Published : 27 Jun 2015 12:49 PM
Last Updated : 27 Jun 2015 12:49 PM
“ஐயாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதைத் திருப்பிக் கட்டாதவன் யாரும் இதுவரை தற்கொலை பண்ணிக்கிட்டதா தெரியலை. ஆனா, ஐயாயிரம் ரூபாய் கடனுக்கு மருந்து குடிச்சு செத்த எத்தனையோ விவசாயிங்க நாட்ல இருக்காங்க. இந்த நாட்டிலேயே மானம் மரியாதையுள்ள ரோஷக்காரன்னு ஒருத்தன் இருக்கான்னா, அவன் இந்த நாட்டோட விவசாயிதான்"
- திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேசிய நெல் திருவிழாவில் ஒரு விவசாயியின் பேச்சு.
இந்தியாவின் மிக முக்கியமான பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையமாக இன்றைக்கு உருவெடுத்திருக்கும் கிரியேட் இயற்கை வேளாண் பயிற்சி, ஆராய்ச்சி மையம் ஆண்டுதோறும் நடத்தி வரும் நெல் திருவிழாவில் இந்த ஆண்டு நானும் பங்கேற்றேன்.
இது அரசு நிதி சார்ந்து இயங்கும் அமைப்பல்ல. நெல் ஜெயராமன் என்ற விவசாயியால் தொடங்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் இணைந்து நடத்திவரும் அமைப்பு இது. இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விதத்தைக் கண்டு வியந்து போனேன்.
நிபந்தனைப் பரிசு
இருநூறு ரூபாய் கொடுத்து பதிவு செய்துகொண்டால், மாநாட்டில் கிடைக்கும் மற்ற விஷயங்களுடன் இரண்டு கிலோ பாரம்பரிய நெல்லும் பரிசாகக் கிடைக்கும். நினைவு தெரியாத நாட்களாக நம் மண்ணில் பயிரிடப்பட்டு வரும் பாரம்பரிய நெல் விதைகளில் ஏதாவது ஒன்றை நாமே தேர்ந்தெடுத்து பெற்றுக்கொள்ளலாம்.
அதேநேரம் இது நிபந்தனையுடன் கூடிய பரிசு. இரண்டு கிலோ விதைநெல்லை வாங்கிச் செல்பவர்கள், அதை தங்கள் நிலத்தில் விதைத்து விதைநெல் பெருக்கி, அடுத்த ஆண்டு இங்கே திரும்ப வந்து நாலு கிலோ விதைநெல்லாகத் திரும்ப வழங்க வேண்டும். நம்ம ஊர் மக்களா திரும்பவந்து கொடுக்கப் போகிறார்கள் என்று கொஞ்சம் அலட்சியமாக நினைத்தேன்.
கடமை உணர்வு
அந்தப் பக்கம் பார்த்தால் பைகள், மூட்டைகளுடன் நீண்ட வரிசையில் விவசாயிகள் காத்துக்கொண்டிருந்தனர். கடந்த ஆண்டு இப்படி விதை நெல் வாங்கிச் சென்று, அதைப் பெருக்கி இந்த ஆண்டு திரும்ப அளிக்க நின்றவர்களின் வரிசைதான் அது.
கடந்த ஆண்டு விதை நெல் பெற்றுச் சென்ற மூவாயிரம் விவசாயிகளில் 65 சதவீதம் பேர், அதை திரும்ப வழங்கக் காத்திருந்தனர். வாக்களித்தபடி நாலு மூட்டை மட்டுமல்ல, மூட்டை மூட்டையாகக் கொண்டுவந்து மையத்துக்கு இலவசமாகக் கொடுக்கின்றனர்.
தொலைந்து போன நமது பாரம்பரிய நெல் வகைகளை, எந்த நிறுவனத்தின் உதவியும் இன்றி விவசாயிகளே மீட்டெடுத்து, அவற்றை பல மடங்கு பெருக்கும் இந்த ஏற்பாட்டில், அந்த எளிய மனிதர்களின் கடமை உணர்வை நினைத்து நெகிழ்ந்து போனேன்.
மீண்டும் வருவேன்
அது மட்டுமில்லை கணிசமான அளவில் கலந்துகொண்ட இயற்கை விவசாயம் செய்யும் பெண்கள், விவசாயத்துக்கு பூச்சிகள் செய்துவரும் நன்மைகள், இதுவரை சுவைக்காத பாரம்பரிய உணவு வகைகள், ஒரு ரூபாய்க்குக் கிடைத்த சுவையான சுக்குமல்லி காப்பி என அந்த மாநாடு முழுவதும் ஆச்சரியங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன.
அடுத்த ஆண்டும் மாநாட்டுக்கு வர வேண்டும். எப்படி வராமல் இருக்க முடியும்? இரண்டு கிலோ மாப்பிள்ளை சம்பா விதைநெல்லை கை நீட்டி பரிசாக வாங்கியிருக்கிறேனே! அதை விதைத்துப் பெருக்கி பல மடங்காக மையத்துக்குத் திரும்பத் தர வேண்டாமா? நானும் ஒரு விவசாயியின் மகன்தானே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT