே நவீன வேளாண்மையில் முக்கிய அம்சம்.
உழவர்கள் மண் பாிசோதனை செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் ? எங்கு சென்று மண் ஆய்வு செய்ய வேண்டும்? அதற்காக கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்று பல கேள்விகள் எழக்கூடும்.
வேளாண்மைத்துறை மூலம் செயல்படும் மண் ஆய்வுக்கூடங்களிலும், தனியார் நடத்தும் வேளாண் சேவை மையங்கள், பயிர் மருத்துவ கிளினிக்குகள், அருகிலுள்ள உரத் தொழிற்சாலைகளில் உள்ள ஆய்வுக்கூடங்கள், வேளாண்மைத்துறை நடத்தும் நடமாடும் மண் ஆய்வுக்கூடங்கள் அருகிலுள்ள வேளாண்மைக் கல்லுாாிகளில் தங்கள் நிலத்தின் மண்ணைப் பாிசோதனை செய்து விவரம் பெற முடியும்.
ஒரு பயிர் சாகுபடி செய்வதற்கு முன் அந்நிலத்தில் மண் மாதிாிகள் சேகாிக்கலாம். அவ்வாறு பாிசோதனைக்காக மண் மாதிாி சேகாிக்கும்போது ஒராண்டு காலம்வரை சாகுபடி செய்யும் பயிருக்கு ஏக்கர் ஒன்றிற்கு ஐந்து இடங்ளில் நிழல்படாத வரப்பு ஓரங்களை தவிர்த்து அரையடி ஆழத்திற்கு மண் வெட்டியால் குழி எடுத்து குழியின் இரு கரைகளிலுள்ள மண்ணையும், சுரண்டி எடுத்து அடியில் உள்ள மண்ணையும் சேகாிக்கலாம். இதுபோல் ஐந்து இடத்தில் சேகாித்த மண்ணை, நன்கு கலந்துபின் அதிலிருந்து அரை கிலோ அளவுக்குச் சுருக்கி துணிப்பைகளில் சேகாித்து பாிசோதனைக்கு அனுப்பலாம்.
பல்லாண்டு மர வகைப்பயிர் சாகுபடிக்கு நிலத்தை உட்படுத்தும்போது மூன்று அடி ஆழத்திற்கு குழி எடுத்து ஒவ்வொரு அடி ஆழத்திலும் ஒரு மண் மாதிாி சேகாிக்க வேண்டும். அவ்வாறு சேகாித்து மூன்று மாதிாிகளையும் தனித்தனியே அடையாளமிட்டு துணிப்பைகளில் இட்டு மண் ஆய்வுக்கு அனுப்பலாம்.
இவ்வாறு சேகாித்த மண்ணில் துணிப்பைகளிலே உழவாின் பெயர், முகவாி, மண் மாதிாி சேகாித்த வயல் (அ) தோட்டத்தில் சர்வே எண், கிராமம், பல ஏக்கர் நிலமாக இருந்தால் அக்குறிப்பிட்ட ஏக்கருக்கான அடையாளம் போன்றவற்றைக் குறிப்பிட்டு சீட்டை அத்துணிப்பைகளிலேயே இட்டு பாிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.
வேளாண்மைத்துறை மூலம் மண் பாிசோதனை நிலையங்களின் மாதிாி ஒன்றிற்கு ரூ.20-ம் தனியார் மண் பாிசோதனை நிலையங்களில் அவர்கள் நிாணயம் செய்த தொகையில் மண் பாிசோதனை செய்துகொள்ள முடியும். மண் மாதிாி அனுப்பும் முன் சாகுபடி செய்யவிருக்கும் பயிர்கள் குறித்து பைகளில் குறிப்பிட்டு அனுப்புதல் அவசியம். அவ்வாறு பாிசோதனைக்கு அனுப்பிய மண் மாதிாிகளின் ஆய்வு செய்யப்பட்டு முடிவறிக்கை உழவர்கள் முகவாிக்கு அனுப்பப்படும்.
முடிவுகள் குறித்த இவ்வறிக்கையில் அனுப்பிய உழவர் முழு விவரம், மண் மாதிாி எண், மண் மாதிாி சேகாித்த நாள், சர்வே எண், நிலப்பரப்பளவு, பாசன வகை விவரங்கள் குறிப்பிடப்பட்டு, அதன்பின் இருப்பிலுள்ள தழை., மணி, சாம்பல் சத்துக்களின் இருப்பு , அங்கக காிமங்களின் அளவு, கார - உவர் தன்மை இருப்பின் அதன் விவரம், அனைத்து இரண்டாம் நிலை சத்துக்களின் அளவு, தாமிரம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு, போரான் போன்றவற்றின் அளவும் கந்தகம், கால்சியம், மக்னீசியம் ஆகிய நுண்ணுாட்டச்சத்துக்களின் அளவு, இச்சத்துக்கள் போதுமான அளவு உள்ளனவா, குறைவாக உள்ளனவா, அதிகமாக உள்ளனவா? எனத் தெளிவு பட குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போதுள்ள மண்ணின் சத்துக்களின் அடிப்படையில் அந்நிலத்திற்கு குறிப்பிட்ட பயிருக்கான இயற்கை உரம், வேதி உரங்கள், இரண்டாம் நிலை நுண்ணுாட்டச் சத்து பாிந்துரைகளும் அவற்றை எவ்வாறு பயிருக்கு அளிக்கலாம் என்பது போன்ற விவரங்களும் உழவர்களுக்குதொிவிக்கப்படும்.
உழவர்கள் தாங்களே முன்வந்து இம்மண் பாிசோதனை மேற்கொண்டு பயிர் சாகுபடி செய்யலாம். மத்திய, மாநில அரசு மண் வள இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் அனைத்து வேளாண்மை நிலங்களுக்கும் தேசிய மண் வளத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் மண் பாிசோதனை செய்து மண்வளம் குறித்து மண் வள அட்டை வழங்கி வருவது குறித்து உழவர்கள் அறிய வேண்டும்.
கட்டுரையாளர்கள்,
தொடர்புக்கு:
palani.vel.pv70@gmail.com, selipm@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT