Published : 18 Jul 2015 01:23 PM
Last Updated : 18 Jul 2015 01:23 PM
கடலை மிட்டாயும் எள்ளுருண்டையும் காணாமல் போய், நம் வயிற்றை நிரப்பிவரும் பாக்கெட் உணவுகள் நோயைப் பரவலாக்கிவருகின்றன. அதற்கு மாற்றாக நமது சிறுதானிய உணவுகள் எப்படி ஆரோக்கியத்தை மீட்டெடுக்கின்றன என்பது பற்றி திருச்சியில் சமீபத்தில் நடைபெற்ற பாரம்பரிய விதை, மூலிகை, வேளாண் திருவிழா கவனப்படுத்தியது.
இதன் காரணமாக, திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் மரங்களின் நிழலில் ஜூலை 11, 12 ஆகிய இரண்டு நாட்களும் இயற்கை மணம் வீசியது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, தானியங்கள், காய்கறிகள், வரகு, சாமை, திணை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்கள், அரிய மூலிகை மருந்துகள், பாரம்பரிய விதை ரகங்கள் குவிந்திருந்தன. பசுமை சிகரம், கவிமணி பாரதி உழவர் மன்றம், கிரியேட் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்தத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
ஆரோக்கியத்துக்கு இயற்கை…
"நல்ல விதையை, நஞ்சு தெளிக்காமல் விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும். மக்களும் நல்ல உணவை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழாவை ஏற்பாடு செய்தோம். மக்களிடையே சிறுதானியங்கள் பிரபலமாகிவருகின்றன. அவற்றை அனைத்து மக்களிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்" என்று பசுமை சிகரம் அமைப்பின் சி.யோகநாதனும், கா.சாந்தகுமாரும் சொல்கிறார்கள்.
திருவிழாவின் ஒரு பகுதியாக இயற்கை விவசாயம், சிறுதானிய உணவு முறை, பூச்சிக்கொல்லி தெளிக்காமல் வீட்டுக் காய்கறிச் செடி வளர்ப்பு என ஏராளமான விஷயங்கள் பற்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த கருத்தாளர்கள் பேசினர்.
எள்ளுருண்டை எங்கே?
"சிறு நகரங்களில்கூட நமது பாரம்பரிய உணவைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இருக்கும் என்று கனவிலும் நான் நினைத்தது கிடையாது. இன்றைக்குச் சிறிய கிராமங்களில்கூடக் கடலை மிட்டாயும் எள்ளுருண்டையும் மறந்துபோய் வண்ண வண்ணப் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகள் கடைகளில் தோரணங்களாக நம்மை வரவேற்கின்றன.
உணவு என்பது உயிர் வாழ்வதற்கான ஆதாரமாக இப்போது இல்லை, அது விற்பனைப் பொருளாக மாறிவிட்டது. நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் திரைப்பட நடிகர்களும் பிரபலங்களும்தான் தீர்மானிக்கிறார்கள். இன்றைக்குத் தாய்ப்பாலில்கூட நஞ்சின் எச்சம் கலந்திருக்கிறது. வெள்ளைக் காரர்களைப் பார்த்து நாம் போட்டுக் கொண்ட சூடு, இப்போதுதான் ரணமாகி வலிக்கத் தொடங்கியுள்ளது.
‘உணவே மருந்து' என்ற பாரம்பரியத்திலிருந்து நாம் மாறிவிட்டோம். பாதுகாப்பான நமது பாரம்பரிய உணவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை என்பதை அனைவரும் உணர்ந்தால், நோயற்ற சமுதாயத்தைப் படைக்க முடியும்" என்று திருவிழாவின் தொடக்க நாளன்று வேளாண் நிபுணர் அனந்து பேசினார்.
காலை எழுந்தவுடன் தண்ணீர்
அவர் சுட்டிக்காட்டிய சீரான உணவு முறை பற்றியும் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது. தற்போது மருத்துவச் செலவு அதிகரித்துவருகிறது. ரணத்தைவிட நோய் கொடுமையானது. இதைக் குறைப்பதற்கான திட்டமிடலை அவசியம் செய்தாக வேண்டும். காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். இயன்ற அளவு குடித்தால் போதும்.
காலை உணவாக வரகு, திணை, சாமை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களில் செய்த உணவைச் சாப்பிடலாம். மதிய உணவில் முதலில் பழம், பிறகு காய்கறி, சோறு சம அளவில் எடுத்துக்கொள்ளலாம். இரவில் ஒற்றை உணவு வகையை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இந்த உணவுப் பழக்கத்தை முழுமையாகக் கடைப்பிடித்தால், உடலோடு சேர்த்து மனமும் ஒத்துழைக்கும் என்று ஆரோக்கிய வாழ்க்கைக்கான உணவு முறையை முன்வைத்தார் ந. பார்த்திபன்.
அவர்களது பேச்சைப் பிரதிபலிக்கும் வகையில் திருவிழாவுக்கு வந்தவர்களில் ஏராளமானோர் பாரம்பரிய உணவு தானியங்கள், சிறுதானியங்கள், மூலிகை மருந்துகள், காய்கறி விதைகள் ஆகியவற்றை வாங்கிச் சென்றனர்.
நீரிழிவைக் கட்டுப்படுத்த…
உணவு பற்றி மட்டுமல்லாமல், நமது பாரம்பரிய மருத்துவத்தின் சிறப்பு பற்றியும் கருத்தரங்கில் பல விஷயங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. "அனைத்து நோய்களுக்கும் நம்மிடமே மருந்துகள் உள்ளன. அதுதான் நமது பாரம்பரிய மருத்துவத்தின் சிறப்பு. நீரிழிவு நோயை 20 நாட்களில் கட்டுப்படுத்தலாம். வில்வ இலை 5, கடுக்காய் மேல்தோல் பொடி 5 கிராம் எடுத்துக்கொண்டு காலையில் வெறும் வயிற்றில் நீராகாரம் அல்லது தண்ணீர் கலந்து குடிக்க வேண்டும். தொடர்ந்து 20 நாட்கள் இதைச் செய்ய வேண்டும். இந்த மருந்தைச் சாப்பிடும் நாட்களில் மூன்று வேளையும் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்ள வேண்டும்.
உடல் சூடு அதிகமாவதால்தான் பெரும்பாலான நோய்கள் வருகின்றன. இதற்குக் காலை எழுந்தவுடன் நல்லெண்ணெயை 10 மில்லி எடுத்து வயிற்றிலும் கால் பாதங்களிலும் தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்" என்று மூலிகைகளின் மகத்துவத்தை முன்வைத்தார் தேவூர் மணிவாசகம்.
கால்நடைகளுக்கும்...
கெட்டுப்போன உள்ளுறுப்புகளை மீட்டெடுக்கும் சக்தி, நமது பாரம்பரிய மருத்து வத்துக்கு மட்டுமே உள்ளது. நோயின் தன்மையை உணர்ந்து, மருந்து வழங்குவதுதான் பாரம்பரிய மருத்துவத்தின் சிறப்பு. கால்நடைகளுக்கு அதிகமாக ஏற்படும் மடிநோய்க்கு பாரம்பரிய மருத்துவம் மூலமாகவே சிகிச்சை செய்யலாம். இதற்குச் சோற்றுக் கற்றாழை, மஞ்சள் தூள், சுண்ணாம்பு ஆகியவை போதும் என்றார் தஞ்சாவூரில் உள்ள கால்நடை மருத்துவ மரபுசார் மூலிகை ஆராய்ச்சி மையத் தலைவர் ந. புண்ணியமூர்த்தி.
சுந்தரானந்த சுவாமி, ‘நல்ல கீரை' ஜெகநாதன், மருத்துவர் காசி. பிச்சை, பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வம் உள்ளிட்டோர் பேசினர். உடல் ஆரோக்கியம், நோயற்ற வாழ்வு ஆகியவற்றைத் தேடும் மக்களுக்கு இந்த இயற்கை வேளாண் திருவிழா, புதிய பாதையைக் காட்டியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
பள்ளியைத் தேடும் ஆர்வம் நஞ்சில்லா உணவுக்கு இல்லை
‘நல்ல சோறு' அமைப்பின் உணவு நிபுணர் ராஜமுருகன் பேசியது:
தங்களுடைய குழந்தை நல்லமுறையில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகக் கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோர் காட்டும் ஆர்வம், நஞ்சில்லாத உணவை ஊட்டி வளர்க்க வேண்டும் என்பதில் இல்லை.
நம்முடைய உணவுப் பாரம்பரியம் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ற தனித்தனி உணவு வகை நம்மிடம் இருந்தது. ஆனால், இன்றைக்கு அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளை ருசித்துக் கொண்டிருக்கிறோம்.
நம் குழந்தைகளைச் சிறு வயதிலிருந்தே பாரம்பரிய உணவுக்கு மெள்ள மாற்றினால், அடுத்த தலைமுறையாவது ஆரோக்கியமான சமுதாயமாக உருவாகும்" என்றார்.
படங்கள்: ஜி. ஞானவேல்முருகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT