Published : 20 Jul 2019 11:21 AM
Last Updated : 20 Jul 2019 11:21 AM
அனந்து
இயற்கை உணவுப் பொருட்களில் பல பூச்சிகள் காணப்படுகின்றன. அதுவும் ஒரு மாதத்துக்கு மேல் வைத்திருந்தால் நிச்சயம் பூச்சி தாக்குதல் ஏற்படுகிறது. பூச்சி வராமல் பாதுகாப்பது எப்படி?
இயற்கை உணவுக்குப் பூச்சிகள் ஈர்க்கப்படுவது இயற்கையே! நம்மைவிட எது இயற்கையானது, நல்ல உணவு என்று அவற்றுக்கு எளிதாகத் தெரியும்.
என்ன இருந்தாலும் நம்மைவிட சில பல லட்சம் ஆண்டுகள் மூத்த குடிகள் அல்லவா? இப்படி ஓர் உணவு மூலப்பொருளில் பூச்சிகள் காணப்படுவதே, அது இயற்கை உணவு என்பதற்கு அத்தாட்சி.
பூச்சிகளைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. பூச்சி இருந்தால் ஓடிவிட வேண்டாம். நிதானமாக யோசித்தால் அது ஒரு நல்ல அறிகுறி என்பது விளங்கும். எவ்வளவு பூச்சிகள் இருக்கின்றன, எவ்வளவு உணவை அவை உண்டோ ஊடுருவியோ இருக்கின்றன என்று பார்க்க வேண்டும்.
மரபுப் பராமரிப்பு
நமது தாத்தா பாட்டி காலம்வரை ஓராண்டுக்கான உணவுப் பொருட்களை வாங்கி, வீட்டிலேயே வைத்துப் பராமரித்து வந்தார்கள். அவ்வப்போது வெய்யிலில் இட்டு, நிழலில் உலர்த்தி, திறந்து மூடி என ஒவ்வொரு பண்டத்துக்கு ஒரு வகைப் பாதுகாப்பு நடவடிக்கையைப் பின்பற்றி, பொருட்கள் நன்கு பராமரிக்கப்பட்டன. புளி, பருப்பு, எண்ணெய் வித்துகள் போன்றவற்றை வெயிலிலும், அரிசி, கோதுமை போன்றவற்றை நிழலிலும் காயவைத்துப் பயன்படுத்தியதைச் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை சாதாரணமாகப் பார்க்க முடிந்தது. அப்படியே வெல்லம், பனைப் பொருட்கள், மிளகாய் என எல்லாமே ஓராண்டுக்கு வைத்துக் கையாளப்பட்டன.
விதைகளும் அப்படியே! எளிய பூச்சி மேலாண்மை வீட்டுக்கு வீடு பின்பற்றப்பட்டது! மிளகாய், கறிவேப்பிலை, வேம்பு, வசம்பு எனப் பலவும் ஒவ்வொரு பொருளின் மூட்டையிலும் பூச்சிகளை விரட்ட இடப்பட்டன. உளுந்து, பயறு போன்ற பருப்புகளுக்கு, கொஞ்சம்போல் விளக்கெண்ணய் வைத்து பரவலாகத் தேய்க்க, நெடுநாளைக்கு பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைத்தது. இப்படிப் பல எளிய முறைகள் இருந்தன. கிராமத்தில் அதிகமான அளவில் வேறு பல உத்திகள் கடைப்பிடிக்கப்பட்டன. முக்கியமாகத் தொம்பை, குதிர் போன்ற பாதுகாப்புக் களங்கள்.
ஆக, நாம் தோற்றது பூச்சிகளிடம் இல்லை. நமது மரபைத் தொலைத்ததால் வந்த குறைகளாலும், மறந்துவிட்ட நுட்பங்களாலும், மறுத்துவிட்ட நல்ல பழக்கங்களாலும்தான்.
பூச்சி ஏன் சீந்தவில்லை?
உண்மையில், பூச்சியில்லா வெண்டையும், கத்திரியும், பழங்களும், அரிசியும் பருப்பும் நமக்கு ஓர் எச்சரிக்கையாக அமைய வேண்டும், பூச்சியே இல்லாத அல்லது அவை சீந்தாத உணவு உண்மையில் நல்ல உணவா என்று கேட்காமல் விடுவதுதான் தவறு. ஏனென்றால், அத்தனை நச்சுப் பூச்சிக்கொல்லிகளில் உணவு மூலப்பொருட்கள் முக்கியெடுக்கப்படுகின்றன. பல நேரம் இயற்கை காய், கனிகள் வாடியும் வதங்கியுமே காணப்படும். பளபளவெனெ காட்சியளிக்கும் வேதிப்பொருள் முக்கப்பட்ட காய் கனிகள் போல் இருக்காது.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய், கனிகள் பல நேரம் வதங்கியது போலத் தோன்றுவது பருவ மாற்றத்தாலும், பல கி.மீ. தொலைவு கடந்து வந்ததாலும்தான். அதனால் அவை சுவையிலோ சத்திலோ குறைவாக இருக்காது. தைரியமாக வாங்கிப் பயன்படுத்தலாம்.
வழக்கமாக நாம் வாங்கும் கடைகளில் பல 100 கி.மீ. கடந்து வந்த காலிஃபிளவரும், கோஸும் நம்மைப் பார்த்து மலர்ந்து சிரிக்க முடிகிறது என்றால், இடையில் எங்கே தவறு நடந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். வேதி வேளாண்மையில் இந்தக் காய், கனிகளை விளைவிக்க பேரளவு கொடிய நச்சுகள் தெளிக்கப்படுகின்றன. பின்னர் கடைகளில் அனைவரையும் பார்த்து மலர்ந்திருக்க வேண்டி, மேலும் 2-3 முறை நச்சுகளில் முக்கி அனுப்பப்படுகின்றன.
வாடுவது இயற்கை தானே?
பப்பாளியோ கொய்யாவோ, காலிஃபிளவரோ அத்தனை தூரம் பயணிக்கும்போது ஒன்றோடு ஒன்று உராய்ந்து கொஞ்சம் பொலிவுக் குறைவும் மேல் தோல் சேதமும் அடையவே செய்யும். அதுதான் இயற்கை என்று புரிதலுடன் வாங்கத் தொடங்கினால், காய்-கனியை பறித்த பிறகு நடக்கும் வேதிச்சேர்ப்பு குறையும்.
தர்பூசணி எல்லா காலத்திலும் கிடைக்க வேண்டும், நாம் விரும்பும் செக்கச்செவேல் நிறத்தில், அதீத இனிப்புடன் இருக்க வேண்டுமென நினைத்தால், தவறுகள் நடந்து பெரு நஞ்சாகத்தான் நம் கைக்கு வந்து சேரும்.
கேரட் முளைக்கும்போது நிலத்தின் கீழே கல் அல்லது பாறை தட்டினால் அதன் தோற்றம் மாறும். அதனால் சில நேரம் அதன் நுனியில் இரண்டு ‘கால்' கள் இருக்கும். எல்லா உருளைக்கிழங்கும் ஒரே வடிவத்தில் இருக்க முடியுமா? நாட்டு வெண்டை பெரிதாகவே இருக்கும், முற்றியது என்று அவற்றைத் தள்ளுவது நம் அறியாமை. அதனால் கொஞ்சம் வாடிய குடைமிளகாய், தக்காளி, கீரை போன்றவை எல்லாம் ரசித்து சாப்பிட வேண்டியவையே! ஒரு பொருளை நுகரும்போது இந்த புரிதல் இருந்தால் பெரும் நன்மை கிடைக்கும்.
கட்டுரையாளர்,
இயற்கை வேளாண் நிபுணர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT