Published : 25 Apr 2015 12:10 PM
Last Updated : 25 Apr 2015 12:10 PM
அவர் ஓர் ஆயுர்வேத மருத்துவர். 1985-ம் ஆண்டில் மருத்துவம் பார்த்துத் தன் வாழ்க்கையை நடத்தலாம் என ராஜஸ்தானுக்கு வந்தார். அவர் காலடி எடுத்து வைத்த கோபால்புரா கிராமம், அவருக்கு அதிர்ச்சியை அளித்தது. காரணம், அங்கு இருந்த மக்களில் பெரும்பாலோர் முதியவர்கள்.
அவர்களுடைய முகங்களில் இருந்த சுருக்கங்களைப் போலவே மாநிலத்தின் பெரும்பாலான நதிகளும் சுருங்கிக் காய்ந்து போயிருந்தன. அதனால் இளைஞர்கள் பலர், தங்களுடைய கிராமங்களைவிட்டு வெளியேறி இருந்தார்கள்.
பாலைவனத்தில் கருமேகம் திரண்டு வருவதை அதிசயித்துப் பார்க்கும் ஒருவரைப் போல அந்தக் கிராமத்துக்குப் புதிதாய் வந்திறங்கிய அவரிடம் "எதுக்கு இங்க வந்தே?" என்று ஒரு முதியவர் கேட்கிறார். "உங்களுக்கெல்லாம் மருத்துவம் பார்க்கத்தான்". முதியவர் சிரித்துக்கொண்ட அவருடைய கையைப் பிடித்துச் சொல்கிறார், "எங்களுக்கு முதலில் தண்ணீர் வேண்டுமே!"
அந்த ஆயுர்வேத மருத்துவரின் பிற்கால வாழ்க்கையை ஓடும் நதிபோல மாற்றுவதற்கான முதல் நனைப்பு, அந்த முதியவரின் கை வியர்வைத் துளியால் வழங்கப்பட்டது!
ஜமீன்தார் குடும்பத்தைத் துறந்தவர், ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 11 ஆயிரம் கிணறுகளை மீட்டெடுத்தவர், ஏழு நதிகளை உயிர்ப்பித்தவர், ராமன் மகசேசே விருது பெற்றவர்... எல்லாவற்றுக்கும் மேலாகச் சமீபத்தில் 'தண்ணீருக்கான நோபல் பரிசு' என்று அழைக்கப்படும் 'ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசு' விருதை வென்றவர் என அத்தனை பெருமைகளுக்கும் உரியவர் ராஜேந்திர சிங்.
'இந்தியாவின் தண்ணீர் மனிதர்' யார் என்று விநாடி வினா போட்டிகளில் கேட்டால், 'டக்'கென்று அவர் பெயரைக் குழந்தைகள் சொல்லிவிடுகிறார்கள். அவ்வளவு பிரபலம். ஆனாலும் பேச்சு, படு பாந்தம்!
சென்னையில் கடந்த 19-ம் தேதி 'பூவுலகின் நண்பர்கள்' ஏற்பாடு செய்திருந்த 'தண்ணீருக்கான பொது மேடை' பிரசாரத்தைத் தொடங்கி வைக்க வந்தவரைச் சந்தித்து உரையாடியதில் இருந்து:
'தருண் பாரத் சங்கம்' என்ற உங்களுடைய அமைப்பைத் தோற்றுவிப்பதற்கு முன்பு ஜெயபிரகாஷ் நாராயணின் அமைப்பில் இருந்திருக்கிறீர்கள். அந்த அனுபவங்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தின?
மக்கள் போராட்டத்தின் வலிமையை எனக்குக் காட்டியது ஜெயபிரகாஷ் நாராயண்தான். சில காலம் வினோபா பாவேயின் பூதானம் இயக்கத்திலும் இருந்தேன். அங்குதான் அறிவியலை ஆன்மிகத் தளத்தில் இருந்து பார்க்கத் தொடங்கினேன். அவற்றின் விளைவாகவே இன்றைய என் நடவடிக்கைகள், மரபுரீதியான அறிவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
கிராமங்களைக் களமாகக் கொண்டு போராடிவரும் நீங்கள், கிராம முன்னேற்றம் குறித்த காந்தி, ஜே.சி.குமரப்பா போன்றோரின் கருத்துகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கிராம மேம்பாட்டுக்குக் காந்தி, குமரப்பா போன்றோரின் யோசனைகள் நல்ல தீர்வை தருபவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இன்றைக்கு ஆட்சிக்கு வரும் அரசுகள் அந்தக் கொள்கைகளுக்குக் கொஞ்சம்கூடக் காது கொடுப்பதில்லை. மாறாக அதானி, அம்பானி ஆகியோர் சொல்வதைத்தானே அரசு வேதமாக நினைக்கிறது.
மத்தியில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 'கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் தேசிய ஆணையத்தில்' உறுப்பினராக இருந்து, பின்னர் 2012-ல் அதில் இருந்து விலகவும் செய்தீர்கள். தற்போது பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு கங்கை தூய்மைப்படுத்தும் திட்டத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறதே? நாட்டில் எத்தனையோ நதிகள் மாசுபட்டிருக்க, கங்கையை மட்டும் ஏன் தூய்மைப்படுத்த வேண்டும்?
வெறுமனே கங்கையை மட்டும் தூய்மைப்படுத்தும் திட்டமாக இது இருந்தால், இந்தத் திட்டம் தோல்வியடையும். கங்கையில் இருந்து உருவாகும் கிளை நதிகளைச் சுத்தப்படுத்தாமல், கங்கையைச் சுத்தப்படுத்துவது சாத்தியமில்லை. இன்றைக்குக் கங்கை, மாசுபட்ட நதி அல்ல. அது கழிவுநீர் செல்லும் பாதை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதுபோல நாட்டில் எத்தனையோ நதிகள் கவனத்தைப் பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. அப்படியிருக்கும்போது, ஹரியாணா அரசுக்கோ சரஸ்வதி நதியைத் தேடுவதுதான் முக்கிய வேலையாக இருக்கிறது. ஒருவேளை மறைந்து போன அந்த நதியின் பாதையை அரசு கண்டுபிடிக்கக்கூடச் செய்யலாம். ஆனால், அதனால் எந்தப் பயனாவது உண்டா?
கங்கையைச் சுத்தப்படுத்தும் திட்டத்தோடு, நதிகள் இணைப்பும் பேசப்பட்டு வருகிறதே?
எந்த ஒரு காலத்திலும், நதிகள் இணைப்பு சாத்தியமாகாத ஒரு விஷயம். அவ்வாறு இணைத்தால் சூழலியல், பொருளாதாரம், சமூகவியல் எனப் பல துறைகளில் பெரும் பாதிப்புகளையே அது ஏற்படுத்தும். உதாரணத்துக்கு, ஹரியாணா, பஞ்சா மாநிலங்களிடையே ஏற்படுத்தப்பட்ட சட்லஜ்-யமுனா நதிகள் இணைப்புத் திட்டத்தில் அந்த இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. ஆக, நதிகள் இணைப்பு என்பது மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் மோதலை அதிகப்படுத்தவே செய்யும்.
நீங்கள் விருது பெற்ற பிறகு நீர் மேலாண்மை பற்றி, உங்களிடம் அரசு ஏதேனும் கருத்து கேட்டிருக்கிறதா?
இல்லை. மேலும், என்னால் ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும். நதிகளை மீட்டெடுப்பதில் மட்டுமல்ல... எந்த ஒரு சமூக முன்னேற்ற நடவடிக்கையிலும், மக்களின் பங்களிப்பில்லாமல் மாற்றங்கள் சாத்தியப்படாது. என்னுடைய பணிகள் அனைத்துக்கும் மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய உடல் உழைப்பைத் தருகிறார்கள்.
வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்வது அரசின் முதல் கடமை. ஆனால் நிலங்கள், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீதான உரிமையை மக்களிடம் இருந்து அரசு பறித்து வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
விவசாயிகள் மீதும், மக்களின் மீதும் அக்கறையில்லாத ஓர் அரசிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? நாட்டில் 70 சதவீதத்துக்கு அதிகமான நதிகள் மரித்துவிட்டன. அதைப் பற்றி மத்திய அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட் போன்ற மலைப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் பருவநிலை மாற்றம் குறித்தும் அதற்கு அக்கறையில்லை. இந்த அரசின் ஒரே கவலை, ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பெருநிறுவன முதலாளிகளின் நலன் ஒன்று மட்டும்தான்.
இதோ, இப்போது அறிமுகப்படுத்தியிருக்கும் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள். விவசாயிகளின் நிலங்களுக்கு 4 மடங்கு விலையைத் தர தயாராக இருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால், நிலத்துக்கான சந்தை மதிப்பை அரசு எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, 'கைட் லைன்' மதிப்பை வைத்துக்கொண்டு இழப்பீட்டைக் கணக்கிட்டிருக்கிறது. ஆனால், 'கைட் லைன்' மதிப்பு சந்தை மதிப்பைவிட எப்போதும் குறைவாக இருக்கும். அதனால்தான், அரசு இவ்வளவு தைரியமாக இழப்பீடு குறித்துப் பேசுகிறது.
தொண்டு நிறுவனங்கள் மீது அரசு கடுமையாக நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளது? உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் வந்தனவா?
அரசிடமிருந்தோ அல்லது வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்தோ நாங்கள் ஒரு பைசாகூடப் பெறவில்லை. அதனால் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. மேலும், வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்தோ அல்லது அரசிடமிருந்தோ நிதியுதவியைப் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த நிதியை அவர்களே நேரடியாகக் கிராம மக்களுக்கு அளித்துவிட வேண்டும். அந்தத் தொகைக்கான வரவு, செலவுகளை மேற்பார்வையிடுகிற ஒரு கண்காணிப்பு மையமாகத் தொண்டு நிறுவனங்கள் இருக்க வேண்டும்.
ராஜஸ்தானில் 'தண்ணீர் நாடாளுமன்றம்' என்ற செயல்பாட்டை நடத்தி வருகிறீர்கள். அதன் செயல்பாடுகள் என்ன?
ரொம்ப முக்கியமாக, நீர் வளங்களைப் பாதுகாப்பதில் நமது இதயத்தையும், மூளையையும் எவ்வாறு இணைப்பது என்பதை இங்கே நிகழ்த்திக் காட்டுகிறோம். நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் அடிப்படை பணி. நீரை எவ்வளவு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது என்னும் சுய ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறோம். தவிர, மழை எந்த அளவுக்குப் பெய்கிறது என்பதைப் பொறுத்து எந்தப் பயிரைச் சாகுபடி செய்யலாம் என்பது குறித்தும் பரிந்துரை வழங்கி வருகிறோம்.
வரும் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி இங்கிலாந்தில் பேரணி ஒன்றை நடத்த இருக்கிறீர்களாமே. அது எதற்காக...
கடந்த 2003 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ், ராஜஸ்தானில் நாங்கள் பணியாற்றும் பகுதிகளுக்கு வந்து பார்வையிட்டார். எங்களுடைய பணி அவரை பெரிதும் கவர்ந்தது. சமீபத்தில் நான் விருது வாங்கச் சென்றிருந்தபோது தன்னைப் பார்க்க அழைப்பு விடுத்திருந்தார். அடுத்த சில நாட்கள் அங்கிருந்த அதிகாரிகளுடன் இந்தியாவில் நாங்கள் மேற்கொண்டுவரும் நதிகள் மீட்டெடுப்பு குறித்து விளக்கினேன். அதனால் கவரப்பட்ட அவர்கள், தேம்ஸ் நதியின் கிளை நதி ஒன்றில் நீர் மேலாண்மை குறித்து ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். அதன் முதல் பணியாகத்தான், அந்தக் கிளை நதி செல்லும் பாதையில் 'நீருக்கான அமைதிப் பேரணி'யை நடத்த உள்ளோம்.
தமிழகத்தில் மடிந்துபோன ஆறுகளை மீட்டெடுக்க உங்களுடைய யோசனைகள் என்ன?
அத்தகைய ஆற்றுப்படுகைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முதலில் அகற்ற வேண்டும். நிலத்தடி நீரை அதிகரிக்க வேண்டும். ஆற்றில் சாக்கடை கலந்துவிடாமல் இருக்கும் வகையில், கட்டமைப்புகளைத் திட்டமிட வேண்டும். இதெல்லாமே பழைய காலத்தில் இருந்ததுதான். அவற்றை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும்.
நதிகள் உயிர் பெற்றது எப்படி?
நதிகளை மீட்டெடுப்பதில் ராஜேந்திர சிங் கையாளும் முறை தனித்துவமானது. முழுக்க முழுக்க மரபார்ந்த நீர் மேலாண்மை முறைகளையே அவர் பின்பற்றுகிறார். அந்த முறைகளில் ஒன்று ஜோஹட்.
'இயற்கையாகவே அமைந்த தடுப்பணை'தான் ஜோஹட். மழையாகத் திரண்டுவரும் நீரைத் தேக்கும் வகையில், உயரமான மலைப் பகுதிகளில் 'குவிந்த நிலை '(convex) வடிவத்தில் ஓர் அணையைக் கட்டுகிறார்கள். உயரத்தில் இருந்து வேகமாக வரும் வெள்ள நீர், இந்த அணையில் தேங்கிப் பல கிளைகளாகப் பிரிகிறது. அதேபோலத் தாழ்வான மலைப் பகுதிகளில் 'குழி நிலை'(concave) வடிவத்தில் ஓர் அணையைக் கட்டுகிறார்கள். இதனால் குறைவான வேகத்தில் வரும் வெள்ள நீர் ஓரிடத்தில் சேமிக்கப்படுகிறது.
கம்பி, சிமென்ட் உள்ளிட்ட எந்த ஒரு செயற்கையான பொருளையும் பயன்படுத்தி இந்த அணைகள் கட்டப்படுவதில்லை. இயற்கையாகக் கிடைக்கும் கல், மண்ணே பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பல கிளைகளாகப் பிரிந்தும், ஒரே இடத்தில் சேமிக்கவும் படுகிற நீர், நிலப் பிளவுகளுக்குள்ளாகச் சென்று நிலத்தடி நீரை அதிகப்படுத்துகிறது. அதன் காரணமாக, கிணறுகளில் நீர் ஊறுகிறது. அவ்வாறே நதிகளும் மீண்டும் உயிர்பெற்றன.
இந்தப் பாரம்பரிய நீர் மேலாண்மை அறிவைக்கொண்டு ராஜஸ்தானில் ஆர்வாரி, ரூபரேல், சரசா, பகானி, ஜஹாஜ்வாலி, சாபி, மகேஸ்வரா ஆகிய ஏழு நதிகளை ராஜேந்திர சிங் உயிர்ப்பித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT