Last Updated : 02 May, 2015 03:00 PM

 

Published : 02 May 2015 03:00 PM
Last Updated : 02 May 2015 03:00 PM

ஏரின்றி அமையாது உலகு: வயல்களுக்குப் படையெடுக்கும் இளைஞர்கள்!

கடந்த முறை பார்த்தபடி, சமூகத்தைத் தாங்கிய வேளாண்மையை இன்றைய அரசுகள் கைவிட்டுவருவதால், அதை சமூகங்கள் தாங்க வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு 'சமூகம் தாங்கும் வேளாண்மை' என்று பெயர்.

இதில் நேரடியாக வேளாண்மையில் ஈடுபடாத குடும்பங்கள் மற்றத் தொழில்களில் இருப்பார்கள். இவர்களில் சிலர் சேர்ந்து, குறிப்பிட்ட ஓர் உழவருக்குச் சில உறுதிப்பாடுகளை அளிக்கின்றனர்.

அதாவது, உழவருடைய நிலத்தில் விளையும் விளைச்சலில் குறிப்பிட்ட அளவை அவர்கள் வாங்கிக்கொள்வார்கள். இதற்கான தொகையையும் முன்பே வழங்கிவிடுவார்கள். உழவர் ஒத்துக்கொண்டபடி தனது நிலத்தில் விளையும் விளைபொருளை, உறுதியாக அவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். இந்த இருதரப்பு ஒப்பந்தம் மீறப்படாதவரை, இது தொடரும்.

சமூகம் தாங்கும்

இந்த ஏற்பாட்டில் உழவருக்கு உறுதியான ஒரு சந்தை கிடைத்துவிடுகிறது. உழவரின் சாகுபடிச் செலவுக்கான முன்பணமும் கிடைத்து விடுகிறது. அதேநேரம், அந்த விளைபொருள் நஞ்சில்லா இயற்கை விளைபொருளாக இருப்பதை நுகர்வோர் அறிந்துகொள்ள முடிகிறது. அத்துடன் விளைபொருள், சந்தை விலையைவிட சற்றுக் குறைவாகவும் இருக்கிறது. உழவருக்கும் வெளிச்சந்தையைவிட சற்றுக் கூடுதலாகப் பணம் கிடைக்கும். இப்படிப்பட்ட முயற்சிகள் உலகம் முழுவதும் பரவிவருகின்றன.

குறிப்பாக ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தமிழகத்தில் ஆரோவில் போன்ற இடங்களிலும் இத்தகைய முயற்சிகள் நடந்து வருகின்றன. இதை ‘சமூகம் தாங்கும் வேளாண்மை' (Community supported agriculture) என்று குறிப்பிடுகின்றனர்.

உழைப்புப் பரிமாற்றம்

பல இடங்களில் உழைப்பை மட்டுமே பரிமாறிக்கொள்ளும் குழுக்களும் பரவிவருகின்றன. குறிப்பாக உலகளாவிய உயிர்மப் பண்ணை வாய்ப்புகள் (World Wide Opportunities on Organic Farms) என்ற இயக்கம் பரவிவருகிறது. ஒருவருடைய பண்ணையில் வேளாண்மை செய்ய வேண்டும். அந்த வேலைக்கு உணவும் தங்கும் இடமும் வழங்கப்படும்.

ஒருவர் தான் உழைப்பின் மூலம் கற்றுக்கொண்டதைத் தனது பண்ணையிலும் செய்துகொள்வார், மற்றவர்களுக்கும் சொல்லித் தருவார். இங்கு எதிலும் பணப் பரிமாற்றம் இருக்காது. ஒருவருடைய உழைப்பு நேரம் மட்டுமே கணக்கிடப்படும்.

இது ஏதோ ஒருவகையில் நமது பண்டைச் சமூகத்தின் கூறுகளை எதிரொளிப்பதாக உள்ளது, இல்லையா? ஏன் இந்த மாற்றம்?

பொன்னுலகம் எங்கிருக்கிறது?

மதுரை திருமங்கலம் அருகேயுள்ள என்னுடைய அடிசில் பண்ணைக்கும் பல மாநிலங்களில் இருந்தும், மற்ற நாடுகளில் இருந்தும் இம்மாதிரியான ஆர்வலர்கள் வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இருந்துவரும் இளைஞர்கள் கூறும் செய்தி என்னவென்றால், அந்த நாடுகளில் பெருமளவு வேலைவாய்ப்புகள் குறைந்துவருகின்றன என்பதுதான்.

அதிலும் ஐரோப்பாவின் ஒரு பகுதியான ஸ்காண்டிநேவிய நாடுகளில் படித்தவுடன் வேலை கிடைத்துக்கொண்டிருந்த நிலை மாறிவிட்டது. எனவே, அவர்கள் மாற்று வேலையைத் தேடுகின்றனர். ஆனால், நம்மவர்களோ அரதப் பழசான, காலாவதியான வளர்ச்சி கொள்(ளை)கைளைப் பற்றிக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

'ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஒரு பொன்னுலகம் இருக்கிறது, ஓடுங்கள்' என்று நம்முடைய இளைஞர்களை விரட்டிக்கொண்டிருக்கிறோம். என்றைக்கு மாறப் போகிறோம்?

கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x