Published : 14 Sep 2019 11:23 AM
Last Updated : 14 Sep 2019 11:23 AM
- த.சத்தியசீலன்
தென்னை வளர்ப்பில் பூச்சி, நோய்த் தாக்குதல் உழவர்கள் நெடுங்காலமாகச் சந்தித்து வரும் பிரச்சினை. சுமார் 800 பூச்சியினங்கள் தென்னையைத் தாக்கிச் சேதத்தை விளைவித்து வந்தாலும் காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன் வண்டு, கருந்தலைப் புழு, எரியோபிட் சிலந்தி, சுருள் வெள்ளை ஈ போன்றவை தென்னைச் சாகுபடியில் பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடியவை. இந்தப் பூச்சிகளில் சுருள் வெள்ளை ஈ, பல தடுப்பு முறைகளால் கட்டுக்குள் இருந்தது. ஆனால், அது மீண்டும் தென்னையைச் சேதப்படுத்தத் தொடங்கியிருப்பதாக உழவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்காவில் 2004-ல் பெலிஸ், புளோரிடா மாகாணத்திலும் தென்னையில் கண்டறியப்பட்ட சுருள் வெள்ளை ஈ, இந்தியாவில் முதல்முறையாக 2016-ம் ஆண்டு பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்னையில் தாக்குதல் தொடுத்தது கண்டறியப்பட்டது. இந்த ஈ அனைத்து ரகத் தென்னையிலும் பாதிப்பு ஏற்படுத்தினாலும் சௌகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, மலேசியன் பச்சை குட்டை, நெட்டை, வீரிய ஒட்டு ரகங்களில் அதிக அளவில் தாக்குதலை ஏற்படுத்துகின்றன. இதேபோல் கொய்யா, மா, நாவல், வாழை, வெண்டை, சப்போட்டா, எலுமிச்சை, செம்பருத்தி, சீத்தாபழம், கருவேப்பிலை போன்றவற்றையும் இவை தாக்குகின்றன என கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி தெரிவிக்கிறார்.
“பெண் ஈயைவிட, ஆண் ஈ அளவில் சிறியது. இதன் முன் இறக்கைகளில் கரும்புள்ளிகள் காணப்படும். வயது முதிர்ந்த பெண் ஈ மஞ்சள் நிற நீள்வட்ட முட்டைகளைச் சுருள் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பகுதியில் இடுகின்றன. முட்டைகள் ஒருவித மெழுகுப் பூச்சுடன் காணப்படும். அதிலிருந்து இளம்பூச்சிகள் வெளிவரும். இவை நான்கு பருவங்களைக் கடந்து, பொய்க்கூட்டுப்புழுப் பருவத்தை அடையும்.
அதற்குப் பிறகு முதிர்ந்த ஈக்களாக வெளிவரும். 20-30 நாட்களில் புழுப் பருவம் வளர்ச்சியடைந்து, கூட்டம் கூட்டமாகத் தென்னை ஓலையின் அடிப்பகுதியில் தஞ்சமடையும். காற்றின் மூலம் அடித்துச் செல்லப்பட்டு, ஒரு மரத்தில் இருந்து அடுத்தடுத்த மரங்களுக்கும், அருகில் உள்ள தோட்டங்களுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும்” என வெள்ளை ஈக்களின் பாதிப்பு குறித்துப் பகிர்ந்துகொள்கிறார் சித்ராதேவி.
இளம்பூச்சிகளும் முதிர்ந்த ஈக்களும் சாறு உறிஞ்சும். இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவக் கழிவால், கேப்னோடியம் என்ற கரும்பூஞ்சானம் படரும். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சி, அதிகப்படியான வெப்பம், குறைந்த அளவு காற்றின் ஈரப்பதம் போன்ற காரணங்களால் வெள்ளை ஈக்கள் அதிகரித்திருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கிறார் சித்ராதேவி. ஏனெனில், மழைக்காலங்களில் இவற்றின் தாக்குதல் குறைவாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
கட்டுப்படுத்துவது எப்படி?
“மஞ்சள் நிறம், வளர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்களைக் கவரும் தன்மை உடையது. மஞ்சள் நிற பாலித்தீன் தாளால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகளை 3 அடி நீளம், 1 அடி அகலம் என்ற அளவில், ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே தொங்கவிட்டு, இவற்றின் நடமாடத்தைக் கண்காணிக்கலாம். பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் படுமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
கிரைசோபெர்லா என்ற இரை விழுங்கிகள், வெள்ளை ஈக்களை அனைத்து வளர்ச்சி நிலைகளிலும், விரும்பி உண்ணும் என்பதால், அவற்றை ஹெக்டேருக்கு 1000 என்ற எண்ணிக்கையில் தென்னந்தோப்புக்குள் வளர்ப்பதன் மூலம் இந்த வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த முடியும்” சித்ராதேவி. வெள்ளை ஈக்கள் பாதிக்கப்பட்ட தோட்டங்களில், அதன் எதிரிகளான காக்ஸ்னேல்லிட் என்ற பொறி வண்டுகள், என்கார்ஸியா என்ற ஒட்டுண்ணிகள் இயற்கையாகவே உருவாகும்.
இவை காணப்படும் ஓலைகளைச் சிறிது, சிறிதாக வெட்டி, பாதிக்கப்பட்ட தென்னை மர ஓலைகளின் மேல் வைக்கலாம். பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால், இயற்கை எதிரிகள் அழிந்துவிடும் என்பதால் இயற்கை முறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ள இடங்களில், 5 மி.லி. வேப்ப எண்ணெய், 1 சதவீதம் அசாடிராக்டின், 2 மி.லி.
டீப்பால் அல்லது சோப்பு ஆகிய ஏதெனும் ஒன்றை, ஒரு லிட்டர் தண்ணீரில் ஓலையின் அடிப்பகுதி நன்றாக நனையுமாறு தெளிக்க வேண்டும். கரும்பூஞ்சாணத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த மைதா மாவு, ஸ்டார்ச், அரிசிக் கஞ்சி கரைசல் ஆகிய ஏதாவது ஒன்றை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், பூஞ்சாணம் உதிர்ந்துவிடும். இவ்வாறான முறைகளைப் பின்பற்றி சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT