Published : 31 Aug 2019 10:59 AM
Last Updated : 31 Aug 2019 10:59 AM
சு. அருண் பிரசாத்
மனிதர் தூண்டிய பேரழிவு
பிரேசிலின் மிகப் பெரிய நகரமான சா பாலோ அன்றும் வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருந்தது. மதியம் மூன்று மணி அளவில் திடீரென்று அந்த நகரைப் பெரும் கரும்புகைப் போர்வை சூழ்ந்து மூடியது. சுமார் 1,700 மைல்களுக்கு அப்பாலுள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீதான் இதற்குக் காரணம் என்பதை அறிந்தபோதே, உலகின் மிகப்பெரிய காடு எரிந்து சாம்பலாகிக்கொண்டிருப்பதன் தீவிரத்தை உலகம் உணர்ந்தது.
பூமியின் நிலப்பரப்பில் வெறும் 6 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள அமேசான் காடு, பூவுலகின் தாவரங்கள், உயிரின வகைகளில் பாதியைக் கொண்டு செழுமையால் நிறைந்திருக்கிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மழைக்காடு. 40,000 தாவர இனங்கள், 1,300 பறவையினங்கள், 3,000 மீன் இனங்கள், 427 வகைப் பாலூட்டிகள், 25 லட்சம் பூச்சியினங்கள் என மாபெரும் உயிரினப் பன்மை மையமாக அமேசான் திகழ்கிறது.
தீவிரக் காடழிப்பு
பிரேசிலில் 1970-களில் காடழிப்பு தீவிரப் பிரச்சினையாக உருவெடுத்தது. அப்போதிருந்து 12% காடுகளை பிரேசில் இழந்திருக்கிறது. இது இந்தியாவின் மொத்தப் பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு. உலக வங்கியின் அறிக்கையின்படி, பிரேசிலில் அழிக்கப்பட்ட காட்டுப் பகுதியில் 80% கால்நடை மேய்ச்சலுக்காகவே பயன்படுத்தப் படுகின்றன. சுமார் 20 கோடிக் கால்நடைகளைக் கொண்டிருக்கும் பிரேசில், தன்னுடையப் பொருளாதாரத்தில் ஆண்டுக்கு 50,000 கோடி டாலரைக் கால்நடைப் பண்ணைகளில் இருந்து பெறுகிறது. மாட்டுக்கறி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் இந்த நாடு, உலகத் தேவையில் 20%ஐ நிறைவுசெய்கிறது.
‘வளர்ச்சி’க் காட்டுத்தீ
அமேசான் காடுகளில் 60%ஐக் கொண்டுள்ள பிரேசிலில் ஜூலை முதல் அக்டோபர் வரை வறட்சியான காலம். இந்தக் காலத்தில் காட்டுத்தீ பரவுவது இயல்பாக இருந்தாலும், காடழிப்பின் ஒரு பகுதியாக காட்டுக்குத் தீ வைப்பது அந்நாட்டு விவசாயிகளிடையே வழக்கம். வேளாண்மை, கால்நடை மேய்ச்சலுக்கான இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் பெருநிறுவனங்களின் பங்கு கணிசமானது.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஆகஸ்ட் 23 வரையிலான காலத்தில் மட்டும் பிரேசிலில் 75,336 இடங்களில் காட்டுத்தீ பரவியிருப்பதாகவும், இது வரையிலான பதிவுகளில் இதுவே உச்சம் எனவும் பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது.
‘வளர்ச்சி’ என்ற பெயரில் பிரேசில் அரசு மேற்கொண்டுவரும் செயல்பாடுகளால், தற்போது எரிந்துகொண்டிருக்கும் காட்டுத்தீ பிரேசிலுக்கு மட்டும் பிரச்சினையை ஏற்படுத்தவில்லை. ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் புவியின் சூழலியலுக்கும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீ, அமேசானில் தற்காலிக விளைவுகளை மட்டுமல்லாமல், நீண்ட காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
புவி வெப்பமயமாதலுக்கான முதன்மைக் காரணிகளுள் ஒன்று கரியமில வாயு வெளியேற்றம். அந்த வாயுவைப் பேரளவில் கிரகிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கும் அமேசான் காடு, தற்போதைய பேரழிவால் தன் முழு கிரகிக்கும் திறனை இழக்கும். அது மட்டுமல்லாமல் கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்குப் பற்றியெரியும் மரங்கள், கரியமில வாயுவை வெளியேற்றிப் பருவநிலை மாற்றத்துக்குப் பங்களிக்கவும் செய்யும்.
காட்டுத்தீயால் அழிந்த மழைக்காடுகளில் மண் வளம் முற்றிலும் சேதமடைந்து, மீண்டும் துளிர்ப்பதற்கு வழியில்லாமல் போவது அதிகரித்திருக்கிறது. ஒருவேளை காட்டுத்தீயும் காடழிப்பும் அமேசானில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டாலும்கூட, அந்தக் காடு பழையபடி மீண்டு வருவதற்கு இருபதில் இருந்து நாற்பது ஆண்டுகள்வரை ஆகும்!
அலட்சிய அதிபர்
அமேசான் இன்று பற்றியெரிந்துகொண்டிருப்பதற்கு அந்நாட்டின் அரசியல் தலைமையும் ஒரு முக்கியக் காரணம். பிரேசிலின் புதிய அதிபராக இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஸெய்ர் போவ்சோனரு பொறுப்பேற்றார். பெண்கள், கறுப்பினத்தவர், சூழலியலாளர்கள், தன்பாலினச் சேர்க்கையாளர்கள் ஆகியோருக்கு எதிராக அருவருக்கத்தக்க கருத்துகளைத் தன் அரசியல் வாழ்க்கை முழுக்கத் தொடர்ந்து வெளியிட்டுவந்தவர் அவர்.
சூழலியல் விரோதப் போக்கைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வரும் போவ்சோனரு, ஆட்சிப் பொறுப்பேற்ற சில மணி நேரத்திலேயே, வனக் கொள்கையை வேளாண் அமைச்சகத்தின்கீழ் கொண்டுவந்து, அமேசான் அழிக்கப்படுவதற்கான தொடக்கப்புள்ளியை வைத்தார்.
அமேசான் காட்டுத்தீ குறித்த செய்திகள் உலகைக் கலங்கடித்துக்கொண்டிருந்த நேரத்தில், இது எதையும் பொருட்படுத்தாமல் ‘ஸ்டாண்ட்-அப் காமெடி’ நிகழ்ச்சியொன்றில் சிரித்துக்கொண்டிருந்தார் போவ்சோனரு. மறுபுறம், சமீபத்தில் கூடிய ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு அமேசான் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த 20 மில்லியன் டாலர் நிதியுதவியை பிரேசிலுக்கு வழங்க முன்வந்தபோது, அந்தத் தொகையைப் பெற வன்மையாக அவர் மறுத்தார். அரசியல் தலைமைகளின் சூழலியல் அக்கறைக்கு போவ்சோனரு சிறந்த எடுத்துக்காட்டு.
திரும்ப வழியுண்டா?
சாலைகளிலும் பயணங்களிலும் திரும்பவுதற்கு ஒரு வழி இருப்பதுபோல, இயற்கை வள அழிப்பில் திரும்பிப் பழைய நிலைக்குப் போவதற்கான சாத்தியம் மிக மிக அரிது. புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் பிரபல நாவலின் கடைசி வரி இப்படி முடியும்: “தனிமையின் நூறு ஆண்டுகளை அனுபவிக்க விதிக்கப்பட்ட வம்சங்களுக்குப் பூமியில் இரண்டாவது வாய்ப்பு கிடையாது.” நமக்கும் அதுவே விதிக்கப்பட்டிருக்கிறது!
மழைக்காடுகள்
புவியின் மிகப் பழமையான சூழலியல் அமைப்புகளுள் ஒன்று மழைக்காடுகள். இவற்றில் பெரும்பாலானவை 7 கோடி ஆண்டுகள் பழமையானவை. ஆண்டுக்கு 1,750 மில்லி மீட்டரில் இருந்து 2,000 மி.மீ.வரை மழைப்பொழிவைப் பெறும் இவை, நம்ப முடியாத பன்முகத்தன்மையையும் சிக்கலான அமைப்பையும் கொண்டவை. 10 சதுர கி.மீ. பரப்பில் மட்டும் 1,500 வகையான பூக்கும் தாவரங்கள், 750 வகையான மரங்கள், 400 பறவையினங்கள், 150 வண்ணத்துப் பூச்சி வகைகள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அமேசான் காட்டுத்தீ உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் அதே வேளையில், பிரேசிலின் அண்டை நாடான பொலிவியா, மத்திய ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா, காங்கோ, சைபீரியாவின் ஆர்க்டிக் பகுதி காடுகளிலும் காட்டுத்தீ பற்றியெரிந்துகொண்டுதான் இருக்கிறது. அதேபோல இந்தியா, இந்தோனேசியா, கொலம்பியா, ஐவரி கோஸ்ட், கானா, ஐரோப்பாவின் சில பகுதிகளில் காடழிப்பும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
என்ன நடக்கும்?
வாஷின்டன் போஸ்ட் நாளிதழில் சூழலியல், பருவநிலை மாற்றம் குறித்து எழுதிவரும் பத்திரிகையாளர் ஆண்ட்ரூ ஃபிரீட்மானிடம் அமேசான் காட்டுத்தீ குறித்து மின்னஞ்சல் வழியாகக் கேட்டபோது, “அமேசானில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, ஏற்கெனவே உள்ள கரியமில வாயு, கார்பன் மோனாக்சைடு வெளியேற்றத்தைத் துரிதப்படுத்தும். இதைக் கட்டுப்படுத்தாவிட்டால், கரியமில வாயு வெளியேற்றத்துக்கு அமேசான் முதன்மைக் காரணமாகி, புவி வெப்பமாதலை மேலும் மோசமடையச் செய்யும். அத்துடன் உலகில் அமேசானில் மட்டுமே உள்ள சிறப்பு உயிரினங்கள் பேரளவில் அழியும்” என்று அதன் விளைவுகளைப் பட்டியலிடுகிறார்.
களத்திலிருந்து…
அமேசான் பழங்குடிகளின் பிரச்சினைகளைக் களத்திலிருந்து நேரடியாகப் பதிவுசெய்துவரும் பத்திரிகையாளர் அலெக்ஸாண்டர் ஜைட்செக் இது குறித்துக் கூறியபோது, “இப்போதைய சூழல் 1964-ல் நிலவிய ராணுவ ஆட்சியை நினைவுபடுத்துவதாகக் கூறும் பழங்குடிகள், அரசு தங்கள் வாழிடங்களை அழிக்கப் படையெடுத்திருப்பதாகக் கருதுகிறார்கள். இயற்கையை மதிக்காத பிரேசில் அதிபர் போவ்சோனருவின் வருகையால், ஏற்கெனவே மோசமாக இருக்கும் சூழலியல் கூடுதலாகச் சீர்குலையும் என்று அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்” என்கிறார்.
கட்டுரையாளர் தொடர்புக்கு:
arunprasath.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT