Published : 16 May 2015 12:05 PM
Last Updated : 16 May 2015 12:05 PM
வழிபாட்டுத் தலமாக மட்டுமில்லாமல், இயற்கைப் புகலிடமாக இருந்த கிராமக் கோயில் காடுகள் அரிய வகைத் தாவரங்கள், மருத்துவத் தாவரங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்துவந்தன. ஆனால், சுற்றுச்சூழல் சீரழிவு மோசமடைந்துவரும் இன்றைய சூழ்நிலையில் கோயில் காடுகளின் எதிர்காலம் நிச்சயமற்று இருக்கிறது.
இயற்கைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நம் முன்னோர் இயற்கையைப் போற்றி வழிபட்டு வந்தனர். பின்னர் தாம் வாழ்ந்துவந்த பகுதிகளில் உள்ள காட்டின் குறிப்பிட்ட பரப்பளவைத் தங்கள் குலதெய்வங்கள் வாழ்வதற்கான இடமாகக் கருதி, மற்ற இடங்களை மட்டும் தங்களுடைய தேவைகளுக்குப் பயன்படுத்திவந்தனர். அவைதான் கோயில் காடுகள்.
பெரும்பாலான கோயில் காடுகள் கிராமக் காவல் தெய்வம், குலதெய்வ வழிபாட்டுத் தலமாக இருக்கின்றன. இந்தக் காட்டுப் பகுதியில் கிடைக்கும் காடுபடு பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருக்கும்.
இந்தியா முழுவதும் கோயில் காடுகள் உள்ளன. தோப்புகளை அடியொட்டிய இந்தக் காடுகளில் அரிய வகை தாவரங்கள் பல எஞ்சி உள்ளன. இயற்கையான காடுகளைப் போலவே, இந்தக் காடுகளிலும் பல்லுயிர் வளம் செழித்திருக்கிறது.
கோயில் காடு வகைகள்
பூந்தோட்டங்கள், பழமரங்களைக் கொண்ட காடுகள்,
பூ, பழங்களைத் தரும் செடிகளைக் கொண்ட தோட்டங்கள்,
ஒரே வகையான தாவரங்கள் உள்ள பெரும் நிலப்பரப்பு,
பெரிய காட்டுப் பகுதி என ஐந்து வகையான கோயில் காடுகள் உள்ளன. எளிய கோயில்கள் பெருங்கோயில்களாக மாறியபோது, இந்தக் காட்டுப் பகுதிகளில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டன.
இன்றைக்கு மரம் வெட்டப்படுதல், மேய்ச்சலுக்குப் பயன்படுத்துதல், ஆறுகளில் நீர்வரத்து குறைதல் போன்ற காரணங்களால் கோயில் காடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
கோயில் காடுகள் பற்றி மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முத்துச்செழியன் பல விஷயங்களைக் கவனப்படுத்துகிறார்:
கோயில் காடுகளைக் குறித்துக் காட்கில், வாட ஆகிய இருவரும் விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி கோயில் காடுகள் குறித்து 1975-1976-ல் தகவல்களை வெளியிட்டனர். அந்த ஆராய்ச்சியின்படி மேற்குத் தொடர்ச்சி மலையில் 750-க்கும் மேற்பட்ட பூக்கும் தாவர இனங்களும், கேரளக் காடுகளில் 800 வகை பூக்கும் தாவர இனங்களும் உள்ளன. 40% மருத்துவக் குணம் கொண்ட தாவரங்களில், 150 வகைகள் அழியும் நிலையில் உள்ளன. தமிழகத்தில் கோயில் சார்ந்த நந்தவனம், தோப்புகள், காடுகள், பூந்தோட்டங்களில் பல அரிய வகைத் தாவரங்கள், மருத்துவப் பலன் தரும் தாவரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தமிழகக் கோயில் காடுகள்
சென்னையைச் சேர்ந்த சி.பி.ஆர். அறக்கட்டளை 1994-ம் ஆண்டுவரை 499 கோயில் காடுகளை வரிசைப்படுத்தியுள்ளது. அந்நிறுவனத்தின் தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் தேனி மாவட்டத்தில் 33, கொல்லிமலை பகுதியில் 240, சிவகாசியில் 10, சங்கரன்கோவிலில் 10, தென்காசியில் 8 கோயில் காடுகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான கோயில் காடுகள், கோயிலை மையமாகக் கொண்டவை. இந்தக் காடுகளில் பெரும்பாலானவை அய்யனார், அம்மன், முருகன் போன்ற தெய்வங்களுக்கானவை. சிவகங்கை விஜயகருப்பன் கோயில், புதுவயல் காளியம்மன் கோயில், மதுரை அழகர்கோயில், நாகர்கோயில், பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயில், ஆண்டிப்பட்டி வேலப்பர் கோயில் ஆகியவை கோயில் காடுகளே.
இன்றைய நிலை
கோயில் காடுகளின் பரப்பு குறைந்துவருவதாகச் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடர்ந்த காடுகளாக இருந்த பல்வேறு பகுதிகள் சுருங்கியும், பல்வேறு காடுகள் இருந்த இடம் தெரியாமலும் போய்விட்டன. நாடு விடுதலை பெற்ற பின்னர் மேற்கு தொடர்ச்சி மலையில் பல பகுதிகள் தேயிலை, காபித் தோட்டங்களாக மாற்றப்பட்டுவிட்டன. நாட்டின் வடகிழக்கு மலைப் பகுதிகளில் 1970-ம் ஆண்டுகளில் 274 கோயில் காடுகள் இருந்தன. ஆனால், 1998-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 79 ஆகக் குறைந்துவிட்டது.
மீட்புத் திட்டம்
தொடர்ந்து இயற்கையைச் சுரண்டினால் மழை, காற்று, காடுபடு பொருட்கள் போன்ற இயற்கைச் சேவைகளின் தரம் வெகுவாகக் குறைவதுடன், பொருளாதாரப் பயனும் இல்லாமல் போய்விடும். எனவே, பாதிக்கப்பட்ட கோயில் காடுகளை முறையாக மேலாண்மை செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், அழிவையும் குறைக்கலாம். அது மட்டுமல்லாமல் நவீனத் தொழில்நுட்பத்துடன் பாரம்பரிய அறிவுத்திறனும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே கோயில் காடுகளைக் காப்பாற்ற முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT