Last Updated : 25 Apr, 2015 12:25 PM

 

Published : 25 Apr 2015 12:25 PM
Last Updated : 25 Apr 2015 12:25 PM

வறட்சிப் பகுதியில் வெள்ளரி ஏற்றுமதி: ஆண்டுக்கு ரூ. 9 லட்சம் வருமானம்

வீட்டின் குடிநீர் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் ஒன்றரை எச்.பி. மோட்டார் மூலம் வறட்சிப் பகுதியில் வெள்ளரி சாகுபடி செய்து ஏற்றுமதி செய்துவருகிறார் புதுக்கோட்டை மாவட்ட விவசாயி.

தமிழகத்தின் வறட்சியான மாவட்டங்களில் ஒன்று புதுக் கோட்டை. விவசாயத்தையே முதன்மையாகக் கொண்டுள்ள இந்த மாவட்டத்தில், அதிகபட்சமாக ஆயிரம் அடிவரை ஆழ்துளையிட்டு, 20 எச்.பி. மோட்டார் பொருத்தித் தண்ணீர் எடுத்தே விவசாயம் செய்யப்படுகிறது.

ஆனாலும், ஒரு நாளைக்கு ஒரு ஏக்கருக்குக்கூடத் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். ஆனால், இதே மாவட்டத்தில் ஒன்றரை எச்.பி. மோட்டாரில் கிடைக்கும் தண்ணீரில் முப்போகமும் வெள்ளரி சாகுபடி நடந்து வருகிறது.

விவசாயம் திரும்பினேன்

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட வலியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எம்.முத்துகுமரேசன், இரண்டு ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்துவருகிறார். வெள்ளரி சாகுபடி அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டது:

பொறியியல் படித்துவிட்டுச் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தேன். வேலை பிடிக்காததால், விவசாயம் செய்ய முடிவு செய்து சொந்த ஊருக்குத் திரும்பினேன்.

இந்தப் பகுதிக்கு ஏற்றதாகவும் விற்பனை செய்ய எளிமையாகவும் இருக்கும் ஏற்றுமதி செய்யப்படும் வெள்ளரியை (நாட்டு வெள்ளரி அல்ல) தேர்வு செய்தேன்.

தோட்டக் கலைத் துறையின் ஆலோசனையின்படி 25 சதவீதம் மானியத்தில் காற்றோட்டத்துக்காகச் செங்குத்தான வலையுடன்கூடிய பசுமைக்குடில் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

மாறுபட்ட விதைப்பு

குடிலுக்குள் மண்ணில் விதைக்காமல் தென்னைநார்க் கம்போஸ்ட் நிரப்பப்பட்ட விதைப்பு பைகளில் மூன்று கன்றுகளை 35 செ.மீ. இடைவெளியில் விதைக்கிறேன். இதனால் மண் நஞ்சாவது தடுக்கப்படுகிறது.

ஆழ்துளைக் கிணற்றில் இருந்து 1.5 எச்.பி. மோட்டார் மூலம் தண்ணீரைத் தொட்டியில் சேகரித்து, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் செய்கிறேன்.

இதில் கோடை காலங்களில் நாளொன்றுக்குக் கன்றுக்கு 2 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். நீரில் கரையும் உரங்களை மட்டுமே பயன்படுத்துவதால் இடுபொருள் சிக்கனம் கடைபிடிக்கப்படுகிறது.

எந்தக் கட்டமைப்புகளையும் மாற்றாமல் செடிகளை மட்டும் அகற்றிவிட்டு ஆண்டுக்கு மூன்று முறை விதைத்துச் சாகுபடி செய்யலாம்.

ரூ. 9 லட்சம் லாபம்

ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் சுமார் 120 டன் காய்கள் விளைகின்றன. அதை ரூ.25 லட்சத்துக்கு விற்கலாம். அதில் ரூ.16 லட்சம் செலவு போக ரூ.9 லட்சம் கிடைக்கும். இந்தத் தொழில்நுட்பங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் தற்போது பயன்படுத்தப்பட்டு வந்தாலும், வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் பழமையானதுதான். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேறு பயிர்களையும் சாகுபடி செய்யலாம் என்கிறார்.

முத்துக்குமரேசனைத் தொடர்புகொள்ள: 99414 90079

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x