Published : 13 Jun 2015 03:07 PM
Last Updated : 13 Jun 2015 03:07 PM
“என் பொண்ணு இவாஞ்சலினுக்கு வயசு 26. ஆனா பார்த்தா பெரிய பொண்ணாட்டம் தெரியாது. அவளுக்கு உடல் வளர்ச்சியும் இல்ல. மன வளர்ச்சியும் இல்ல. அவ இன்னும் வயசுக்கு வரல" - ஜூலி போன்ற எந்த ஒரு தாயும் இந்த வார்த்தைகளை உணர்ச்சி கலக்காமல் சொல்ல முடியாது.
"என் பேரு லட்சுமி (38). கல்யாணமாகி 16 வருசம் ஆச்சு. ஆனா, இன்னும் குழந்தைங்க இல்ல. இரண்டு தடவை கரு கலைஞ்சுடுச்சு. என்கிட்ட எந்தப் பிரச்சினையும் இல்ல. என் கணவருக்குத்தான் போதிய விந்தணுக்கள் இல்லைன்னு சொல்றாங்க" - எதிர்காலத்தில் தனக்கு யார் இருப்பார்கள் என்ற கேள்வியைத் தவிர்த்துவிட்டு லட்சுமி யோசிக்க முடியாது.
"என் பேரு உமா மகேஸ்வரி (22). காலேஜ்ல படிக்கிறேன். வாழ்க்கையில நல்ல ஸ்டேஜுக்கு வரணும்னு நினைக்கிறேன். ஆனா, நான் இன்னும் ஏஜ் அட்டெய்ன் பண்ணலை" - காரணம் புரியாமல் குழம்புகிறார் உமா மகேஸ்வரி.
இவையெல்லாம் ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'தான். கொடைக்கானலில் இறங்கியவுடன் நாலா திசைகளிலும் இருந்து, இது போன்ற பிரச்சினைகளைப் பேசும் குரல்கள் நம்மைச் சூழ்கின்றன. இவை அனைத்துக்கும் ஒரே காரணம் பாதரசம்!
தெர்மாமீட்டர் நிறுவனம்
1983-ம் ஆண்டு கொடைக்கானலில் ‘பாண்ட்ஸ் இந்தியா' (பின்னாளில் அது ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்துடன் இணைந்தது) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட தெர்மாமீட்டர் உற்பத்தி நிறுவனத்தில், அதிக அளவு பாதரசம் பயன்படுத்தப்பட்டது. முறையான பாதுகாப்புடன் அது கையாளப்படாததால், கடந்த 30 ஆண்டுகளாக அங்கிருக்கும் மக்களை உருக்குலைத்துவருகிறது.
இப்படி வெளியான பாதரசம், அங்குள்ள மக்களுக்கு இரண்டு வகைகளில் தீங்கிழைத்துவருகிறது. மேற்கண்ட நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர், அவர்களுடைய குடும்பத்தினர் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டனர்.
இரு முனை கத்தி
போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனம் தொடங்கப்பட்டபோது, அங்கு பணியாற்றுவது பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்பட்டது. அங்கே பணியில் சேர்ந்த பிறகுதான், இளைஞர்கள் பலருக்குத் திருமணமும் நடைபெற்றது.
"அதேபோலத்தான் கொடைக்கானலிலும். பள்ளிப் படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ என்று படித்து வேலையில்லாமல் இருந்த இளைஞர்கள் பலருக்குப் பாதரச நிறுவனம் வேலை கொடுத்தது. அதன் பிறகு பல இளைஞர்களுக்குத் திருமணம் நடைபெற்றது.
ஆனால், பாதரசத்தைக் கையாளுவதில் உள்ள ஆபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துச் சம்பந்தப்பட்ட நிறுவனம், எங்களுக்கு எப்போதும் தெரிவித்ததில்லை. அதனால் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையால் பாதரசத்தைக் கையாளுவது உட்படப் பல ஆபத்தான பணிகளைச் செய்தோம். அது எங்களையும் பாதித்து, எங்கள் குடும்பத்தினரையும் பாதித்துள்ளது" என்கிறார் ‘பாண்ட்ஸ் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் பாதரச முன்னாள் பணியாளர்கள் நலச் சங்க'த்தின் தலைவர் மகேந்திர பாபு.
உடல் பாதிப்பு
சாதாரணமாக ரத்தத்தில் பாதரசம் கலந்தால், சுமார் 60 நாட்களுக்குப் பிறகு போய்விடும். ஆனால், அது நரம்பில் ஒட்டியிருக்கும். அதுதான் சிறுநீரகச் செயலிழப்பு, விந்தணு குறைவு, நுரையீரல் பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு உள்ளிட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சாதாரணமாக ரத்தத்தில் பாதரசம் கலந்தால், சுமார் 60 நாட்களுக்குப் பிறகு போய்விடும். ஆனால், அது நரம்பில் ஒட்டியிருக்கும். அதுதான் சிறுநீரகச் செயலிழப்பு, விந்தணு குறைவு, நுரையீரல் பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு உள்ளிட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதேபோலப் பணியாளர்களின் உடையை, அவர்களுடைய குடும்பப் பெண்கள் துவைக்கும்போது, அவற்றில் படிந்துள்ள பாதரசக் கூறுகள் அவர்களுடைய உடலில் சேர்ந்து பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
தழைக்குமா தலைமுறை?
இந்தக் காரணங்களால் கொடைக்கானலில் இன்றைக்கு 25 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தக் கிராமங்களில் உள்ள முன்னாள் பாதரசப் பணியாளர்களின் குடும்பங்களில் 120 பெண்களுக்கு மகப்பேறு தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. சுமார் 60 குடும்பங்கள் குழந்தை இல்லாமல் இருக்கின்றன.
கணவருக்குப் பாதரசத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக, பெண்கள் குடும்பத்தைப் பிரிந்துபோன நிலையும் இங்கே ஏராளம். பெற்றோரை இழந்து அநாதரவாக விடப்பட்ட குழந்தைகள் மற்றொரு பக்கம். பாதரச நிறுவனத்துக்குத் தங்கள் பிள்ளைகளைப் பலிகொடுத்து, தற்போது தனிமரமாய் நிற்கும் மனிதர்கள் இன்னொரு பரிதாபம்.
இப்படி ஒரு தலைமுறை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்க, அடுத்த தலைமுறை அங்கே தழைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
பொறுப்பின்மை
"இந்தப் பிரச்சினைகளை எல்லாம் எடுத்துக் கூறி மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், ‘இங்கே எந்தப் பிரச்சினையும் இல்லை' என்று அந்த நிறுவனம் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து வருகிறது.
இங்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை நிரூபிக்க நோய் காரணவியல் (எபிடெமாலஜி) ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், யாருடைய காதுகளில் விழ வேண்டுமோ அவர்களுடைய காதுகளில் அது விழவில்லை... நீதிமன்றம் உட்பட!" என்கிறார் டெல்லியைச் சேர்ந்த சட்ட ஆய்வாளர் உஷா ராமநாதன்.
உடல் வெப்பத்தை அறிந்துகொள்ளப் பாதரசத் தெர்மாமீட்டரை உற்பத்தி செய்த நிறுவனம் கொடைக்கானலில் உருவாக்கியுள்ள வெப்பம், இன்னும் கொதிநிலையிலேயே இருக்கிறது என்பதுதான் இன்றைய நிதர்சனம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT