Published : 18 Apr 2015 10:58 AM
Last Updated : 18 Apr 2015 10:58 AM
காடுகளில் கிடைக்கும் மூலிகைச் செடிகள் மருந்துக்காக ஏற்றுமதி செய்யப்படும் அதேநேரம், அவற்றுடன் கிடைக்கும் களைச் செடிகளும் காசாகின்றன.
விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. விவசாயத்தில் பட்டப் படிப்பு முடித்த இவர், மூலிகைச் செடிகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்றில் 2 ஆண்டுகளுக்குப் பணிபுரிந்தார். பின்னர் அந்த வேலையைவிட்டு விலகித் தென்காசியில் சொந்தமாகத் தொழில் செய்ய ஆரம்பித்தார். பிறகு தன்னுடைய சொந்த மாவட்டமான விருதுநகரில் உள்ள அழகாபுரியில் மூலிகைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் தொழிலைத் தொடங்கினார்.
கூடுதல் வருமானம்
விவசாயம் மற்றும் கூலி வேலைகளை மட்டுமே நம்பி இருந்த மக்களுக்கு இந்தத் தொழில், வருமானம் ஈட்டக்கூடிய இன்னொரு வாய்ப்பாக அமைந்தது. சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் காலையில் வேறு வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில் மூலிகைச் செடிகளை இவருடைய நிறுவனத்துக்காகத் தேட ஆரம்பித்தனர். வேலை இல்லாத நாட்களில் சுற்றியுள்ள கிராமங்களின் தரிசு நிலங்களில் கிடைக்கும் மூலிகைச் செடிகளைச் சேகரிக்க ஆரம்பித்தனர். நெருஞ்சி, செந்தட்டி, ஆடாதோடா எனக் காடுகளில் கிடைக்கும் பல்வேறு மூலிகைச் செடிகளை இவருடைய நிறுவனத்திடம் கொடுத்துக் காசாக்கிச் செல்கின்றனர்.
அதேபோலத் துளசி, கீழாநெல்லி, செம்பருத்தி, மருதாணி, ஆவாரம்பூ, தூதுவளை, நித்திய கல்யாணி, அவுரி உள்ளிட்ட 150 வகை மூலிகைகள் பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விருதுநகர் மட்டுமின்றி மதுரை, திருச்சி, நாமக்கல் எனப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மூலிகைச் செடிகள் வரவழைக்கப்படுகின்றன. இந்த முயற்சி குறித்துக் கருப்பையா பகிர்ந்துகொண்டார்.
மதிப்பு கூட்டும் முயற்சி
“எந்தப் பொருளும் வீண் போகாது. காடுகளில் தானாக வளர்ந்து கிடக்கும் செந்தட்டி, நெருஞ்சி, ஆடாதோடா எனப் பல செடிகள் மூலிகைச் செடிகள்தான். ஒவ்வொரு காலத்துக்கு ஏற்ப, பல்வேறு மூலிகை செடிகள் கிடைக்கின்றன. இந்தச் செடிகளிலிருந்து எண்ணெய், சூரணம் உள்ளிட்ட மூலிகைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்கிறார் கருப்பையா.
“எங்கள் நிறுவனம் சார்பாகச் சேகரித்த பின், இந்தச் செடிகள் பல்வேறு மாவட்டங்களில் மூலிகை பொருட்கள் தயார் செய்யப்படும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகிறேன். இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன். இந்த மூலிகைச் செடிகளை மதிப்பு கூட்டுவதற்கான திட்டமும் இருக்கிறது” என்று கருப்பையா கூறுகிறார்.
கருப்பையா தொடர்புக்கு: 9842395441
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT