Published : 07 Mar 2015 01:16 PM
Last Updated : 07 Mar 2015 01:16 PM
‘‘வைல்ட்லைஃப் போட்டோ கிராஃபிங்கிறது எல்லோரும் நினைக்கிறது மாதிரி ஈசியான விஷயம் இல்ல. ஆனா, என்னோட ஒவ்வொரு படத்துலயும் ஒரு கதை சொல்லணுங்கிறது எனக்கு நானே வச்சுக்கும் சவால்", என்கிறார் ராதிகா ராமசாமி. அந்த வார்த்தைகளை நிரூபிக்கின்றன அவருடைய ஒவ்வொரு படமும்.
தேனி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர், இன்றைக்கு உலகப் பிரபலம். தொழில்முறை காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களில் சர்வதேச கவனம் பெற்றவர். மனதுக்குப் பிடித்த விஷயம் என்றால், சவாலான துறையிலும் சுயமாகக் கற்றுக்கொண்டு சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்.
பொழுதுபோக்காக எம்.பி.ஏ. படித்துவிட்டு மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்துவந்தார். திருமணத்துக்குப் பிறகு டெல்லிக்குக் குடிபெயர்ந்த அவர், 2003-ல் பொழுதுபோக்காகக் காட்டுயிர் ஒளிப்படங்கள் எடுக்க ஆரம்பித்தார். எல்லோரும் ஃபேஷன் போட்டோகிராஃபி, வெட்டிங் போட்டோகிராஃபி என்று சுற்றிக் கொண்டிருந்தபோது, வைல்ட்லைஃப் போட்டோகிராஃபியில் முழு நேரமாக ஈடுபட ஆரம்பித்தார்.
வைல்ட்லைஃப் படங்கள் பார்க்க அழகாக இருக்கும். ஆனால், அந்தப் படங்களை எடுப்பது சாதாரண விஷயமில்லை. ஒரு வாரம், பத்து நாளைக்குப் போன் தொடர்போ, நல்ல உணவோ இல்லாமல் வெயில், மழையில் அலைய வேண்டும். டிஜிட்டல் எஸ்.எல்.ஆர். கேமராக்கள் பிரபலம் ஆகாத அந்தக் காலத்தில், ஓரிடத்தில் நிலையாக இருக்காத பறவைகளைத் தேடித் தேடிப் படம் எடுக்க ஆரம்பித்தார்.
பறவை காதல்
"பறவைகள்தான் அவருடைய முதல் காதல்" என அவரின் கணவர் ஸ்ரீதரனாலேயே வர்ணிக்கப்பட்டவர். அந்த அளவுக்குப் பறவைகளை ரசிப்பதிலும், படமாகப் பதிவு செய்வதிலும் ராதிகாவுக்கு ஆர்வம் அதிகம். அவருடைய நடனமாடும் சாரஸ் பெருங்கொக்கின் படங்கள் புகழ்பெற்றவை.
தூர்தர்ஷனில் 2009-ல் பேட்டிக்கு அழைக்கப்பட்டபோது, இந்தியாவின் முதல் பெண் தொழில்முறை காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் அவர்தான் என்ற விஷயம் கவனத்துக்கு வந்தது. புகழ்பெற்ற கேமரா நிறுவனம் நிகானின் புரொஃபெஷ்னல் சர்வீசஸ் உறுப்பினர். இந்தக் கவுரவத்தை முதன்முறையாகப் பெற்ற ஃபிரீலேன்ஸர் அவர்தான்.
சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் ‘இன்ஸ்பயரிங் ஐகான்' விருதைப் பெறச் சமீபத்தில் சென்னை வந்திருந்தவருடன் கலந்துரையாடியதில் இருந்து...
சவால் பிடிக்கும்
"ஃபோட்டோகிராஃபி மட்டுமில்ல, எந்த விஷயம்னாலும் எனக்கு அதுல ஒரு சவால் இருக்கணும்" என்று பேச ஆரம்பித்தார்.
“சின்ன வயசிலிருந்தே இயற்கை மேல எனக்கு ஆர்வம் உண்டு. தேனில ஸ்கூல்ல படிக்கும்போதே ‘ஃபிரெண்ட் லைன்' இதழ்ல வரும் காட்டுயிர் ஒளிப்படக் கட்டுரைகளைப் பார்த்துப் பிரம்மிச்சிருக்கேன்.
கங்கையைச் சுத்தப்படுத்துற பிரசாரம் தொடர்பா, நான் எடுத்த படங்களைப் பார்த்துவிட்டுப் புகழ்பெற்ற போட்டோகிராஃபர் ரகு ராயின் சகோதரர் எஸ். பால் பாராட்டினார். அடுத்த வருஷமே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துல என்னைக் கூப்பிட்டு, அவங்களோட காலண்டருக்காக அவங்க வளாகத்தைப் படமெடுத்துத் தரும்படி கேட்டுக்கிட்டாங்க. இந்த விஷயங்கள் ரொம்ப உத்வேகம் தந்துச்சு.
தண்ணீர் சண்டை
நான் வைல்ட்லைஃப் போட்டோ கிராஃபரா மாறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த பரத்பூருக்கு ஒவ்வொரு சீசனுக்கும் போயிடுவேன். ‘டார்ட்டர்’னு இங்கிலீஷ்ல சொல்ற நீர்ப்பறவை பாம்புத்தாராவை எல்லோரும் பார்த்திருக்க மாட்டாங்க. வித்தியாசமான பறவை, இதோட கழுத்து நீளமா இருக்கும். தண்ணில நீந்திக்கிட்டே இரை தேடும். அப்போ தலையை மேலே தூக்கிட்டு நீந்தும். பார்க்கிறதுக்குத் தண்ணீருக்கு மேலே பாம்பு தலையை நீட்டியிருக்க மாதிரி இருக்கும். அதனால்தான் பாம்புத்தாரான்னு பேரு.
பறவைகளும் தங்களுக்குள்ள எல்லைய பராமரிக்கும்னு பலருக்கும் தெரியாது. ஒரு பாம்புத்தாரா இன்னொரு பாம்புத்தாராவின் எல்லைக்குள் நுழைஞ்சுட்டா, சண்டை போடும். அதை ‘வாட்டர் ஃபைட்'னு சொல்லலாம். இந்த அரிய காட்சியைப் பரத்பூர்ல பார்த்தேன். அதைப் படமெடுக்குறது ஈசியில்ல. எனக்கு அந்த அற்புதமான ஷாட் கிடைச்சது.
சமர்ப்பணம்
பரத்பூர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கிறதுக்குக் காரணம். வருஷம் முழுக்க அங்கே பறவைகளைப் பார்க்கலாம். ஒரு பாயிண்ட்டுக்கு போனா 30 பறவை வகைகளைப் பார்த்துடலாம். இந்தியாவுல இருக்கும் பாதிப் பறவைகளை அங்கே பார்க்க முடியும். குளிர்காலத்துல வெளிநாட்டு வலசை பறவைங்க வரும். லைட்டிங்கும் பேக்கிரவுண்டும் நல்லா இருக்கும்.
இப்போ பரத்பூர பத்தி ஒரு காபி டேபிள் புக் பண்றேன். அதுக்காக ஒவ்வொரு மாசமும் போய்ட்டு இருக்கேன். ஒவ்வொரு பயணத்திலும் குறிப்பு எடுத்து வைப்பேன். அதை விரிவுபடுத்தி எழுதிட்டு இருக்கேன். என்னுடைய அனுபவங்கள அதுல பதிவு செஞ்சிருக்கேன். இயற்கை எனக்குத் தந்த பொக்கிஷத்துக்கு, என்னுடைய சமர்ப்பணமா இந்தப் புத்தகத்தை நினைக்கிறேன்.
கண்ணுக்குள் நிற்கிறது
அதே மாதிரி நம்ம நாட்டுல காட்டுக்குப் போற ஒவ்வொருத்தருக்கும் புலியைப் பார்க்கணுங்கிற ஆசை கட்டாயமா இருக்கும். ஆனா, எல்லோருக்கும் அந்த ஆசை நிறைவேறாது. மகாராஷ்டிர மாநிலத்துல இருக்கிற தடோபா சரணாலயத்துல 3 குட்டிப் புலிகள் விளையாடிக்கிட்டிருக்கிறதப் பார்க்குற வாய்ப்பு கிடைச்சது. சுட்டிக் குழந்தைகளைப் போல மூணும் ஒண்ணு மேல ஒண்ணு விழுந்து விளையாடிக்கிட்டிருந்ததைப் பார்த்தப்ப, என் மனசுலயும் அந்தக் குதூகலம் தொத்திக்கிச்சு.
அதுங்களோட அம்மா இரை தேடப் போயிருந்துச்சு. அப்போ திடீர்னு ஒரு சலசலப்பு. எதிர் பக்கத்துலேர்ந்து வந்த அப்பா புலி, அந்தக் குட்டிப் புலிகளைக் கடந்து போச்சு. வழக்கமாக அப்பா புலி, குட்டிகளோட இருக்கிறதில்ல. அன்னைக்கும், அது குட்டிகளைக் கண்டுக்கல. அப்பாவையும் குட்டிகளையும் ஒரே ஃபிரேமில் எடுத்த அந்த ஷாட், ரொம்ப ஆச்சரியமானது. கண்ணுக்குள்ளேயே நிக்குதுன்னு சொல்வோமில்ல, அப்படி ஒரு ஷாட்.” என்று சிலாகிக்கிறார் ராதிகா.
அவருடைய படங்களைப் போலவே, அவர் விவரிக்கும் ஒவ்வொரு சம்பவமும் ஒரு கதையைச் சொல்கின்றன.
தன் போட்டோக்களை எந்த விருதுக்கும் அனுப்புவதில்லை என்கிறார் ராதிகா ராமசாமி. இவருடைய ஃபோட்டோக்களின் பேஸ்புக் பக்கத்தை 9.25 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்கிறார்கள்.
இதைவிட பெரிய விருது வேறெதுவும் தேவையில்லை. இத்துறைக்கு வந்து 11 ஆண்டுகளில் தனக்குக் கிடைத்த மிகப் பெரிய சொத்து இதுதான் என்று புளகாங்கிதம் அடைகிறார். அர்த்தமுள்ள பெருமிதம்தான்.
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ஆக வேண்டுமா?
ராதிகா ராமசாமி காட்டுயிர் ஒளிப்படக் கலையை சுயமாகக் கற்றுக்கொண்டவர். இன்றைக்கு நாடு முழுவதும் காட்டுயிர் ஒளிப்படப் பயிலரங்குகளை நடத்திவருகிறார். காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராவதற்கு அவர் தரும் டிப்ஸ்:
புதியதை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் தாகமும் முதல் தேவை. யாரிடமும் உதவியாளராக இருப்பதால் மட்டும், காட்டுயிர் ஒளிப்படக் கலையை முழுமையாகக் கற்றுக்கொண்டுவிட முடியாது. ஒரு இயற்கையாளராக இருக்க வேண்டும். வாழ்க்கை முழுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
உயிரினங்கள், காட்டுச் சூழல், தட்பவெப்ப நிலை எனப் பல விஷயங்களைப் பற்றிய அடிப்படை அறிவு தேவை. எதையும் எதிர்கொள்ளும் தைரியம் வேண்டும், எடை மிகுந்த கேமரா துணைக்கருவிகளைச் சுமந்து செல்லும் உடல் வலு வேண்டும்.
உயிரினங்களிடம் 'இங்கே வாங்க, இப்படி நில்லுங்க, சிரிங்க' என்று நிச்சயமா சொல்ல முடியாது. புலி போன்ற பெரிய உயிரினங்களைப் பார்ப்போமா, இல்லையா என்றுகூடத் தெரியாது. எந்தப் படம் கிடைக்கும், எப்படிக் கிடைக்கும் என்று தெரியாது. பொறுமை ரொம்ப அத்தியாவசியம்.
இதற்கெல்லாம் மேலாக ஆப்பிரிக்காவைப் போல இந்தியக் காடுகளில் திறந்தவெளிப் பகுதிகள் அதிகமில்லை. இந்தியக் காடுகள் புதர் நிறைந்தவை. எல்லா இடங்களிலும் நல்ல வெளிச்சம் இருக்காது. சப்ஜெக்ட்டை சரியான வெளிச்சத்தில் படமெடுப்பது சவால்தான்.
அதேநேரம் காட்டுயிர் ஒளிப்படக் கலையில், எடுக்கப்படும் ஒவ்வொரு படமும் ஓர் ஆவணம்தான். ஏதோ ஒரு வகையில் அது ஆராய்ச்சிக்கோ, விழிப்புணர்வுக்கோ பயன்படும். அந்த வகையில் நம்முடைய பங்களிப்பு மிக மிக முக்கியமானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT