Published : 27 Jun 2015 01:01 PM
Last Updated : 27 Jun 2015 01:01 PM

ஆறாவது அறிவும் ஆறாவது பேரழிவும்

ஒரே ஒரு உயிரினத்தால்தான், புவியில் வாழும் மற்றெல்லா உயிரினங்களும் அழிவை எதிர்நோக்கியிருக்கின்றன: மனித இனம்! 6.5 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களால் ஆறாவது பெரும் பேரழிவு விரைவில் நடக்க இருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

புவியில் உயிர் வாழ்க்கைக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. புவியின் உயிரியல் பொக்கிஷங்கள் எவ்வளவு சீக்கிரம் துடைத்தெறியப்படும், ஆறாவது உயிர்ப் பேரழிவு (Sixth mass extinction) எப்போது ஏற்படும் என்பதையெல்லாம் மெக்ஸிகோவின் ‘தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழக’த்தைச் சேர்ந்த ஜெரார்தோ கபாயோஸும் அவரது சகாக்களும் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆய்வுக்கட்டுரையில் கணக்கிட்டிருக்கிறார்கள்.

உலகில் கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன. எளிதில் பார்க்க முடியாத உயிரினங்கள் பலவும், அருகிவரும் உயிரினங்களும்கூட அவற்றில் அடக்கம். மனிதர்களால் போக முடியாத, ஆபத்தான இடங்களிலெல்லாம் வசிக்கக்கூடியவை அவை. இவ்வளவு வகை உயிரினங்கள் இருந்தும் அவற்றையெல்லாம் கண்டறியும் / பட்டியலிடும் அளவுக்குத் திறமையான உயிரியலாளர்கள் உலகில் மிகவும் குறைவுதான்.

தீர்மானிப்பது கடினம்

ஓர் உயிரினம் முற்றிலும் அழிந்துவிட்டது என்பதைக் கொஞ்சமும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிப்பதும், அவ்வளவு சாதாரண காரியமல்ல. நவீன உயிரினங்களின் அழிவை ஒவ்வொன்றாக எண்ணுவது போலல்ல இது. நமது கோளின் நீண்டகால உயிரின அழிவுகளின் ‘எளிய அடிப்படை’ பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, இதற்கு மிகவும் அவசியம்.

இதைச் செய்ய வேண்டுமென்றால் எண்ணற்ற பாறை அடுக்குகளை அகழ்ந்து, அவற்றில் கோடிக்கணக்கான புதைபடிவங்களை ஆராய்ந்து, அதன் பிறகே ஒரு முடிவுக்கு வர முடியும். இதுவரை வெவ்வேறு பாறை அடுக்குகளில் நடத்தப்பட்ட வெவ்வேறு ஆய்வுகள் வெவ்வேறு முடிவுகளையே தந்திருக்கின்றன.

கபாயோஸும் அவருடைய சகாக்களும் இந்த சிக்கல்களைப் பற்றியெல்லாம் யோசிக்காமலில்லை. ஆகவே, இந்தச் சிக்கல்களையெல்லாம் கருத்தில் எடுத்துக்கொண்டு, அவர்கள் செய்திருக்கும் மதிப்பீடு புதிய அழிவின் தீவிரத்தை உணர்த்தும் விதத்தில் உள்ளது.

இதற்கே இப்படி

எவ்வளவு மிதமான முறையில் கணக்கீட்டை அவர்கள் முன்வைத்திருந்தாலும், அதுவே நம்மை அதிரச் செய்கிறது. 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததுதான் கடைசிப் பேரழிவு.

அதில்தான் டைனோசர் உள்ளிட்ட இனங்கள் புவியிலிருந்து அடியோடு துடைத்தெறியப்பட்டன. தற்போது ஆரம்பித்திருக்கும் பேரழிவு, அதைவிட மோசமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. இதைவிட அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் மூன்று மனித ஆயுள்களுக்குள் இது நடக்கும் என்று வேறு சொல்லப்படுகிறது.

உயிரினங்களின் அழிவுக்கு முக்கியமான காரணங்களை, அவர்களுடைய ஆய்வு முடிவு பட்டியலிடுகிறது. வாழிட இழப்பு, இரைக்காக வேட்டையாடுதல், சுற்றுச்சூழல் மாசுபாடு என்று பல காரணங்கள்.

ஆனால், அவர்களின் பட்டியலில் புவிவெப்பமாதல், கடல் அமிலமாதல் போன்றவை இடம்பெறவில்லை. இவற்றையும் சேர்த்துக்கொண்டால் பெரும்பாலான உயிரினங்கள் அவற்றின் வாழிடங்களில் துடைத்தெறியப்படும், அழிவின் தீவிரம் மேலும் அதிகமாகும்.

யார் காரணம்?

கபாயோஸ் தலைமையிலான ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களுள் ஒருவரான ஆண்டனி பர்னோஸ்கி இடம்பெற்ற மற்றொரு ஆய்வின் முடிவும் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

இதுவரை நடந்த அழிவுகளுக்கு எரிமலை வெடிப்புகளின் பிரம்மாண்டமான புகைச் சீற்றம், குறுங்கோள்கள் புவியில் மோதுதல், பருவநிலையில் ஏற்படும் விரைவான மாற்றங்கள் போன்ற இயற்கை அம்சங்கள்தான் காரணமாக இருந்தன. தற்போது ஏற்படவிருக்கும் அழிவுக்குக் காரணம் என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டும் திசை எது தெரியுமா?

ஒரே ஒரு உயிரினத்தால்தான், மற்றெல்லா உயிரினங்களும் அழிவை எதிர்நோக்கியிருக்கின்றன: மனித இனம். இதுபோல் இதற்கு முன்னால் ஒற்றை உயிரினத்தால் பேரழிவு கிட்டத்தட்ட ஏற்பட்டதே இல்லை. (இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு இருக்கக் கூடும்.

சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்சிஜனை வெளியிடக்கூடிய நுண்ணுயிரி ஒன்று, பல்கிப் பெருகியதால் அப்போது வாழ்ந்த மற்ற நுண்ணுயிரிகள் புவியின் உயிர் வாழ்க்கையின் விளிம்புக்குத் துரத்தப்பட்டன. அந்த நுண்ணுயிரிகளுக்கு ஆக்சிஜன் என்பது விஷம்.)

மனிதர்களே காரணம்

நிலத்தில் வாழக்கூடிய இந்த இனம், அதாவது மனித இனம் கடலிலும்கூட இரைகொல்லிகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பெறுகிறது. திமிங்கிலங்களும் மீன்களும் அழிந்துகொண்டிருப்பதற்குக் காரணமே, மனித இனம்தானே.

நமது ஒற்றை இனம்தான் புவியின் மொத்த உற்பத்தியில் 25-லிருந்து 40 சதவீதம்வரையிலான உற்பத்திக்குக் காரணமாகிறது. பரந்து விரிந்த நிலப்பரப்புகளில் விவசாயம், அதீதமான உரங்கள், அதன் மூலம் கோடிக்கணக்கான டன்கள் நைட்ரஜனை காற்றிலிருந்து நிலைநிறுத்துதல், மேலும் நிலத்திலிருந்து கோடிக்கணக்கான டன் பாஸ்பரஸை வெட்டியெடுத்தல்… இப்படி நிகழும் உற்பத்தி இது.

இப்படி அதீதமாக ஊட்டம் பெற்ற பயிர்கள், பண்ணையில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு உணவாக அளிக்கப்படுகின்றன. அந்த விலங்குகளை நாமும் உண்கிறோம். இப்படிப்பட்ட பெரும் அளவிலான செயல்முறையே, தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் பேரழிவுக்குப் பெரும் காரணம்.

தலைகீழ் திருப்பம்

மனிடோபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வச்லவ் ஸ்மில் என்ற அறிவியலாளர் நிலத்தில் வாழும் முதுகெலும்பிகளின் ஒட்டுமொத்த நிறையைக் கணக்கிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த நிறையில் மனித இனம் மட்டும் மூன்றில் ஒரு பங்கு ஆக்கிரமித்திருக்கிறது. மீதமுள்ள இரண்டு பங்கையும்கூட மனிதர்கள் உணவுக்காக வளர்க்கும் ஆடு, மாடுகள், பன்றிகள் முதலானவையே ஆக்கிரமித்திருக்கின்றன.

மீதமுள்ள உயிரினங்களான யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள், புலிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் நிறையைக் கூட்டினால் வெறும் 5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும். அந்த உயிரினங்களெல்லாம் மனிதர்களால், எப்படி விளிம்பு நிலைக்குத் துரத்தப்பட்டிருக்கின்றன என்பதற்கான எடுத்துக்காட்டுதான் இது.

மனிதர்கள், உயிர் வாழ்க்கையை வேறு திசையில் செலுத்துகிறார்கள். தங்களுக்குப் பயன் தரும் உயிரினங்கள் மீது பரிணாம ரீதியில் செல்வாக்கு செலுத்துகிறார்கள். அவற்றை இனப்பெருக்கம் செய்யவைத்தும், மரபணு வடிவமைப்பு செய்தும் தாங்கள் நினைத்த விதத்தில் உயிர் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

ஒளிச்சேர்க்கையின் மூலம் நாம் பெறும் ஆற்றல், மனித இனத்துக்குப் போதுமானதாக இல்லை. ஆகவே, நிலத்தடியில் ஹைட்ரோகார்பன் (பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்றவை) வடிவில் புதைந்திருக்கும் ஒளிச்சேர்க்கை ஆற்றலைத் தோண்டி எடுக்கிறோம். அவற்றின் மூலம், நமது இயந்திரங்களுக்கு ஆற்றல் அளிக்கிறோம்.

கட்டுப்பாட்டில் இல்லை

கார்கள், விமானங்கள், கணினிகள் போன்ற இந்த இயந்திரங்கள் மனித மூளைத்திறன் ஆகியவற்றுக்கு ‘தொழில்நுட்பக் கோளம்’ என்று புவியியலாளர் பீட்டர் ஹாஃப் பெயரிட்டிருக்கிறார். இந்த தொழில்நுட்பக் கோளத்தை உயிர்க் கோளத்தின், பக்க விளைவாகவே அவர் கருதுகிறார்.

இந்தத் தொழில்நுட்பக் கோளம் செயல்படுவதற்கு மனிதர்கள்தான் காரணம் என்றாலும், உண்மையில் அவர்களுடைய கட்டுப்பாட்டில் அது இல்லை. பரிணாம வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, அது மின்னல் வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது.

முந்தைய 5 பேரழிவுகள்

புவியின் வரலாற்றில் இதற்கு முன்பும் பல காலகட்டங்களில் பெரும் எண்ணிக் கையில் உயிரினங்கள் அழிந்திருக்கின்றன. கீழ்க்கண்ட பேரழிவுகளில் புவியின் பாதிக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்திருக்கின்றன.

இறுதி ஆர்டோவிஷன் காலம், 44.3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு:

கடல்களில் பனிப்பாளங்கள் அதிவிரைவில் உருவான காலகட்டம் இது. கடல் மட்டம் 100 மீட்டருக்கும் அதிகமாக இந்தக் காலத்தில் அதிகரித்து பெரும்பாலான உயிர்ச்சூழல்களை அழிவுக்குள்ளாக்கியது. இது நடந்து 10 லட்சம் ஆண்டுகளுக்குள் உறைபனி உருக ஆரம்பித்து, கடல் மட்டம் மறுபடியும் உயர ஆரம்பித்ததும் கடல்களில் ஆக்சிஜன் குறைந்துபோனதால் போனதால் மறுபடியும் பல உயிரினங்கள் அழிந்துபோயின.

பிற்பகுதி டிவோனியன் காலகட்டம், சுமார் 36 கோடி ஆண்டுகளுக்கு முன்பு:

ஆழம் குறைந்த கடல்களின் உயிர்ச் சூழலில் பேரழிவை நிகழ்த்திய நீண்ட காலகட்டம் இது. பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட அழிவு இது என்று கருதப்படுகிறது.

பெர்மியன்- டிரியாஸ்ஸிக் பெருந்திரள் அழிவு, சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு:

பேரழிவுகளிலேயே உச்சம் இதுதான், 95% உயிரினங்கள் அழிந்துபோயின. சைபீரியாவில் ஏற்பட்ட பேரளவிலான எரிமலைச் சீற்றங்களால் நிகழ்ந்த பேரழிவு இது என்று கருதப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோசமான புவிவெப்பமாதல் காரணமாகவும் அழிவு அதிகமானது.

டிரியாஸிக் ஜுராஸிக் பேரழிவு, சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு:

மற்றுமொரு எரிமலைச் சீற்றத் தொடர் நிகழ்வால் ஏற்பட்ட பேரழிவு.

கிரெடாசியஸ்-டெர்ஷியரி பேரழிவு, 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு:

டைனோசர்களைத் துடைத்தெறிந்தது இந்தப் பேரழிவுதான்; மெக்ஸிகோவின் மீது ஒரு குறுங்கோள் தாக்கியதால் பேரழிவு ஏற்பட்டாலும், இந்தியாவில் நிகழ்ந்த எரிமலைச் சீற்றங்களாலும் மிகவும் மோசமான நிலையில்தான் அப்போதைய சூழல் இருந்தது.

புவியின் உயிர்வெளியில் ஏற்படும் மாற்றங்களில் பெருந்திரள் உயிரின அழிவும் அடங்கும். அந்த அழிவைத்தான் ஜெரார்தோ கபாயோஸும் அவரது சகாக்களும் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

தொழில்நுட்பக் கோளம் என்ற இந்தப் புதிய இயங்குமுறை வளர்ச்சி பெற்று, பெருந்திரள் அழிவைத் தடுக்கும் விதத்தில் உருப்பெறுமா என்ற கேள்வி தற்போது எழுகிறது. உண்மையில், இந்தத் தொழில்நுட்பக் கோளம் என்பது உயிர்க் கோளத்தின் கூட்டாளியாக இல்லாமல், ஒட்டுண்ணியாக இருப்பதுதான் நிதர்சன நிலை. மறுசுழற்சிக்கும் இந்தத் தொழில்நுட்பக் கோளத்துக்கும் இடையிலான தொலைவு அதிகம் என்பதையே, இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.

பெருந்திரள் அழிவைத் தவிர்ப்பதென்பது இப்போதும் சாத்தியமாகக் கூடும், ஆனால் அதற்குப் போதிய அவகாசமில்லை என்பதுதான் உண்மை.

ஜான் ஜலஸ்விட்ச், லீஸெஸ்டெர் பல்கலைக்கழகத்தில் புதைபடிவ உயிரியல் பேராசிரியராக இருக்கிறார்.

© தி கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x