Published : 11 Apr 2015 03:31 PM
Last Updated : 11 Apr 2015 03:31 PM

வறட்சியைத் தாங்கும் கோதுமை - சமவெளியிலும் நல்ல விளைச்சல்

தமிழகத்தின் மலைப் பகுதிகள் மட்டுமின்றி சமவெளிப் பகுதிகளிலும் பயிரிட ஏற்ற கோதுமை ரகத்தையும், வறட்சியைத் தாங்கும் கோதுமை ரகத்தையும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் 1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு கடந்த 60 ஆண்டுகளில் 20 புதிய கோதுமை ரகங்கள் உருவாக்கப்பட்டு, நாடு முழுவதும் பிரபலப்படுத்தப்பட்டுள்ளன. அதிக லாபமும் வறட்சியை எதிர்கொள்ளும் இரு புதிய கோதுமை ரகங்களை இந்நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ரகங்கள் குறித்து வெலிங்டன் இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி சிவசாமி பகிர்ந்துகொண்டார்:

சம்பா கோதுமை

தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல், சேர்வராயன் மலை, ஏற்காடு, ஜவ்வாது மலை, கொல்லிமலை பகுதிகளில், வெயில் காலம் மற்றும் குளிர் காலத்தில் இந்தக் கோதுமையைப் பயிரிடலாம். தற்போது, தேயிலை விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நீலகிரியில் சம்பா கோதுமை பயிரிடலாம். தமிழகத்தின் மற்ற மலைப் பகுதிகளிலும் சம்பா கோதுமை சாகுபடி மூலம் அதிக மகசூலுடன் கூடுதல் வருவாயைப் பெற முடியும்.

'எச்.டபிள்யு -1098' என்ற சம்பா ரகக் கோதுமைக்குச் சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. இந்தப் பயிருக்கு எந்தப் பூச்சிக்கொல்லியும் தெளிக்காமல், குறைந்தது ஐந்து முறை தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்தால் மட்டும் போதும். நீலகிரியைப் பொறுத்தமட்டில் மைனஸ் 15 டிகிரி செல்சியஸ்வரை உறைபனியையும் தாக்குப்பிடிக்கும் கோதுமை ரகம் இது. சாதாரணக் கோதுமைக்குச் சந்தையில் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ. 60 வரை கிடைக்கும் நிலையில், சம்பா கோதுமைக்கு ரூ.120 வரை கிடைக்கிறது. இயற்கை வேளாண் முறையில் இதை விளைவித்து விற்பனை செய்தால் கிலோவுக்கு ரூ. 200 வரை கிடைக்கும்.

41 ஆயிரம் கிலோ

மற்றொரு ரகமான 'கோ டபிள்யு 3' ரகத்தின் மூலம் ஒரு ஹெக்டேரில் சராசரியாக 41 ஆயிரம் கிலோ கோதுமை விளைச்சல் கிடைக்கும். இந்திய வேளாண் ஆராய்ச்சி மண்டல நிலையமும் கோவை வேளாண் பல்கலைக்கழகமும் இணைந்து, மலை மற்றும் மலைசார்ந்த பகுதிகளுக்காக ஐந்து ஆண்டு ஆராய்ச்சி நடத்திய பிறகு 'கோ டபிள்யு 3' என்ற புதிய கோதுமை ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

இதற்காகத் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும், கர்நாடகாவில் மைசூர், மாண்டியாவிலும் மத்திய அரசின் கோதுமை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இலவசச் செயல்முறைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரகம் குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரக்கூடியது. அதிக நுண்ணூட்டச் சத்துகள், இரும்பு, தாதுச் சத்து இந்த ரகத்தில் அதிகம். சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 41 ஆயிரம் கிலோ கோதுமை கிடைக்கும். தமிழகத் தட்பவெப்பநிலையைத் தாங்கி வளரக்கூடிய ரகம்.

சமவெளியில் பயிரிடப்படும் கோதுமையில், பொதுவாக ‘துரு' நோய் தாக்கலாம். ஆனால், இந்த ரகத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். வடகிழக்குப் பருவ மழை பொய்த்தால்கூடக் கோதுமை பயிரிட முடியும். தானியம் கிடைப்பது மட்டுமல்லாமல், மாடுகளுக்குத் தீவனமாகவும் அமையும். அதிக வருமானம் கிடைக்கும் என்பதால், மாற்றுப் பயிராகவும் பயன்படுத்தலாம். குளிர் காலப் பயிர் என்பதால் அக்டோபர் - நவம்பரில் விதைத்தவுடன் மார்ச் மாதம் அறுவடை செய்யலாம்.

- விஞ்ஞானி சிவசாமியைத் தொடர்புகொள்ள: 0423-2234796

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x