Published : 26 Jul 2019 05:48 PM
Last Updated : 26 Jul 2019 05:48 PM
சு. அருண் பிரசாத்
பருவநிலைப் பேரழிவின் விளைவால் காவிரி டெல்டாவின் ஒரு பகுதி அழியும், பருவநிலை மாற்றத்துக்குத் தாக்குப்பிடிக்கும் திறனை சென்னை இழக்கும் என்று எச்சரிக்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியரும் தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான எஸ். ஜனகராஜன். தமிழகக் கடல்மட்ட உயர்வு குறித்து மேற்கொண்டு வரும் ஆய்வின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை அவர் விடுத்திருக்கிறார்.
மனிதச் செயல்பாடுகளால் உருவான பருவநிலை மாற்றத்தின் நேரடியான விளைவுகளுள் ஒன்று கடல்மட்ட உயர்வு. புவி வெப்பமடைதல் காரணமாக இரண்டு துருவப் பகுதிகள், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் அதிவேகமாக உருகிவருகின்றன. இதன் விளைவாக உலகெங்கும் கடல்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.
உலகில் சுமார் 100 கோடிப் பேர் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மூன்றாம் உலக நாடுகள், வளர்ந்துவரும் நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடலை வாழ்வாதாரமாகக் கொண்டு கடற்கரையோரம் வாழும் மக்களைக் கடல்மட்ட உயர்வு நேரடியாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. 1990-களில் 2.5 மி.மீ. ஆக இருந்த உலகின் சராசரிக் கடல்மட்டம், தற்போது 3.2 மி.மீட்டராக உயர்ந்துள்ளது.
“மனிதச் செயல்பாடுகளால் உருவான பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை ஓரளவுக்குத்தான் சமாளிக்க முடியும்: கரியமில வாயு வெளியேற்றம், பசுங்குடில் வாயுக்கள் ஆகியவற்றால் உலகெங்கும் பனிமலைகள் வேகமாக உருகிக்கொண்டிருக்கின்றன. முழுக்க பனிப்பாறைகளால் உருவான ஆர்க்டிக், அண்டார்க்டிக், கிரீன்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் பனி உருகுதல் அதீத வேகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே பெரும்பாலான பனிப்பாறைகள் உருகிக் கடலில் விழுந்துகொண்டிருக்கின்றன. இந்த அம்சத்தைப் பொறுத்தவரை கணிப்புகளைவிட விளைவுகள் அதிகமாக இருக்கும்” என்று கடல்மட்ட உயர்வுக்கான அடிப்படைக் காரணங்களை விளக்குகிறார் எஸ். ஜனகராஜன்.
தீவிரத்தை உணர்ந்திருக்கிறோமா?
கடல்மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரத்துக்குள் இருக்கும் இடங்களை ‘எளிதில் பாதிக்கப்படக்கூடிய இடங்கள்’ என்று வரையறுத்து, வாழ்வதற்கு ஆபத்தான இடங்களாக ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அறிவித்துள்ளது.
மூன்று பக்கமும் கடல் சூழ்ந்துள்ள இந்தியாவில், கடற்கரையின் மொத்த நீளம் 7,516 கி.மீ. உலக அளவில் கடல்மட்ட உயர்வால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பகுதிகளில் இந்தியாவும் ஒன்று. ஆண்டுக்கு 1.6-1.7 மி.மீ., என்ற அளவில் இந்தியாவில் கடல்மட்டம் உயர்ந்து வருகிறது. நாட்டின் சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு, கடலோர சமூகங்களுக்கு இது மிகப் பெரிய ஆபத்தாக மாறும்.
பருவநிலை மாற்றம், கடல்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து, “இன்றைக்கு வீசும் புயல்களின் தீவிரம் 100 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய புயல்களைவிட மிக அதிகம். அதைப் போலவே, மழைப் பொழிவும் முன்பைவிடத் தீவிரமடைந்திருக்கிறது. மேலும் புவியியல் அமைப்பு, தட்பவெப்ப நிலை, பருவமழை தவறுதல் ஆகியவை ‘புதிய இயல்பாக’ மாறிக்கொண்டுள்ளன. புவி வெப்பமடைதலின் விளைவாகக் கடல்நீரிலும் வெப்பம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது; பருவமழையை நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் வேளாண்மை கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும்.
கடல்மட்டம் உயர்ந்து வருவதைப் பற்றிய புரிதல் நம்மிடம் எந்த அளவில் இருக்கிறது, அதை எதிர்கொள்வதற்கு என்னென்ன முன்னேற்பாடுகளைச் செய்திருக்கிறோம், அவற்றின் மூலம் நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியுமா, குறைந்தபட்சம் இதைக் குறித்த தகவல்களையாவது நாம் அறிந்து வைத்திருக்கிறோமா?” என்று தொடர் கேள்விகளை முன்வைக்கும் ஜனகராஜனின் ஆய்வு, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடல்நீர் உட்புகுதல், கடல் அரிப்பு ஆகியவற்றை மையப்படுத்தியது.
தமிழகமும் கடல்மட்ட உயர்வும்
இந்தியாவில் நீண்ட கடற்கரையைக் கொண்ட இரண்டாம் மாநிலம் தமிழ்நாடு. 1076 கி.மீ. நீளம் கொண்ட தமிழகக் கடற்கரையில் 13 மாவட்டங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடல்மட்ட உயர்வால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிக்கொண்டிருக்கின்றன என்று இந்த ஆய்வில் ஜனகராஜன் கண்டறிந்துள்ளார்.
“ஆற்றிலிருந்து வரும் வண்டல், கழிமுகப் பகுதியில் விரிந்து பரவும். 1935-ல் மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகு வண்டல் வருவது நின்றுவிட்டதால், காவிரி டெல்டா பகுதியில் கடல்நீர் உட்புகுவதற்கான சாத்தியம் மேலும் அதிகரித்துள்ளது. ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் வரையறுத்துள்ள அளவீட்டின்படி தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதி கடல்மட்டத்திலிருந்து 10 மீ. உயரத்துக்குள் இருக்கின்றன.
இதில் நாகை மாவட்டத்தின் 25% நிலப்பகுதி 5 மீட்டருக்குள்ளும், சில பகுதிகள் கடல்மட்ட அளவிலேயும், அதற்குக் கீழேயும்கூட (sub zero) இருக்கின்றன. இந்த நிலையால் கடல்மட்டம் உயரும்போது, மிக மோசமான பாதிப்புகளை நாகை மாவட்டம் எதிர்கொள்ளும். கடலோர வெள்ளம் (nuisance coastal flooding) ஏற்படும்போது கால்வாய்கள் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவுக்குக் கடல்நீர் ஊருக்குள் புகுந்துவிடும். முன்பு இதுபோன்று நடந்தபோது, மீண்டும் நீர் கடலுக்குத் திரும்பிவிடும்; ஆனால், இப்போது திரும்பாமல் அப்படியே தங்கிவிடுகிறது.
நிலத்தடி நீர் 100% உவர்ப்பாகிவிட்டால், நிலத்தின் தன்மை சீர்கெடும்; வேதாரண்யம் ஏரியில் உவர் நீர் - நன்னீர் குறிப்பிட்ட அளவு கலந்தும் தனித்தனியாகவும் இருக்கும். அந்த இயல்பு இப்போது திரிந்து கடல்நீர் வெளியேறாமல் ஏரி முற்றிலும் உவர் நீராக மாறிவிட்டது; டெல்டா மாவட்டங்களில் 16 கடைமடைக் கால்வாய்கள் (tail end regulator) மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற வேளாண்மை, கடல்நீர் உட்புகுதலால் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது” எனக் கடல்மட்ட உயர்வால் ஏற்பட உள்ள பாதிப்புகளாக ஜனகராஜன் குறிப்பிடுகிறார்.
“இந்த ஆய்வுக்காக 156 இடங்களில் நிகழ்த்தப்பட்ட சோதனையில் 2,500 முதல் 4,000 ஏக்கர் வரையிலான நிலம் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கண்டறிந்துள்ளோம். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 20 ஆண்டுகளில் பாதி அல்லது முழு நாகை மாவட்டமுமே காணாமல் போவதற்கான சாத்தியம் இருக்கிறது” என்றும் பருவநிலை மாற்றத்தால் நாம் சந்திக்கப்போகும் முதல் இழப்பாக இது அமையும் என்றும் அச்சம் தெரிவிக்கிறார் ஜனகராஜன்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT