Published : 07 Sep 2019 04:58 PM
Last Updated : 07 Sep 2019 04:58 PM
இறந்ததைத் தின்று இருப்பவற்றைக் காக்கும் பாறுக் கழுகுகளை நினைவுகூர்வதற்காக உலகமெங்கும் செப்டம்பர் முதல் சனிக்கிழமை பாறுக் கழுகு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பாறுக் கழுகு ‘காட்டின் சுகாதாரப் பணியாளர்’ எனப்படுகிறது.
இந்தியாவில் ஒன்பது வகையும் தமிழகத்தி்ல் வெண்முதுகு பாறு, கருங்கழுத்து பாறு, செம்முகப் பாறு, மஞ்சள் முகப் பாறு ஆகிய நான்கு சிறப்பினங்களும் காணப்படுகின்றன.
பாறுக் கழுகுகளில் 99 சதவீதம் அழிந்துவிட்டன. தமிழகத்தில் காணப்படும் 4 வகையுமே அழியும் ஆபத்தில் தத்தளித்து வருகின்றன. ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் இருந்த இந்தப் பறவைகள், தற்போது நீலகிரி உயிர்க்கோளப் பகுதியில் மட்டுமே தென்படுகின்றன.
மாடுகளுக்குச் செலுத்திய வலிநிவாரணிகளும் இறந்த விலங்குகளின் மீது தெளிக்கப்படும் விஷமும் இரை பற்றாக்குறையும் இவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணம்.
இவற்றின் அழிவுக்கு முதன்மைக் காரணமான டைக்ளோபெனாக் வலிநிவாரணி மருந்தின் கால்நடை பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்தது. ஆனால் இப்போது அசிக்ளோபெனாக், கீட்டோபுரோபேன், புளூநிக்சின், நிமுசிலாய்ட்ஸ் ஆகிய மருந்துகளும் பாறுக் கழுகுகளைப் பாதிப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய கால்நடை ஆராய்ச்சி மையம் பாதுகாப்பான மருந்தாகப் பரிந்துரைத்துள்ள மெலாக்சிகம் மருந்தை மட்டுமே வலிநிவாரணியாகப் பயன்படுத்த வேண்டும். புலி, சிறுத்தை போன்றவை தாக்கிய மாட்டில் நஞ்சு தடவும் வன்செயலை மக்கள் நிறுத்த வேண்டும்.
கீட்டோபுரோபேன் மருந்தைக் கால்நடைப் பயன்பாட்டிலிருந்து விலக்கி மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. கேடுபயக்கும் புளூநிக்சின் மருந்துகள் மெல்ல தலைகாட்டி வருவதாகத் தகவல்கள் வருகின்றன. அதைத் தடைசெய்ய அரசு முன்வர வேண்டும்.
- சு.பாரதிதாசன், தொடர்புக்கு: arulagamindia@gmail.com.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT