Last Updated : 30 May, 2015 02:05 PM

 

Published : 30 May 2015 02:05 PM
Last Updated : 30 May 2015 02:05 PM

நமது வாரிசுகளுக்கு விட்டுச் செல்லும் பொக்கிஷம்

நாம் உயிர் வாழக் காரணமாக இருக்கும் உணவுப் பயிர்களைக், காப்பாற்ற வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம் என்னும் கருத்தை உரக்கக் கூறியது சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற பாரம்பரிய விதைக் கண்காட்சி. நடிகை ரோகிணி, ‘பொல்லாதவன்' கிஷோர் உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள், கலைஞர்கள், இயற்கை ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மான்சாண்டோ வேண்டாம்

மரபீனி மாற்று விதைகளைப் பரவலாக்கிவரும் மான்சாண்டோ நிறுவனத்துக்கு எதிராகப் பாரம்பரிய விதைகளைப் பிரபலப்படுத்த உலகில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மே 23-ம் தேதி நடந்தன. இதே நாளில் சென்னை தி. நகர் தக்கர் பாபா வித்யாலயாவில், மான்சாண்டோவுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை, பாரம்பரிய விதைகளைக் காப்பாற்றிவரும் எண்ணற்ற விவசாயிகள் ஒருங்கிணைந்து விதைக் கண்காட்சியை நடத்தினர். பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பு, ஆர்கானிக்ஃபார்மர்ஸ் மார்க்கெட், ஆஷா உள்ளிட்ட அமைப்புகள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

மரபணு மாற்று விதைகள் மண் வளத்தைக் கெடுப்பதுடன், மனித உடலை எப்படிப் பாதிக்கும் என்பதை நிகழ்ச்சியின் இடையிடையே மேடையில் பேசிய அறிவரசன், கோபி போன்றவர்கள் விளக்கினர். அதேநேரம் மான்சாண்டோவுக்கான எதிர்ப்பைப் பதிவுசெய்வதுடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்துவிடவில்லை.

அதற்கு மாற்றாக நமது மண்ணின் மூலிகைகள், பாரம்பரிய விதைகள், சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், பானங்கள், இயற்கையோடு இயைந்த வீட்டு உபயோகப் பொருட்கள் எனக் காணுமிடமெல்லாம் இயற்கையைத் தூக்கி பிடித்தது இந்தக் கண்காட்சி.

விவசாயத்தை விற்காதே

“நம் நாட்டின் உயிர்நாடியான விவசாயம், விவசாயிகளிடமிருந்து பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குப் போகாமல் தடுக்க வேண்டும். விவசாயத்துக்குத் தேவைப்படும் விதைகள் விவசாயிகளிடம் இருக்க வேண்டுமே தவிர, நிறுவனங்களின் கைப்பாவையாக ஆகிவிடக் கூடாது. விதை விற்பனையின் மூலமாகவே ஏறக்குறைய 49 ஆயிரம் கோடி ரூபாயை மான்சாண்டோ நிறுவனம் ஈட்டியுள்ளது.

ஒரு கிலோ இயற்கையான பருத்தி விதையைச் சில நூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட காலத்திலேயே, மரபீனி பருத்தி விதை ஒரு கிலோ ரூ. 2750-க்கு விற்கப்பட்டது. இதிலிருந்து மான்சாண்டோ போன்ற நிறுவனங்களால் விவசாயம் அடையும் பாதிப்பை உணர்ந்துகொள்ளலாம். சாமானிய மக்களும் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அரசுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்பதுதான் இந்தக் கண்காட்சியின் நோக்கம்” என்று நிகழ்ச்சியின் மையக் கருத்தை முன்வைத்தார் உணவுப் பாதுகாப்புக்கான கூட்டமைப்பின் நிறுவனரான அனந்து.

விதைகள், விவசாயிகள்

மதுரை, முசிறி, திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம் போன்ற பகுதிகளில் இருந்தும், கேரளம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் அரங்குகளை அமைத்திருந்தனர்.

கர்நாடகாவின் பெல்காம் பகுதியில் இயற்கை விவசாயம் செய்துவரும் சங்கர், ஏறக்குறைய 80 வகை பாரம்பரிய விதை வகைகளைக் காப்பாற்றிவருகிறார். அவருக்கு 14 வயதானபோது, விவசாயியான அவருடைய தந்தை, கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். ஆனால், அதற்காகத் துவண்டு விடாமல் தன்னுடைய உழைப்பு, இயற்கை விவசாயம் மூலம் இழந்ததை மீட்டெடுத்திருக்கிறார் சங்கர். இப்படி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொரு விவசாயியின் பின்னாலும் ஒரு கதை இருந்தது.

திருச்சி, முசிறி பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வரும் யோகானந்த், தரிசாகிப் போன நிலத்தையும் இயற்கை விவசாயம் மூலமாக எப்படி மீட்டெடுக்கலாம் என்பதையும், இயற்கை விவசாயம் மூலமாக எப்படி அதிக விளைச்சலைப் பெறலாம் என்பதையும் விளக்கினார். தன்னைப் போன்ற விவசாய ஆர்வலர் களுக்கு அவருடைய பேச்சு பெரிதும் உதவும் என்கிறார் சென்னையை அடுத்துள்ள காரனோடை பகுதியில் விவசாயம் செய்துவரும் முருகன்.

எல்லாமே உண்டு

இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்த சிறுதானியங்களான வரகு, சாமை, திணை, கேழ்வரகு, கம்பு ஆகியவற்றைக் கொண்டு சத்தும் சுவையுமான பாரம்பரிய உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டன. அத்துடன் மூலிகை பானங்கள், பணியாரங்கள், தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும் குறைந்த விலையில் விற்கப்பட்டன.

இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பழங்களையும் காய்கறிகளையும் மக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றதைப் பார்க்க முடிந்தது. வீட்டுத் தோட்டச் செய்முறை விளக்கத்தையும் மாடித் தோட்டம் செய்முறை விளக்கத்தையும் கேட்ட மக்கள், பாரம்பரிய விதைகளையும் மூலிகைகளையும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

நம் சந்ததிகளுக்கு

நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகர் கிஷோர், “நல்ல சாப்பாட்டை என் குழந்தை களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நினைப்புதான், நடிகனான என்னையும் இயற்கை விவசாயியாக மாற்றியது. இந்த விஷயத்தில் என்னைவிட என் மனைவி ரொம்பவும் தீவிரமாக இருப்பார். இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டதற்கு முக்கியக் காரணமே என் மனைவிதான். இயற்கை விவசாயத்தால் நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். அப்போது நம்முடைய சந்ததிகளுக்கு நல்ல விஷயங்களை விட்டுச் சென்ற திருப்தி கிடைக்கும்” என்றார் முத்தாய்ப்பாக.

படங்கள்: மோ.வினுப்ரியா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x