Last Updated : 16 May, 2015 12:12 PM

 

Published : 16 May 2015 12:12 PM
Last Updated : 16 May 2015 12:12 PM

வெற்றிலை சாகுபடி தரும் மாதம் ரூ. 70 ஆயிரம்

சுப நிகழ்ச்சிகளிலும் கோவில் பூஜைகளிலும் கமகமக்கும் வெற்றிலைக்கு முக்கியப் பங்கு உண்டு. முதியோர்கள் பலரைப் போலவே, கிராமத்து இளைஞர்களிடமும் வெற்றிலை போடும் பழக்கம் இருந்துவருகிறது. சித்த வைத்தியத்திலும் வெற்றிலை பயன்படுத்தப்பட்டுவருகிறது. இப்படிப் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலை, தேனி மாவட்டத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.

சப்பை தண்ணீரில்

வெற்றிலையில் இரண்டு வகை உண்டு. முதல் வகையான திருச்சி கொடி வெற்றிலை வெள்ளை நிறத்தில் இருக்கும், இரண்டாவது வகையான நாட்டு வெற்றிலை, கறுப்பு நிறத்தில் இருப்பதால் கறுப்பு வெற்றிலை என்று அழைக்கப்படுகிறது.

வெள்ளை வெற்றிலை சாகுபடிக்கு நல்ல தண்ணீர் மட்டுமே தேவைப்படும். சப்பை தண்ணீரில் விளைச்சல் இருக்காது. ஆனால் நாட்டு வெற்றிலைக்குச் சப்பை தண்ணீரே போதும் என்கிறார் சின்னமனூர் வெற்றிலை விவசாயி பாப்புராஜ். கடந்த 25ஆண்டுகளுக்கு மேலாக நாட்டு வெற்றிலை சாகுபடி செய்துவரும் இவர், வெற்றிலை சாகுபடிக்குக் கரம்பை மண் ஏற்றது என்கிறார். வெற்றிலை சாகுபடி நுட்பங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டது:

அகத்தி மரத்துடன்

முதலில் அகத்தி விதையை விதைத்துச் செடி வளர்க்க வேண்டும். 60 நாட்கள் கழித்துச் செடி சுமார் அரை அடி உயரம்வரை வளர்ந்த பின், வெற்றிலை கொடி பதியம் போட்டு ஒவ்வொரு அகத்திச் செடிக்கும் ஒரு அடி இடைவெளியில் இயற்கை உரம் இட்டு நடவு செய்ய வேண்டும். கடுமையான வெயில் அடித்தால் வெற்றிலைக் கொடி கருகிவிடும். காற்று பலமாக வீசினாலும் கொடி சேதமடைந்துவிடும். அதனால் கொடி நன்கு வளர்ந்து அகத்தி மரத்தின் மீது படரும்வரை, வெற்றிலை கொடிக்காலைத் (தோட்டம்) சுற்றிச் சூரிய ஒளி மற்றும் காற்று புகாதவாறு தென்னங்கீற்றால் வேலி அமைக்க வேண்டும்.

ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 120 நாட்கள் கழித்துக் கிள்ளத் (பறிக்க) தொடங்கிவிடலாம். மூன்று ஆண்டுகள்வரை 30 நாட்களுக்கு ஒருமுறை பறித்துக்கொண்டே இருக்கலாம். நோய் தாக்காமல் இருக்க, ஒவ்வொரு முறை பறித்த பின் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டும்.

ரூ. 70 ஆயிரம்

அகத்தி மரம் வளர்ந்த பின் அகத்திக் கீரையை வெட்டி வெற்றிலை கொடிக்கு உரமாக இடலாம். அது மண்ணில் மக்கி இயற்கை உரமாக மாறிவிடும். மேலும் ஊடுபயிராக வாழை, பச்சை மிளகாய் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்ய ரூ. 2.50 லட்சம் செலவு ஆகிறது. நடவு செய்த பின்னர் 30 நாட்களுக்கு ஒருமுறை ஆயிரத்து 500 கிலோவரை வெற்றிலை பறிக்க முடியும்.

சராசரியாக ஒரு கிலோ நாட்டு வெற்றிலை ரூ.60-க்கும், வெள்ளை வெற்றிலை ரூ.100-க்கும் விற்பனையாகிறது. முகூர்த்தக் காலங்களில் இன்னும் கூடுதலாக விலை கிடைக்கும். செலவு செய்தது போக மாதத்துக்கு ரூ. 70 ஆயிரம்வரை லாபம் கிடைக்கும். பல மாவட்டங்களில் சப்பை தண்ணீர் மட்டுமே கிடைப்பதால், நாட்டு வெற்றிலை சாகுபடி சிறந்தது.

- விவசாயி பாப்புராஜ்
தொடர்புக்கு: 94865 03491

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x