Published : 18 Apr 2015 12:10 PM
Last Updated : 18 Apr 2015 12:10 PM
பூவுலகில் வாழ்வதற்கான உரிமை யாருக்கெல்லாம் இருக்கிறது? மனிதர்களுக்கு மட்டும்தானா? நிச்சயம் இல்லை. மனிதர்கள் மட்டும் இந்த உலகில் தனித்து வாழ்ந்துவிட முடியாது. எறும்பு போன்ற சிற்றுயிர்கள் முதல் யானை, திமிங்கிலம் போன்ற பேருயிர்கள், தாவரங்கள்வரை அனைத்தும் இந்தப் பூமியில் ஆரோக்கியமாக வாழ்ந்தால்தான், மனிதர்களும் வாழ முடியும்.
ஆனால், நாம் தற்போது வாழ்ந்துவரும் காலத்தைப் பல்வேறு உயிரினங்கள் வேகமாக அழிந்துவரும் '6-வது பேரழிவுக் காலம்' என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், மனிதர்களான நாம்தான்.
பொலிவிய சிந்தனை
இதைத் தடுத்து நிறுத்த உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொலிவியாவின் ஏவோ மொராலெஸ் தலைமையிலான இடதுசாரி அரசு வித்தியாசமாகச் சிந்தித்தது.
சூரியக் குடும்பத்தில் வேறு எந்தக் கோளிலும் எந்த உயிரும் வாழ முடியாது. பூமி மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே உயிர்ப்புள்ள கோள். பூமியை அதற்குரிய உயிர்ப்புடன் பாதுகாக்கப் பொலிவிய அரசு ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. 'பூமித் தாயின் உரிமைகளுக்கான சட்டம்' என்ற அந்தச் சட்டம் 2010 டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. பூமியை, அதிலுள்ள ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் அடிப்படை.
"நமது தாயான பூமி புனிதமானது, செழிப்பானது, உயிர் தருவது. பூமித் தாய் தனது கருவறையில் சுமக்கும் அனைத்து உயிர்களுக்கும் உணவு தருகிறது, பாதுகாக்கவும் செய்கிறது. பிரபஞ்சத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் பூமி, பிரபஞ்சத்துடன் நிலைத்த சமநிலையைப் பராமரிக்கிறது, ஒத்திசைவுடன் இருக்கிறது" என்று உலகிலுள்ள அனைத்துக்கும் ஆதாரமாகப் பூமியை அந்தச் சட்டம் வரையறுக்கிறது.
இந்தச் சட்டத்தின்படி பூமித் தாயும், பூமியில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களும், சூழலியல் தொகுப்புகளும் உயிர்வாழ்வதற்கான வம்சாவழி உரிமையைப் பெற்றவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய அம்சங்கள்
பூமிக்கும் அதில் வாழும் உயிர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய உரிமைகள் என்ற அடிப்படையில், ‘பூமித் தாய்’ சட்டம் வலியுறுத்தும் முக்கிய அம்சங்கள்:
l இயற்கைச் செயல்பாடுகள் மற்றும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் அவற்றுக்கான வாழ்க்கை ஒழுங்கை தொடர்வதற்கான உரிமை.
l எந்த உயிரிலும் மரபணு மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருப்பதற்கான உரிமை.
l இயற்கையின் முக்கிய உயிர் சுழற்சிகள், இயற்கை நடைமுறைகளில் மனிதர்கள் தலையிட்டு மாற்றம் ஏற்படுத்தாமல் இருக்கும் உரிமை.
l தூய குடிநீருக்கான உரிமை.
l தூய காற்றுக்கான உரிமை.
l வாழ்வை அதற்குரிய சமநிலை லயத்தோடு வாழ்வதற்கான உரிமை.
l உயிர்களுக்கு ஆபத்தான கதிரியக்கம், சுற்றுச்சூழல் மாசு-நஞ்சால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை.
l உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தையும், சூழலியல் சமநிலையையும் குலைக்கும் எந்தப் பிரம்மாண்டக் கட்டுமானம், வளர்ச்சித் திட்டத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை.
l மேற்கண்ட அம்சங்கள் ஒவ்வொன்றும் மக்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்கின்றன.
இயற்கையுடன் இணக்கம்
இந்தச் சட்டத்தை நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டுமென்றால் நம்முடைய நுகர்வு முறை, அன்றாட பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறையில் தலைகீழ் மாற்றங்கள் தேவை. நாம் ஒவ்வொருவரும் இயற்கையைச் சீர்கெடுக்காத நடைமுறைகளுக்கு மாறுவதே அதற்கு நிரந்தரத் தீர்வு. அறஉணர்வுடனும் உள்மனம் சார்ந்த விழிப்புடனும் வாழ்க்கையை வாழ இந்தச் சட்டம் வழிகாட்டுகிறது.
உலகில் ஒரு மனிதன் நன்றாக வாழ்வது என்பது தனிப்பட்ட முறையில் ஒருவருக்குத் திருப்தியைத் தரும் அதேநேரம், ஒட்டுமொத்த மக்களுக்கும் மகிழ்ச்சியையும் தர வேண்டும் என்பதை இந்தச் சட்டம் சுட்டிக்காட்டுகிறது.
தொடக்கப் புள்ளி
அதேநேரம் பொலிவியாவின் பொருளாதாரம் பெருமளவு ஏற்றுமதியையே சார்ந்துள்ளது. அந்நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீதம் கனிமங்கள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்றவைதான். இவை சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தொழில்கள்தான் என்றாலும், இவற்றைச் சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக மாற்றும் முயற்சியின் தொடக்கமாக இந்தச் சட்டத்தைக் கொள்ளலாம்.
தாங்கள் வாழ்வதற்காகச் சுற்றுச்சூழலை சீர்கெடுப்பதை நிறுத்த வேண்டும். இயற்கையோடு, பூமியோடு இணக்கமாக வாழ வேண்டும் என்ற சிந்தனையை நடைமுறைப்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளி இந்தச் சட்டம். இந்தச் சட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது பொலிவியாவின் பொருளாதாரத்தையும் சமூகச் சூழ்நிலையையும் மேம்படுத்தும்.
அதேநேரம் தங்கள் நாட்டைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், ஒட்டுமொத்த உலகத்தின் நலனையும் கணக்கில் கொண்டு பொலிவியா இயற்றியுள்ள இந்தச் சட்டம், உலகளாவிய சிந்தனை என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT